தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை – கி. சீலதாஸ்

najib_tamil_school5பகுதி 1. கல்வியின்  முக்கியத்துவத்தை  உணராத  காலமும்  இல்லை, நாடும்  இல்லை, தீர்க்கத்தரிசிகளும் இல்லை, தத்துவஞானிகளும்  இல்லை, முனிவர்களும்  ரிஷிகளும்  இல்லை.  ஆனால்  பல்லாயிரம்  நூற்றாண்டுகளாக  கல்வியானது  எல்லா  மக்களுக்கும்  கிடைக்கவில்லை  என்பது  வரலாறு  கூறும்  உண்மை.

ஐக்கிய  நாடுகளின்  மக்கள்  தொகை  கணக்கெடுப்பின்படி  அக்டோபர், 2011வரை  மக்களின்  எண்ணிக்கை  ஏழாயிரம்  கோடியைத்  தாண்டிவிட்டாலும்,  இன்றையக்  காலக்கட்டத்தில்  அந்த எண்ணிக்கையில்  கணிசமான  உயர்வைத்தான்  நாம் எதிர்பார்க்க  வேண்டும்.

கல்வியின்மையை  ஒழிக்கவேண்டுமென்ற  நோக்குடன்  செயல்பட்டவர்களின்  எண்ணிக்கை  கணக்கிலடங்கா.  மனிதனின்  சுதந்திரத்துக்கு  கல்வி  இன்றியமையாததாகும். கல்வி இருந்தால்தான் அவன் (அல்லது  அவள்)  சிந்திக்கும்  ஆற்றலைப்  பெறமுடியும். இங்கும்  ஓர்  எச்சரிக்கையைக்  கவனத்தில்  கொண்டிருக்க  வேண்டும்.

எப்படிப்பட்டக்  கல்வி

education1கல்வி என்றால்  அது  எப்படிப்பட்டக்  கல்வியாக  இருக்கவேண்டும்? பொதுவாக  எழுதப் படிக்கத்  தெரியாதவரைக்  கல்வியறிவு  இல்லாதவர்  என்று  சொல்லிவிடுகிறோம். கல்வி  என்றால்  எழுதுவது, வாசிப்பது, பேசுவது  என்பனப் போன்ற  மூன்று  தகுதிகளைக்  கொண்டவரைப்  படித்தவர்  என்று  நாம்  கூறமுடியும்.  அது  இயல்பே.

ஆனால்,  கல்வி  என்கின்ற  சொல்  வெறும்  எழுதுவது, வாசிப்பது, பேசுவது என்ற  மூன்று  தகுதிகளைக்  கொண்டது என்றால்  அது  ஏற்புடையதாக  இருப்பினும்  உயர்மட்டத்துக்குப்  போகவேண்டும்  என்ற எண்ணம்  துளிர்  விடும்போது  அது  போதாது  என்ற  நிலை  நம்மை  வெறித்துப்  பார்ப்பதை  உணரலாம்.  எனவே,  மலாயா (பிறகு  மலேசிய) அரசமைப்புச்  சட்டத்திற்கான  வடிவமைப்புப்  பேச்சுவார்த்தை  நடந்தபோது  கல்விக்கு  முக்கியத்துவம்  வழங்கவேண்டுமென்பதில்  மிகுந்த விவேகமும்  வேட்கையும்  இருந்ததை காணமுடிகிறது.

அரசமைப்புச் சட்டம் ஷரத்து 12

நமது  அரசமைப்புச்  சட்டத்தின்  12ஆம்  ஷரத்தைக்  கூர்ந்து  கவனித்தால்  அது  கல்விக்கு  முக்கியத்துவம்  தரும்  அடிப்படை  ஆதாரம் என்பது  வெள்ளிடைமலை.

இன, மத, மரபு வழி  போன்ற  காரணங்களைக்  காட்டி  எந்த  மலேசிய  குடிமகனுக்கும்   கல்வி  கிடைப்பதில்  பிரித்துப்  பார்க்கும்  தராதரம்  இருக்காது  என்பதை  தெளிவுப்படுத்துகிறது  அரசமைப்புச்  சட்டத்தின்  12 ஆம்  ஷரத்து.  அரசமைப்புச்  சட்டத்தில்  இடம்  பெறும்  இந்த  கருத்தாழமிக்க  சட்ட  நிபந்தனைச்  சொற்றொடர்  கல்விக்கு  முக்கியத்துவம்  தருகிறது.  இங்கே  கவனத்தில்  கொள்ள  வேண்டிய  மற்றுமொரு  கருத்து  என்னவெனில்  அந்த  ஷரத்து  இரண்டு  வகையான  கல்வி  முறையைச்  சுட்டிக்காட்டுகிறது.

ஒன்று  பொது  கல்வி – அதாவது  சமயச்  சார்பற்றக்  கல்வி,  மற்றது  சமயச்  சார்புடைய  இஸ்லாமியக்  கல்வியும்  மற்ற  சமயத்தினரின்  கல்வியுமாகும்.  இஸ்லாமியக்  கல்வியை  மாநில  அரசுகளும்  நடுவர்  அரசும்  தங்களின்  செலவில்  நிர்வகிக்கும், ஆனால்  இஸ்லாமியரல்லாதாரின்  கல்வியை  அந்தச்  சமயத்தினரின்  இயக்கங்களே  ஏற்று  நடத்தலாம். அதற்கு  எந்தத்  தடையுமில்லை. இந்த  12ஆம் ஷரத்தைக்  குறித்து  நான்  எழுதிய  கட்டுரை மயில்  இதழில்  மார்ச் 2014  வெளிவந்திருக்கிறது.

அரசமைப்புச் சட்டம் ஷரத்து 152(1) 

education 2சமயச்  சாயலை  ஒருபக்கம்  ஒதுக்கிவைத்துவிட்டு  பொதுவான  கல்விமுறையைப்  பற்றி  அரசமைப்புச்  சட்டத்தை  வடித்தவர்கள்  அதன்  முக்கியத்துவத்தை  உணர்ந்திருந்தார்கள். அதை  பிற்காலச்  சந்ததியினருக்கு  உணர்த்தும்  தரத்தைக்  கொண்டிருந்தது  எனலாம்.  இதன்  முக்கியத்துவத்தை  வலியுறுத்தும்  அல்லது  மறு உறுதி  செய்யும்  பொருட்டு  விளக்கும் தன்மையைக்  கொண்டிருக்கிறது  152(1) ஷரத்து.

இந்த  ஷரத்தின்படி  தேசிய  மொழி  மலாய்  மொழி,  அதன்  எழுத்துவடிவத்தை  நாடாளுமன்றம்  நிர்ணயிக்கும்  என்பதோடு  நின்றுவிடாமல்  பிறமொழியைக்  கற்பிக்கவும்,  பயிலவும்  யாதொரு  தடையுமிருக்காது.  ஆனால்  அம்மொழிகள்அதிகார  காரணங்களுக்காகப்  பயன்படுத்த  வழிகோலாது.

பிறமொழிகளைக்  கற்பிக்கவும்  பயிலவும்  இந்த 152(1) ஆம்  ஷரத்து  அனுமதிக்கிறது. கல்வி  பெறுவதில்  எந்தத்  தடங்களும்  இருக்காது  என்று  உணர்த்தும்  12(1) ஷரத்தை இணைத்துப்  படிக்கும்போது   ஓர்  உண்மை  தெளிவாகிறது.  அதாவது, எப்படிப்பட்ட  கல்வியாக  இருப்பினும்  அது  எந்த  மொழியில்  இருந்தாலும்  அதைப்  பயிலுவதை  ஆதரிக்கும்  ஓர்  உயர்ந்த  நோக்கத்தைத்தான்  காணமுடிகிறது. நோக்கம்  உயர்வானதாக  இருப்பினும்  நடைமுறையில்  அது  ஆக்கப்பூர்வமாகச்  செயல்படுத்தப்படுகிறதா என்பதை  கவனிக்க  வேண்டும்.

ஜனநாயகத்தில்  ஏற்றத்தாழ்வுக்கு    இடமில்லை  என்றபோதிலும்  பொருளாதாரத்தில், வாழ்க்கையில்,  கல்வி தரத்தில்  பின்னடைவு  கொண்டோரை  முன்னுக்குக்  கொண்டுவரும்  முயற்சியில்  அரசு  கரிசனம்  காட்டவேண்டும். அவ்வாறு  பின்னடைவு  நிலையில்  வாழ்வோரின்  நலனைக்  கருத்தில்  கொண்டு  அரசு  செயல்பட  வேண்டுமென்பதை  வலியுறுத்தும்  வகையில்  அரசமைப்புச்  சட்டம்  அமைக்கப்படுவது  உண்டு.

இந்திய  அரசமைப்புச்  சட்டம்  இதற்கு  முன்னோடியாக  விளங்குகிறது.  அதாவது  வாழ்க்கையில், கல்வியில், பொருளாதாரத்தில்  பின்தள்ளப்பட்டவர்களை  உயர்த்திவிடும்  நோக்கத்துக்கு  வலிவு  தரும்  வகையில்  பல  சலுகைகளை அரசமைப்புச்  சட்டமே  வழங்குகிறது.

அதுபோலவே, மலேசிய  அரசமைப்புச்  சட்டம்  மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு  சலுகைகளை   உறுதிப்படுத்துகிறது.  அவற்றின்  அமலாக்கத்திற்கு  ஏதுவாக  அரசு  பல  சட்ட  நடவடிக்கைகளை   மேற்கொண்டுள்ளது.  இது  எல்லா  இனத்தவர்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஓர்  உடன்பாடு.  ஆனால்,  கல்வியில்  வேறுபாட்டை  ஆதரிப்பதும்  வளர்த்துவதும்  அதை  ஓர்  அரசியல்  கொள்கையாக  அமலாக்குவதும்   ஜனநாயகக்  கோட்பாட்டுக்கு  முரணானதாகவே  கருதப்படும். கல்வியில்  பாகுபாடு  இருக்காது  என்று  அழுத்தம்  திருத்தமாக  சொல்லிவிட்டு  சில  கல்விக்கூடங்களில்  ஒரே  இனத்தவரைமட்டும்  அனுமதிக்கும்  முறையானது  ஜனநாயகக்  கோட்பாட்டுக்கு  எதிரானது  மட்டுமல்ல  அரசமைப்புச்  சட்டத்துக்கும்  முரணானதாகும்.

சமயக்  கல்வியை  இதில்  சேர்க்கக்  கூடாது. ஒரே  தேசிய  உணர்வை  வளர்க்க  இப்படிப்பட்ட  போக்கு  உதவாது. ஆனால்,  அரசியலில்  எதுவும்  நடக்கும், எதற்கும்  காரணத்தைக்  காட்டலாம்  என்ற  வழக்கம்  வேரூன்றிவிட்ட  நிலையில்  சமுதாயத்தில்  தாழ்ந்த  நிலையில்  கிடக்கும்  சமூகத்தைக்  தூக்கிவிட  இப்படிப்பட்ட  அணுகுமுறை  தேவை  என்று  சொல்லும்போது  அது  ஏற்புடையதே.  அதே சமயத்தில்  பிற  சமூகங்களிலும்  பின்தங்கியவர்கள்  இருக்கமாட்டர்கள்  என்று  நினைப்பதும்  ஏற்றுக்கொள்ள முடியாத  ஒரு  நிலைப்பாடாகும்.

மலேசியாவில்  மலாய்  மொழி  தேசிய  மொழியாகும், ஆங்கிலம்  தொடர்பு  மொழியாகவும்  சீனம், தமிழ்  மற்றும்  பல  மொழிகள்  மலேசியர்களால்   பேசப்படும்   மொழிகளும்  உள்ளன.  இவையாவும்  நாட்டில்  கற்பிக்கப்படுவதிலும், பேசுவதிலும்  யாதொரு  தடையுமில்லை.

சீனம், தமிழ்  ஆகிய  மொழிகள்  மலாய்  மொழியோடு  சமஅந்தஸ்து  கொண்டிராவிட்டாலும்  அவை  பதுகாக்கப்பட  வேண்டிய  மொழிகள், மதிக்கப்பட  வேண்டிய  மொழிகள், வளர்க்கப்பட  வேண்டிய  மொழிகள் என்பதில்  மாற்று  கருத்து  இருந்ததாகச்  சொல்லமுடியாது.  காரணம்,  சீனம், தமிழ்  ஆகிய  மொழிகள்  கற்பிக்கப்படுவதற்கான  செலுவுகளை  நடுவர்  அரசு  ஏற்றுக்கொண்டு  செயல்பட்டுவருகிறது.

இடைநிலைப்பள்ளியில்  தமிழ்

தமிழ்  பள்ளிப்படிப்பு  ஆறாம்  வகுப்போடு  முடிந்து விடுகிறது.  மேலும்  இடைநிலைப்பள்ளிக்குப்  போவதற்கான  வசதிகள்  குறைவாகவே  காணப்படுகின்றன. குறிப்பாக  ஒரு  தமிழ்  மாணவன்  ஆறாம்  வகுப்புக்குப்  பிறகு இடைநிலைப்பள்ளி  படிப்பை  தேசிய  மாதிரி  இடைநிலைப்பள்ளிகளில்  தொடரவேண்டுமானால்  அங்கே  குறைந்தது  பதினைந்து  மாணவர்கள்  தமிழ்  பயில  பதிவுசெய்து  கொண்டால்தான்  இடைநிலைத்  தமிழ்  கற்பிக்கப்படும்.

Tamil 2ndary school - MPSஇந்த  மாணவர்  எண்ணிக்கை  கைகூடாவிட்டால்  தமிழ்  கல்வி  தொடர்வதற்கான மேல்  வசதி  ஏதும்  கிடையாது. இந்தக்  குறைந்தபட்ச  எண்ணிக்கையைப்  பொருட்படுத்தாமல்  அதற்குக்  குறைவான  மாணவர்கள்  இருப்பினும்  தமிழ்  ஆசிரியர்கள்  தமிழ்  கற்பிப்பதும்  போற்ற வேண்டிய  செயலாகும்.

சீன  இடைநிலைப்பள்ளிகள்  காலம்காலமாக  இருந்து வந்ததன்  காரணமாக  இன்றும்  இயங்குகின்றன.  சீன  சமூகத்தின்  மொழி ஆர்வம்  அந்தப்  பள்ளிகள்  இயங்க  உதவுகிறது.  அந்தப்  பள்ளிகளுக்காக  சீனர்கள்  பணத்தை  வாரிவாரி  வழங்குகிறார்கள்.  இதுவரை  தமிழ்  இடைநிலைப் பள்ளி  இல்லாதது  ஒரு  பெரும்  குறை  எனின்  அதுவும்  நியாயமான  முறையீடுதான்.  இந்த  அவலநிலை குறித்து  அரசின்  நிலைப்பாடு  உற்சாகம்  தருவதாக  இல்லை.  மலாயா  பல்கலைக்கழகத்தில்   தமிழ்ப்  பிரிவு  உண்டு.  நல்ல  அடிப்படைத்  தமிழறிவு  இருந்தால்  பல்கலைக்கழகப்  படிப்பு  உய்வு  தரும். [தொடரும்]. 

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்பவர்கள்  தயவு செய்து செம்பருத்தி.காம் அகப்பக்கத்தை மறக்காமல் குறிப்ப்டவும்.