சீக்கிரம், மெல்ல மெதுவான போது..

Child2சுதா சின்னசாமி.  அவசரமான வாழ்க்கை. அன்றாடம் பம்பரம் போல் சுழலும் சூழல். காலையில் எழுந்ததிலிருந்து வேலை, பணி, கடமைகள். இதில் எங்காவது செல்வது என்றால் கூட அரக்கப் பறந்து, பிறரையும் அவசரப் படுத்தும் நிலை. என் மகளுக்கு இப்போது தான் நான்கு வயதாகிறது.

காலையில் எழுந்ததிலிருந்து உறங்கும் வரை அவள் கேட்கும் வாசகங்கள் பெரும்பாலும், “சீக்கிரம் பாலைக் குடி, சீக்கிரம் குளி, சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் தூங்கு”. என்னை அறியாமலேயே இந்த “சீக்கிரம்” என்ற வார்த்தை வீட்டில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதில், வெளியே செல்லும் போதும் “சீக்கிரம் நட”, “சீக்கிரம் காரில் ஏறு”, “சீக்கிரம் பள்ளிக்குச் செல்ல வேண்டும்”, “சீக்கிரம், இசை டீச்சர் திட்டுவார்”. அவள் மனதில் இந்த “சீக்கிரம்” என்ற சொல் பதிந்தாற் போல், ஒரு நாள் தனக்குப் பிடித்த பஞ்சு மிட்டாயை ஆவலுடன் வாங்கி அமைதியாக கையில் பிடித்து ரசித்தபடி, என்னைப் பார்த்தாள். “அம்மா, சீக்கிரம் சாப்பிட்டு விடுகிறேன்” என்றதும் என் மனம் சற்றே கனத்தது.

சில நாட்களுக்கு, எதற்காக இப்படி அவசரப்படுகிறோம் என்று நிதானித்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில் அந்த சின்னஞ்சிறு இதயம், கண்கள், இவ்வளவு பெரிய உலகை ரசித்து கொண்டிருக்கிறது. சிறு சிறு அசைவுகளையும் உற்று நோக்குகிறது. ஒவ்வொரு நாள் வெளியில் நடக்கும் போதெல்லாம் ஓடி ஓடி  சின்னஞ்சிறு மலர்களை child antஎனக்காகப் பறிக்கும் அவள் கரங்கள்; வீட்டில் சிறு எறும்பு, ஈக்கள் வந்து விட்டால், அதனைத் தொடரும் அவள் பாதங்கள்; “அம்மா, எறும்புக்குத் தன் வீட்டு பாதை தெரியவில்லை” எனும் அவள் குரல்; வானத்தில் வண்ண வில் வந்து விட்டதும், ஒவ்வொரு அறைக்குள் ஓயாமல் ஓடி ஓடி ரசித்து மகிழும் அவள் உள்ளம்.

இப்படி எத்தனையோ சிறிய சிறிய (நம் பார்வையில் மட்டும்) ஆசைகளும் ஆவல்களும் நிறைந்த நம் இளந்தளிர்களுக்கு நாம் விதைக்கும் விதிமுறை “சீக்கிரம்”.

அவர்களை அவசரப்படுத்தி அவர்களின் எண்ண அலைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோமா? உலகை தன் சாயலில், தன்னிச்சையில், தன் பாணியில், தன் பாதையில் (at their own pace, space and leisure) அனுபவிக்கும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்ல விளைகிறோம்? “சீக்கிரம் செய்!”

நடுத்தர வயதில் நமக்குள்ள பல பிரச்சனைகளில், பொறுப்புகளில், குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுகிறோம் அல்லவா? ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்காக, நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்காக ஓயாமல் வேலை செய்கிறோம். பணம் கிடைப்பதால்! குடும்பப் பொறுப்புகளைச் செய்கிறோம். கடமை உணர்ச்சி என்பதால்! சில சமயங்களில் காலம் தவறிதான் சில விசயங்களை உணர்கிறோம்.

பருவம்வரை வளர்த்து விட்ட பெற்றோரை அன்று நாம் மறந்து கடந்து விட்டுவிடுகிறோம். “அஞ்சு நிமிசம் பொறுத்துக்கோ, சாதம் தயாராகிவிடும்” என்று சொன்ன தாயிடம் முறைத்துக்கொண்டு வெளியில் சாப்பிட கிளம்பிய தருணங்கள். ஆனால், காலங்கடந்ததும் தாயின் ஒரு பிடி உணவுக்காக ஏங்கி கிடப்பது, வைரமுத்து சொன்னது போல வெறுச்சோடிய வேதாந்தங்களாகத்தான் மிஞ்சி நிற்கிறது. 

என்றாவது அத்திப்பூத்தது போல அப்பா திட்டிவிட்டால், கடுங்கோபங்கொண்டு, நண்பர்களிடம் முறையிட்டு துடுக்கிட்டிருந்தோம். ஆனால், நம் திறமையை கறந்து, பணத்தை சம்பளமாய் தரும் முதலாளி திட்டினால், சூடு சுரணை  இல்லாத கல்லாய், தன்மானம் அற்று நின்று நிதானமாய் வாங்கிக்கொண்டு, வருடம் முழுக்க முக பூசனையும் செய்கிறோம்!

child 1இப்படி, நம்மோடுவாழும் ஒவ்வொரு ஜீவன்களுக்கும், ஏன் மிருகங்களுக்கும் கூட உணர்வுகள், எண்ணங்கள், ஏக்கங்கள், இருப்பது மறுக்கப்பட வேண்டியதா?  மறக்கப்பட வேண்டியதா? பல தருணங்களில் இந்த உணர்வுகளை நாம் வார்த்தைகளில் வெளிகொணர்வதும் கிடையாது (we take everything for granted). உயிரற்ற பொருள்களையும், பரிசு சின்னங்களையும் அன்பின் அடையாளமாய் கொடுப்பதில் என்னபயன்? உயிருள்ள மனிதர்களை, (மிருகங்களையும் தான்) அவர் தம் உணர்வுகளை மதித்து, மரியாதை கொடுத்து, அவர்களின் சின்னச்சின்ன ஆசைகளுக்கு இடமளித்து மகிழ்ச்சியைத் தருவதில் தாழ்ந்துவிடுவோமா?

இன்று நானும் என் மகளின் பார்வையில், சாயலில்வாழ்க்கையை, இயற்கையை, மெல்ல மெதுவாக, நின்று நிதானித்து அவள் கரம்பிடித்து நடந்து செல்கிறேன்…