சர்வதேசத் தலையீடு இலங்கை விவகாரத்தில் இருக்கக்கூடாது! என்கிறார் சேஷாத்ரி சாரி

seshadri-chariஇலங்கையில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அதனால்தான் ஜெனிவாவில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. எதிர்காலத்திலும் இந்தியா இவ்வாறே செயற்படும் என்று இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி சேஷாத்ரி சாரி தெரிவித்தார்.

இலங்கை பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்க்கின்றது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும் அதில் எந்தவிதமான சர்வதேச தலையீடுகளும் இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்

அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினால் என்ன விடயங்கள் வாக்குறுதியளிக்கப்பட்டதோ அவை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

அரசாங்கமும் கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் இணைந்தே பேச்சு நடத்த வேண்டும். அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் அப்பால் கட்சிகள் உள்ளன. அவர்களும் இந்த அரசியல் பொறிமுறையின் பங்காளர்களாக உள்ளனர்.

அரசாங்கமும் கூட்டமைப்பும் மட்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் கூட்டமைப்பும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் பொதுவான தீர்வை எட்ட முடியும்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். அதனை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கு முக்கியமாகும். அதனை அமுல்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான நேரகாலம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் வெளியிட முடியாது

கடந்த கால யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கபபட்டவர்கள் என்பது தவறான அபிப்பிராயமாகும். நாட்டின் வேறு மாகாணங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படவில்லையா?

புலிகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பொருளாதார அபிவிருத்தி இடம்பெறவில்லை. இதனால் தமிழ் மக்கள் மட்டுமா பாதிக்கப்பட்டனரா? இல்லை.

புலிகளினால் இந்தியாவும் பாதிக்கபபட்டது. இலங்கைககும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

எனவே தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர் என்பது தவறாகும். முழு நாடும் பாதிக்கப்பட்டது. பிராந்தியம் பாதிக்கப்பட்டது.

எனவே தமிழ் மக்களுக்கான எனது செய்தியானது நீங்கள் சிறுபான்மை மக்கள் என எண்ணக்கூடாது. தமிழ் மக்களுக்கு இலங்கை சகல வழிகளிலும் உரிமையானதாகும். மக்களை மதம் மற்றும் மொழிகளைக் கொண்டு பிரிக்க முற்படவேண்டாம். எவரும் இதனை செய்யக்கூடாது.

இதேவேளை இலங்கையில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும்.

அதேவேளை இந்திய இலங்கை உறவானது இருதரப்புக்குள்ளானதாகும். இந்தியா இலங்கை பிரசசினை சர்வதேசமயப்படுத்தப்படுவதை எதிர்க்கின்றது.

எமது முன்னாள் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியது. அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதித் தடவை இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தொடர்ந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலேயே இருக்கும். காரணம் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டு விட்டோம். அதாவது இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்பதே அதுவாகும்.

TAGS: