தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இல்லை: ஜே.வி.பி தலைவர்

anura_kumara_dhisanayakeஇந்தியா தலையிட்டு வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் என அந்த மக்கள் எண்ணுவார்களாயின் அது மிகப்பெரிய ஏமாற்றம் என்பதுடன் அழிவும் கூட என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மனித வளத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற ஜே.வி.பியின், எமது நோக்கு கொள்கை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா இன்று வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கை விழுங்கியுள்ளது.

அனைத்து துறைகளிலும் இந்தியா உட்புகுந்துள்ளது. இலங்கையின் மருந்து சந்தை இந்தியாவின் கைகளிலேயே உள்ளது.

மோட்டார் வாகனங்களில் அதிகளவான பங்கு இந்தியாவிற்கே உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதியை இந்தியா விழுங்கியுள்ளது.

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்களை திருகோணமலையில் உள்ள அகதி முகாமுக்கு விரட்டி விட்டு அவர்களின் நிலங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர்.

வடக்கில் ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பெறுமதிமிக்க கனிய வளமான புல்மோட்டை இல்மனைட் கனியத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணி கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இருந்தால், ஏன் வடக்கு மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையிட இந்தியா படகுகளை அனுப்புகிறது?.

ஜெயலலிதாவுக்கு வடக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், ஏன் மீன் வளத்தை கொள்ளையிட முயற்சித்து வருகிறார்?.

அதேபோல் இலங்கையின் இன்றைய அரசாங்கத்தினால் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வை வழங்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

TAGS: