வாங்கியது…12 கோடி… வசூல்…20 கோடி! வேலையில்லா பட்டதாரி நிலவரம்

vip-velai-illaதொட்டதெல்லாம் துலங்குவது என்று சொல்வார்களே…அது தமிழ்சினிமாவில் தற்போது ஒன்றிரண்டு பேருக்குத்தான் பொருந்தும். அவர்களில் ஒருவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.மதன்.

நீதானே என் பொன்வசந்தம் தவிர, விண்ணைத்தாண்டி வருவாயா தொடங்கி இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். குறிப்பாக, சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய இரண்டு படங்களும் மதனுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தன.

மான்கராத்தே படத்தை அடுத்து தற்போது பிரபுசாலமன் இயக்கும் கயல் படத்தைத் தயாரித்து வருகிறார் மதன். இந்த இடைவெளியில் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக உரிமையை வாங்கிய மதன், அந்தப் படத்துக்கு பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்களை செய்து படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வருகிறார் தனுஷ். எனவே அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மதன் இத்தனை கோடிகளை வாரி இறைத்து விளம்பரம் செய்கிறாரே என்று திரையுலகில் பலரும் கேலி பேசினார்கள்.

ஆனால் அனைவரது கணிப்பையும் மீறி வேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் வசூல் மழை பொழிகிறதாம். தனுஷிடமிருந்து 12 கோடிக்கு வாங்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி படம் இதுவரை 20 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.