எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர வேண்டும்! ரவிகரன் கோரிக்கை

ravikaran_003ஈழத்தமிழரின் நீண்ட கால உரிமைப்போராட்டத்தின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தொடர்பு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நிலவி வருகிறது.

அரசியல் ,கலாச்சாரம், வர்த்தகம் என்று அனைத்து பரிமாணங்களிலும் இவை வியாபித்துக் காணப்பட்டன.

ஈழத்து, தமிழக மக்களிடையே உள்ள தற்போதைய கலாச்சாரக் கட்டமைப்புக்களில் உள்ள ஒற்றுமையும் , பழமையை எடுத்தியம்பும் ஆதாரங்களும் இதற்குச் சாட்சியாகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது தமிழ்க்குடி , வரலாற்றில் என்றுமில்லாத ஒரு நெருக்கடியை இன்று சந்தித்துள்ளது. மன்னராட்சி முறை ஒழிந்து ஜனநாயக ஒழுங்கில் உலகம் பயணிக்கும் இன்றைய காலகட்டத்தில் உலகின் பல அரசுகளின் உதவியுடன் எம் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பானது மனித வரலாற்றின் கசப்பான பதிவாகிவிட்டது.

காலம் காலமாக நாம் இன்னலுறும் போதெல்லாம் அருகில் ஓடி வந்து கை கொடுத்த தமிழ்நாடு கூட, எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது வேதனைக்குரிய விடயமாகும்.

இம் மண்ணில் தமிழின இருப்பே , நீண்ட கால அடிப்படையில் உலகில் தமிழின் இருப்பை உறுதி செய்யும் என்பது மறுக்கமுடியாத இயற்கை நியதி. ஆக மொத்தத்தில், உலகத்தமிழினம் ஒரு முக்கியமான இடர்பாட்டை இத் தசாப்தத்தில் முகம் கொடுத்துள்ளது என்பதுவே உண்மையாகும்.

அத்துடன் இறுதிப் போருக்குப் பின்னர் எம்மிடம் இருந்த பேரம் பேசும் ஆற்றலும் அகற்றப்பட்டு விட்டது. பலமுள்ளவன் பக்கமே உலகம் சாயும் என்பது உலக நியதி.

பலம் இல்லாத நிலையில் எம்மை பேரம் பேசும் தரப்பாக உலகம் பார்க்கவில்லை என்பது தான் உண்மை. எம் தொடர்பிலான தீர்மானங்களை நிறைவேற்றும் போதும் சரி, எமக்கான தீர்வுகளை வரையறுக்கும் போதும் சரி, எம் மக்களின் விருப்பம் என்னவென்று ஆராய்ந்து யாரும் முடிவெடுக்கவில்லை.

இது நோயாளியின் விருப்பிற்கு மாறான மாற்று மருந்தைத் திணிப்பது போன்றே உள்ளது. எம் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை எம் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே உலக ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையிலும் இயற்கையின் நியதிகளின் அடிப்படையிலும் நீதியானதாகும்.

எம்முடைய பேரம் பேசும் பலம் அகற்றப்பட்ட பின்னர் , தீர்வை நோக்கிய பாதையில் கொடுக்கப்படும் கால அவகாசங்களில் தொடரும் கட்டமைக்கபட்ட இன அழிப்பால் எம் மக்கள் மிகவும் துவண்டு போயுள்ளனர். கைதுகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள், நில, வள அபகரிப்பு , ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் என்று அநீதி தலைவிரித்தாடுகிறது. சர்வதேசம் வழக்கம் போல அமைதியாக இருக்கிறது.

இந்நிலையில், வருகின்ற இந்திய பாராளுமன்ற தேர்தலை எம் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். உலக தமிழ்க் குடியின் மிகப் பெரும் சதவீதத்தைக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு இத் தேர்தலில், நேர்மையான பதிலை வழங்கும் என்று எம் மக்கள் காத்திருக்கின்றனர்.

முழு உலகமுமே எதிர்பார்க்கும் இத் தேர்தலில், தமிழ் நாட்டு மக்கள் எமக்கான ஜனநாயக முறையிலான பேரம் பேசும் கட்டமைப்பை நிறுவவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எம் மக்கள் விரும்பும் தீர்வை அடைவதற்காக, எமக்காக பேசவல்லவர்களை தமிழ்நாட்டு மக்கள் உருவாக்கித் தருவார்கள் என்றே எம் மக்கள் நம்புகிறார்கள். என்றும் இல்லாதளவுக்கு இத் தேர்தலை எதிர்நோக்கி எம் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். என்றார்.

TAGS: