மலேசிய கலை உலகத்தில் உள்ள போலி அறிவுவாதம் – ம.நவீன்

n1மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஏதோ மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் போல ஊடகங்களால் முன்னிறுத்தப்படுவார்கள். இவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரே வழி இவர்களின் படைப்புகளைக் கட்டுடைத்துப்பார்ப்பதுதான்.

முதலில் கலை வெளிபாடு குறித்து என்னிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒரு காலண்டர் படத்துக்கும் – ஓவியத்துக்குமான பேதம் அது. காலண்டரில் பிரமாண்டமான ஓவியங்கள் அச்சாக்கப்பட்டு அழகாக இருந்தாலும் அவை கலையாவதில்லை. காரணம் அது மறுபடியும் மறுபடியும் ஒரே அச்சில் உற்பத்தியாகிறது.

அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அச்சின் தரம், அது உருவான காகிதம் போன்றவற்றுக்காக மட்டுமே காலண்டர் ஓவியத்தைப் பாராட்ட முடியும். ஆனால் அதை கலையாக ஏற்க முடியாது.  ஓவியம் அவ்வாறானதல்ல.

மலேசியாவில் பெரும்பாலும் கலை என்ற பெயரில் உருவாவது காலண்டர் ஓவியங்கள்தான். இலக்கியம், மேடை நாடகம், இசை, திரைப்படம் என அனைத்திலும் தமிழகத்தின் நகல்களைச் செய்யவே இங்குள்ள கலைஞர்கள் மெனக்கெடுகிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள். மூட்டை மூட்டையாக ஆக்கங்களை மக்களிடம் கொட்டுகிறார்கள்.

பின்னர் நாட்டின் மிக முக்கியமான கலைஞர்களாக உலாவத்தொடங்குகிறார்கள். ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய தங்கள் பிம்பங்களை விற்று ஏனைய நாள்களில் பிழைப்பை ஓட்டிவிடுகிறார்கள். கடைசிவரை கலை குறித்தும் அதன் தேவை குறித்தும் தெரியாமலேயே தங்கள் பெயரை மலேசிய கலைப்பட்டியலில் பதித்துவிடுகிறார்கள்.

எவ்வித அரசியலும் பேசாமல்பொழுது போக்குக்காக உருவாக்கப்படும் ஆக்கங்களைக்கூட நாம் பெரிதாக இங்கு கவனப்படுத்த வேண்டியதில்லை. புரியும்படி சொல்வதென்றால் சூர்யா, அஜித், விக்ரம் போன்றவர்களின் திரைப்படங்களினால் சமூகத்திற்குப் பெரிதாக ஆபத்தில்லை. அவை ரசிகனின் மலிவான ரசனைக்குத் தீனி போட உருவாக்கப்படும் திண்பண்டங்கள். ஆனால், கமலஹாசன், பாலச்சந்தர், பாலா போன்ற இயக்குனர்களின்  அரசியல் பேச முயலும் திரைப்படங்களே பெரும்பாலும் ஆபத்தானவையாக உள்ளன.

n3அவை தீவிரமாகக் கலையை முன்னிறுத்துவதுபோல தோன்றினாலும்  வலது கையால் அதிகார மையத்தை இறுக்கப்பிடித்துக்கொண்டு இடது கையால் மார்க்ஸிய கொடியை ஆட்டுபவை. சிறுபான்மையினரை மலினப்படுத்துபவை. ஒற்றைப் பரிணாமத்தில் நியாயங்களை ஆராய்பவை. சமூக மாற்றங்கள் மேட்டுக்குடிகளினால் மட்டுமே சாத்தியம் என்றும் மாற்றங்களை நிகழ்த்த சமூகத்துக்கு வெளியிலிருந்து சூப்பர்மேன் ஒருவன் புதிதாக முளைத்து வரவேண்டும் என நாசுக்காக நஞ்சை விதைப்பவை.

மலேசிய கலை உலகையும் இப்படித்தான் அணுக வேண்டியுள்ளது. மலேசியாவில் அதிகம் கொண்டாடப்படும் இலக்கியவாதிகளை, மேடை நாடகக் கலைஞர்களை, திரைப்படங்களை, பட்டியலிட்டுப் பார்த்தாலே இந்த அபத்தம் அப்பட்டமாகப் புலப்படும்.

சில உதாரணங்கள்

மலேசியாவில் மிக முக்கியமான நகைச்சுவை படங்களாக கானாவின் ஆக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவரது நகைச்சுவை சிடிகள் பொருளாதார ரீதியில் வெற்றியும் அடைவதாகவும் சொல்லப்படுகிறது. நானறிந்து கானாவின் நகைச்சுவையை விரும்பி பார்ப்பவர்களும் அதிகமே உள்ளனர்.

இரட்டை அர்த்த வசனங்கள், பெண் தன்மையுடன் ஆணை கிண்டல் செய்தல், அவனை நெருங்கிச்செல்வதை அருவருப்பாகக் காட்டுதல், உடல் பருமனான பெண்ணையும் உயரம் குறைந்த மனிதனையும் நக்கலடித்தல் என்பதைத் தவிர கானாவின் படங்களில் நகைச்சுவை என ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. நகைச்சுவை எனும் கலை வடிவம் அடுத்தவர் இயலாமையை கேலி செய்வதற்காகப் பயன்பட்டு அது பொருளாதார ரீதியில் வெற்றியும் பெரும் அவலம் மலேசியாவில் வேறு இன மக்களிடம் நிகழுமா என்பது சந்தேகமே.

இலக்கியத்தைப் பார்த்தாலும் இதே நிலைதான். பெரிய பெரிய இலக்கிய மாநாடுகளை நடத்துபவர்களுக்கு தேவைப்படுவது மீடியோக்கர்தான் (mediocre). மீடியோக்கர்களால் நடைமுறை சூழலுக்கு எந்த ஆபத்தும் இருக்காது. அதிகாரத்திடம் மிக எளிதாக இணங்கிப் போய்விடுவார்கள். ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சிந்திக்கக்கூட முடியாது. சிந்திக்க முடிந்தாலும் அதனால் தங்கள் சமூக அந்தஸ்துக்குப் பங்கம் விளையும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

இது போன்றவர்களிடம் திடமான இலக்கிய போக்கும் அரசியல் பார்வையும் இருப்பது சாத்தியமும் அல்ல. ஆனால், சமூகத்தில் இவர்களுக்கும் இவர்களின் ஆக்கங்களுக்கும் ஒரு மதிப்பிருக்கும். அதிகாரத்தின் கைப்பாவையாக இருப்பதால் விருதுகள் இவர்களைத் தேடிவரும். தொடக்கத்திலிருந்தே நான் ரெ.கார்த்திகேசுவை மீடியோக்கர் எனதான் சொல்லி வருகிறேன்.

மலேசியாவில் எளிதாக உதாரணம் காட்டக்கூடிய இலக்கிய ஆளுமையும் அவர்தான். சாதியம், மேட்டுக்குடி மனம், அதிகாரத்திடம் ஒத்துப்போகும் மனநிலை என மலிந்து கிடக்கும் ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகள் தமிழகம் மட்டுமல்லாமல் தமிழ் வாழும் இதர நாடுகளிலும் அறியப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. இறுக்கமான கலாச்சார பிடிப்புள்ள ஒரு சமூகத்தில் மாற்றுப்பார்வையற்ற மேம்போக்கான இலக்கியப் பிரதிகள் எவ்வாறு ஒரு சமூகத்தின் ஆகச் சிறந்த படைப்புகளாக அமைப்புகள் மூலம் முன்னிறுத்தப்படுகின்றன என்பதற்கு மலேசியாவில் ரெ.காவின் நாவல்களைதான் உடனடி உதாரணங்களாகக் காட்ட முடிகிறது.

மேடை நாடகத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான். எஸ்.தி.பாலா இன்று நாட்டின் முக்கிய நவீன மேடை நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார். அவரது பல  நாடகங்களை மேடையில் பார்க்க சகிக்க முடியாத அளவுக்கு மொண்ணையான வசனங்களையே தாங்கி நிற்கின்றன. எளிய ரசிகன் ஒருவனுக்கு அந்த வசனங்கள் போதுமானவை.

navin1அவன் அதில் திருப்தி அடைவான். காரணம் அந்த வசனங்கள்தான் அவன் வாழ்வில் காலகாலமாக கேட்டுப்பழகியவை. தான் ஊகித்த கதையும்,  அதற்கான நியாயங்களையும் மேடையில் பார்க்கும்போது ஒரு ரசிகனுக்கு உவப்பாகவே இருக்கிறது. காரணம் அந்த நியாயங்கள் பொது நியாயங்கள். ஏற்கனவே அதிகாரத்தாலும் சட்டங்களாலும் சொல்லப்பட்டு மனதில் ஏற்றி வைக்கப்பட்ட நியாயங்கள். சமூகத்தின் சமநிலையை பாதிக்காமல் மேலோட்டமாக வாழ்வை ஆராயும் இது போன்ற ஆக்கங்கள் மக்களை எளிதில் சென்று சேர்கின்றன. அவை ஏதோ புரட்சியாகவும் கருதப்படுகிறது. உண்மையில் அவை சமூகத்தின்மீது அதிகாரத்தால் திணிக்கப்பட்ட நியாயங்களை வேறு மாதிரி சொல்லிச் செல்கின்றன அவ்வளவே.

