ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது!

un sri lankaஇலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள  இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவை சந்திப்பதற்கு விடுத்த அழைப்பை, இலங்கை நிராகரித்துள்ளது..

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, சன்ட்ரா பெய்டாஸூக்கும் ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கும் இடையில் சந்திப்பை ஒழுங்கு செய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேட்டிருந்தார்.

எனினும், ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை, இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அதிகாரபூர்வமாகச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு, கடந்த 5ம் திகதி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எழுதிய கடிதம் ஒன்றிலேயே, சன்ட்ரா பெய்டாஸை, ரவிநாத் ஆரியசிங்க சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால். இந்த விசாரணையைப் புறக்கணிக்க  இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்திப்புத் தேவையற்றது என்று அரசாங்கம் கருதுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

TAGS: