ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நேரிடும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை

putin_001ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று  ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி கடந்த சில மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

இந்தநிலையில் கடந்த 17ம் திகதி உக்ரைன் கிழக்கு பகுதி வழியாக பறந்து சென்ற எம்.எச்17 மலேசிய விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவை, அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை ரஷ்யா அழித்து வருவதாக ஜி-7 நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ரஷ்யாவால் முடியும். மாறாக கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவி வந்தால் அந்த நாடு மேலும் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.