அன்வார்: ஆமாம், நான் சிறை செல்வது உறுதி

anwar 1ஏற்கனவே  இட்டுக்கட்டப்பட்ட  குற்றச்சாட்டுகளுக்காக  ஆறாண்டுகள்  சிறையில்  இருந்ததாகக்  கூறும்  அன்வார்  இப்ராகிம்,  இப்போது  2-வது  குதப்புணர்ச்சி  வழக்கிலும்- இதுவும்  தம்  அரசியல்   எதிரிகளால்  ஜோடிக்கப்பட்ட ஒரு  வழக்குத்தான்  என்கிறார்-  தாம்  சிறைக்கு  அனுப்பபடும்  சாத்தியம்  நிறைய  இருப்பதாகக்  கூறுகிறார்.

முறையீட்டு  நீதிமன்றத்தில்  குற்றவாளிதான்  என்று  அளிக்கப்பட்ட  தீர்ப்பை  எதிர்த்து,  அன்வார்  கூட்டரசு  நீதிமன்றத்தில்  மேல்முறையீடு  செய்திருக்கிறார்.

கூட்டரசு  நீதிமன்றம்  அவரது  மேல்முறையீட்டைத்  தள்ளுபடி  செய்யுமானால்  அன்வார்  மீண்டும்  ஐந்தாண்டுச்  சிறை  செல்ல  நேரிடும்.

கூட்டரசு  நீதிமன்றத்திலும் தமக்கு  நியாயமான  விசாரணை  கிடைக்கப்போவதில்லை  என்று  அனைத்துலக  தாளிகையான  த  டிப்ளமேட்-டுக்கு  வழங்கிய  நேர்காணலில்  பிகேஆர்  நடப்பில்  தலைவரான  அன்வார்  கூறினார்.  தம்மை  மீண்டும்  சிறைக்கு  அனுப்புவது  என்பது  ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  முடிவுதான்  என்றாரவர்.

“விசாரணையை (முறையீட்டு  நீதிமன்றத்தில்) எவ்வளவு  விரைவாக  நடத்தினார்கள்.  மருத்துவ  ஆவணங்களைப்  பெறுவதற்கு  சில  நாள்கள்  அவகாசம்  அளிப்பதற்குக்கூட  மறுத்தார்கள்.

“(முறையீட்டு  நீதிமன்ற) தீர்ப்பே  குறைபாடுடையது  என்பது  தெளிவு.  ஏனென்றால்,  திரித்துக்கூறப்பட்ட  உண்மைகளை  எல்லாம்  அவர்கள்  கவனத்தில்  கொள்ளவில்லை. நீதிபதிகள்   அவர்களின்  அரசியல்  எஜமானர்கள்  சொல்படி  நடப்பது  தெளிவாகத்  தெரிகிறது.

“எனவே, நியாயம்  கிடைக்கும்  என்பதில்  எனக்கு  அதிக  நம்பிக்கை இல்லை. அது  முடிந்த  முடிவு”, என்றாரவர்.