திரைப்படங்களின் நிலை இன்னும் மோசம். மிக அண்மையில் வெளிவந்த ‘மெல்ல திறந்தது கதவு’ படத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனப்பிறழ்வுக்குள்ளாகிறாள். அவளை வல்லுறவு செய்தவன் இறுதியில் கைது செய்யப்படுகிறான். இந்த ஒற்றை வரிக் கதையை ஜவ்வுபோல இழுத்துச் சொல்லியிருப்பார்கள். மலேசிய ரசிகன் ஒருவனுக்கு இப்படம் புதுமையாக இருக்கும்.

n4காரணம் அதன் காட்சி அமைப்பு மற்றும் கதையின் திருப்பம் எல்லாம் சுவாரசியத்தைக் கூட்டலாம். ஆனால், வல்லுறவு செய்தவன் ஒரே நேரத்தில் இரு பெண்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துகிறான். அவனது நியாயம் என்ன? அவனுக்கும் இந்தச் சமூகத்துக்கும் என்ன சம்பந்தம். குற்றம் – தண்டனை, அன்பு – தியாகம், காதல் – கல்யாணம், நன்மை – வெகுமதி என்ற இரட்டை நிலை பார்வையைத் தவிர்த்து நமது திரைப்பட இயக்குனர்களிடம் வாழ்வு குறித்த மேலும் தேடல்களும் கேள்விகளும் இல்லாதது பெரிய வெறுமையையே ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஆவணப்படத்தின் பெரும்பாலான முயற்சிகள் வருந்தத்தக்க வகையில் உள்ளன. அண்மைய உதாரணமாக ப.சந்திரகாந்தம் பதிவு செய்த ’200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்’ என்ற ஆவணப்படத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு வலதுசாரி அரசு ஊழியன் எதைப் பதிவு செய்வானோ அதேபோல எழுத்தாளரான அமரர் சந்திரகாந்தமும் சிந்திப்பதுதான் வருந்தத்தக்கது.

எழுத்தாளர் அ.பாண்டியன் வல்லின அகப்பக்கத்தில் (http://www.vallinam.com.my/issue52/essay1.html) இந்த ஆவணப்படம் குறுத்து இவ்வாறு கருத்துரைக்கிறார்.

“வரலாற்று நிகழ்வுகளைக் காட்டும் நிழற்படங்களும் ஆண்டு நிரலான நிகழ்வு தொகுப்பும் ஒரு போதும் வரலாற்று மீள்பார்வைக்குப் போதுமானவை அல்ல. அதோடு ஒரு நாட்டின் அல்லது இனத்தின் வரலாற்றை கூற விழையும் போது கூறியது கூறல் பெருங்குறையாகாது. ஆனால் கூற வேண்டியதைக் கூறாதது பெரும் குற்றமாகும். ப.சந்திரகாந்தம் இந்த ஆவணப்படத்தில் கூறவேண்டியதைக் கூறாததோடு பல காலம் கூறப்பட்டுவரும் தகவல்களிலும் உண்மை நிலை காணும் ஆய்வு சிந்தனை இல்லாமல் பொதுபுத்திக்கு உட்பட்டதை மட்டுமே நம்பியிருக்கிறார்.”

மலேசியத் தமிழர்கள் என்றவுடன் தோட்டப்புறத்தில் வேட்டி கட்டிக்கொண்டு பால்மரம் சீவி இப்போது பட்டணத்தில் சொகுசு கார்களில் போபவர்களை மட்டுமே ஊடகங்கள் நமக்குக் காட்டி  பழகிவிட்டன. இன்னமும் தனித்த வாழ்வியலைக் கொண்டிருக்கும் தமிழ் மீனவர்கள், ஒரு காலத்தில் தீண்டாமை திணிக்கப்பட்ட நகரசுத்தி தொழிலாளர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் இழக்கும் மலாக்கா செட்டிகள் , இந்திய திருநங்கைகள், இந்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என சமூகத்தின் இன்னொரு முகத்தை எந்த ஆவணப்படமும் காட்ட முன் வருவதே இல்லை.

உழைக்க மறுப்பதும், சமூகத்தின் மீது ஆழமான கவனம் இல்லாததும், எதை செய்தால் எளிதில் அரசாங்கத்திடம் மானியம் பெறலாம் என்ற முன் திட்டமுமே இந்த மேம்போக்கான நிலைக்குக் காரணமாக உள்ளது.

இறுதியாக

n5இவ்வாறு ஆற்றுகை (performance) சார்ந்த பெரும்பாலான ஆக்கங்கள் மலேசிய நாட்டில் அதிகார பின்னணியுடனும் பொது புத்தியிலிருந்து நீங்காத புனிதத்துடனும் இருப்பதே மலேசியத் தமிழ் கலை உலகின் பலவீனம். இந்நிலையில் ‘பறை’ இரண்டாம் இதழில் மலேசியா, சிங்கை, இந்தியா, இலங்கை என வாழும் பல்வேறு ஆளுமைகளை அறிமுகம் செய்வதன் மூலம் அவர்களுடனான உரையாடல்களைப் பகிர்வதன் மூலமும் இந்நாட்டில் ஓரளவேனும் கலைத்துறையில் மாற்றம் வரும் என நம்புகிறோம்.

இக்கட்டுரை குறித்த மாற்றுக்கருத்துடையவர்கள் தங்கள் கருத்துகளை எழுத்துமூலமாக எங்களிடம் தெரிவிப்பதன் மூலமே உரையாடல்கள் சாத்தியமாகின்றன. உரையாடல்களே மாற்றங்களுக்குத் தொடக்கமாகிறது.

நன்றி: வல்லினம் இணையத்தளம், கட்டுரை யுஆர்எல்:   http://vallinam.com.my/version2/?p=1218