வேலையில்லா பட்டதாரி – திரை விமர்சனம்

velaiyilla-pattathari-01-350x262தனுஷ் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார். படிப்புக்கேற்ற வேலையில் சேரும் விருப்பத்துடன் இருக்கும் அவர், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத பல வேலைவாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார்.

தனுஷ் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதால் அவரது தந்தை சமுத்திரகனி இவரை அடிக்கடி திட்டித்தீர்க்கிறார். தாய் சரண்யாவோ, தனுஷ் மீது பாசம் காட்டி வருகிறார். தனுஷின் தம்பி அதிக சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறார். அதையும் காரணம் காட்டி தனுஷை மேலும் திட்டித் தீர்க்கிறார் சமுத்திரகனி.

இந்நிலையில் தனுஷ் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் நாயகி அமலாபால் குடியேறுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒருநாள் சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சமுத்திரகனியும், தனுஷின் தம்பியும் ஊருக்கு செல்ல நேரிடுகிறது. ஆதலால் அம்மாவை பார்த்துக்கொள்ளும்படி தனுஷிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் தனுஷ், அமலாபாலுடன் வெளியில் சென்றுவிடுகிறார். சரண்யாவின் உடல்நிலை மோசமடைந்து இறந்து விடுகிறார்.

இறந்த சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. ஒரு செல்வந்தரின் பெண் சுரபிக்கு சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. இதற்கு நன்றிக்கடன் செலுத்திய அந்த பெண், தனுஷிற்கு இன்ஜினியரிங் வேலை வாங்கி கொடுக்கிறார்.

முதலில் மறுக்கும் அவர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்ததால் ஏற்றுக்கொள்கிறார். சுரபியின் மூலம் தன் அம்மாவை பார்க்கும் தனுஷ், தனக்கு கிடைத்த வேலையையும் மனப்பூர்வமாக செய்ய புறப்படுகிறார். அந்த வேலையில்தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.

தனுஷ் தனக்கு கொடுத்த அரசு ஒப்பந்தப்பணியை செய்வதற்காக ஒரு பகுதிக்கு செல்லும் போது மற்றொரு ஒப்பந்ததாரரான வில்லன் அமிதேஷ் பிரச்சினை செய்கிறார். இதனால் இருவருக்கும் பகை ஏற்படுகிறது. தனுசை அந்த இடத்தில் வீடு கட்டவிடாமல் தடுக்கிறார் அமிதேஷ்.

இறுதியில் தனுஷ் வில்லனின் எதிர்ப்பை மீறி பில்டிங் கட்டினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சமீபகாலமாக வெளிவந்த தனுஷின் படங்களில் அதிகமான சீரியஸ் காட்சிகளை பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு ஜாலியான தனுசை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வேலை வெட்டி இல்லாத ஜாலியான இளைஞன் கேரக்டரில் நடிக்க தனுஷுக்கு சொல்லித்தர தேவையே இல்லை.

மிகவும் இயல்பான நடிப்பு. அசால்ட்டான டயலாக் டெலிவரி, அதிரடி பஞ்ச் வசனம், அப்பா திட்டும்போது காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் காட்சிகள் என தனுஷ் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். தனுஷ் வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக இருக்கிறது.

கதாநாயகி அமலா பாலுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. பாடல், காதல், என்று வந்து போனாலும் நினைவில் நிற்கிறார். தனுஷ் மீது காதலாக மாறும் உணர்வை முகத்தில் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனுஷை கண்டிக்கும் காட்சிகளிலும், அறிவுரை கூறும் காட்சிகளிலும் தனது அனுபவத்தை கொட்டியுள்ளார்.

சரண்யா வழக்கம்போல் பாசமிகு அம்மாவாக வந்து, ஒருசில இடங்களில் தனுஷை கண்டிக்கிறார். விவேக் காமெடியில் ரசிகர்களை சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்மா பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தை இயக்கியிருப்பதால் மிகவும் ரசித்து செய்திருக்கிறார். தனுஷை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாலியாக காண்பித்த வேல்ராஜை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ஜாலியான பட்டதாரி.