சிறார் மத மாற்றம்: இந்திரா காந்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு

 

Kula-indira1சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில், ஷரியா நீதிமன்றத்தை தடுத்து நிறுத்தும் உத்தரவை பெறுவதற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 25) இந்திரா காந்திக்கு அனுமதி வழங்கியது.

“ஷரியா நீதிமன்ற உத்தரவு அமலாக்கப்படுவதை கட்டுப்படுத்த அல்லது தடுப்பதற்கான தடை உத்தரவு பெறுவதற்கு மனு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது”, என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

2010 ஆம் ஆண்டில், ஈப்போ உயர்நீதிமன்றம் குழந்தை பிரசன்னா டிக்சாவை பாராமரிக்கும் உரிமையை இந்திரா காந்திக்கு வழங்கிற்று. ஆனால், அத்தீர்ப்பு இன்றுவரையில் அமலாக்கப்படவில்லை. இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் நீதிமன்ற உத்தரவுக்கு பணிய மறுத்து வருகிறார், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா என்ற கே. பத்மநாதன் தாயாருக்குத் தெரியாமல் குழந்தையை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ததோடு அக்குழந்தையை பராமரிப்பதற்கான உத்தரவையும் ஷரியா நீதிமன்றத்திடமிருந்து பெற்றார்.

குழந்தையை பராமரிக்கும் உரிமையை சிவில் உயர்நீதிமன்றம் தாயார் இந்திராவுக்கும், ஷரியா நீதிமன்றம் தகப்பனார் ரிட்சுவானுக்கும் வழங்கியிருப்பதைக் காரணம் காட்டி போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டது.

இன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பெறுவதற்கான மனு செய்ய அனுமதி வழங்கியதோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் IGP to goகாலிட் அபு பாக்காருக்கு எதிராக கடமையை ஆற்றும்படி அவரை கட்டாயப்படுத்தும் மாண்டாமஸ் என்ற தனிச்சிறப்பு உத்தரவைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.

மாண்டாமஸ் உத்தரவானது இந்திராவின் முன்னாள் கணவரை கைது செய்வதற்கும் குழந்தையை மீட்பதற்கும் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்த ஆணையையை அமலாக்க ஐஜிபியை கட்டாயப்படுத்துவதற்கானது என்று குலசேகரன் கூறினார்.

இந்த விவகாரம் பற்றி அவரது சட்ட குழுமம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கும் என்றாரவர்.

“வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு”

இன்று ஈப்போ உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று வர்ணித்த குலா, இது பெரும் விளைவுகளை கொண்டுவரக்கூடியது என்றார்.

“எங்களுக்குத் தெரிந்தவரையில் இந்தத் தீர்ப்பு உலகிலுள்ள நாடுகளில் ஓர் ஐஜிபிக்கு எதிராக எடுக்கப்பட்ட முதலாவது தீர்ப்பாகும். இத்தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி லீ சியு செங்.

“அவருக்குத் தெரிந்தவரையில் ஷரியா நீதிமன்றம் மற்றும் சிவில் உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து எதிர்மாறான இரு தீர்ப்புகள் இருப்பதால் அவர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதோடு அவரது கடமையை ஆற்றப்போவதில்லை என்றும் ஐஜிபி அறிவித்திருப்பதால், அது குறித்த முறையான மற்றும் போதுமான சாட்சியங்களை செவிமடுத்த பின்னரே மாண்டாமஸ் உத்தரவு பிறப்பிப்பதா என்பது முடிவு செய்யப்படும்”, என்று நீதிபதி லீ அவரது தீர்ப்பில் கூறினார்.

ஷரியா நீதிமன்றத்திற்கு எதிரான தடை உத்தரவு பற்றிய மனுவுக்கான அனுமதிக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

காலிட் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்

shootபிரதமர் நஜிப் ரசாக் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் காலிட் அபு பாக்கார் அவரது கடமையை ஆற்றத் தவறியதால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் குலா வலியுறுத்தினார்.

“முன்னாள் கணவர் உடனடியாகக் கைது செய்யப்படுவது மற்றும் குழந்தையை அதன் தாயாரிடம் ஒப்படைப்படுவது ஆகியவற்றின் வழி இவ்வழக்கு விரைவாக முடிவுக்கு வருவதை காண நாங்கள் விரும்புகிறோம”, என்றார் குலசேகரன்.