காஸா பிரச்சினை போல ஈழத் தமிழர் விவகாரத்தையும் விவாதிக்க வேண்டும்: ராஜ்யசபாவில் அதிமுக, திமுக கோரிக்கை

rajya_sabha_1இஸ்ரேலின் காஸா மீதான இனப்படுகொலையை விவாதித்தது போல இலங்கையின் ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி ஆகியோர் வலியுறுத்தினர்.

பலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான அப்பாவிகள் எண்ணிக்கை 600ஐ தாண்டியது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமானது.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த வாரமே இதுபற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடப்பதாக இருந்தது. அப்போதிலிருந்தே சுமார் 470 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர். இப்போதும் பலஸ்தீனத்தின் அப்பாவிப் பொதுமக்கள் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே மாதிரியான கொடூரங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த போது இந்த அவை மௌனப் பார்வையாளராகவே இருந்தது. இப்போது நல்லவேளையாக அதுபோல் இல்லாமல்… இந்த அவை இது பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற முன் வந்திருப்பது நல்ல அம்சமாகத் தெரிகிறது.

இஸ்ரேல் தன்னைக் காத்துக் கொள்வதற்கு எல்லா உரிமையும் பெற்றிருக்கிறது. அதே நேரம் அடுத்த மண்ணின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களைக் கொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இந்த சபையில் கண்டனத்துடன் பதிவு செய்கிறேன்.

இதே போன்றதொரு அப்பாவிகள் மீதான கொடூரத் தாக்குதல் இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போது இந்த அவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் மட்டுமே எதிர்ப்புக்குரல் எழுப்பினோம். அப்போது இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு என்றெல்லாம் சொல்லி தமிழர்களின் நியாயங்களை இந்த அவை உணர மறுத்தது.

இந்தியா உலகத் தலைமைக்கான இடத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாக நாம் பெருமிதப்பட்டுக் கொள்கிறோம். உலகைத் தலைமை கொள்வதற்கு பொருளாதார வளர்ச்சியும், பல நாடுகளுடனான வணிகமும் மட்டுமே போதமானதல்ல.

உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் குறிப்பாக மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சினைகளில் நாம் திடமான, காத்திரமான ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகத்தைத் தலைமை கொள்வதற்கான இந்தியாவின் தார்மீகப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பலஸ்தீனத்தின் மீதானத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்த பிரச்சினையில் நீதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இந்த விஷயத்தில் முன்மாதிரியாக இருந்து பலஸ்தீனத்தில் அமைதியை நாட்டும் முயற்சிகளை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும்.

உலகிலேயே பலஸ்தீனத்தை தனி நாடாக முதன் முதலில் 1988-ல் அங்கீகரித்த நாடுகளில் ஒன்று இந்தியா. 1996-ல் இந்தியா முதன்முதலில் பலஸ்தீனத்தின் காஸாவில் தனது தூதரக அலுவலகத்தைத் திறந்தது. பாலஸ்தீனத்தின் சுய சார்ப்புக்காகவும், சுதந்திரத்துக்காகவும் ஐ.நா.வின் 53-வது பொது அவையில் இந்தியா தீர்மானம் இயற்றத் துணை நின்று அதற்கு ஆதரவாக வாக்களித்தது.

நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இதேபோல நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இந்த அவையில் ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

இதேபோல் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், காஸா பிரச்சினை போல ஈழத் தமிழர் பிரச்சினையை இந்த சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.

TAGS: