குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைச்சராக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

இந்திய உச்சநீதிமன்றம்இந்திய உச்சநீதிமன்றம்

குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்க இந்திய பிரதமருக்கோ அல்லது மாநில முதல்வர்களுக்கோ தடை விதிக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேசமயம் நாட்டின் அரசியல் சட்டத்தின் தார்மீக நெறிகள் மற்றும் நம்பகத்தன்மையை காக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், குற்றவியல் வழக்குகளையும் தார்மீக நெறிகளை பிறழ்ந்த புகார்களை எதிர்கொள்ளும் நபர்களையும் தமது அமைச்சரவையில் நியமிக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில் முன்பு மத்திய அரசில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த லாலு பிரசாத், முகமது தஸ்லிமுதீன் உள்ளிட்ட, நான்கு அமைச்சர்களை அவர்களின் பதவியிலிருந்து நீக்கக் கோரி கடந்த 2005ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட ஒரு பொது நலன் மனுவின்மீதான விசாரணையின் போதே இந்திய உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அமைச்சர்களை நீக்கும்படி உத்தரவு எதனையும் நீதிமன்றம் பிறபிக்க முடியாது என்று தெரிவித்து இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகளை பிரதமரும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் தங்களின் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையின் போது, ஊழல் குற்றங்களிலும் கிரிமினல் வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அமைச்சர்களாக பதவி வகிக்க கூடாது என்கிற பொறுப்புடன் இந்திய பிரதமரும் மாநில முதலமைச்சர்களும் தாமாகவே தம் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் சம்மதித்தால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையில் பொறுப்பு வகிக்க அவருக்கு சட்டப்படி முழு உரிமை உண்டு என்று மத்திய அரசு தரப்பில் இன்று வாதாடப்பட்டது.

கடுமையான குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இந்த ஆண்டின் முற்பகுதியில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டசபை உறுப்பினர்களும் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்றும் பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பல அமைச்சர்கள் உட்பட 34 சதவிகிதமானோர்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தில்லியைச் சார்ந்த தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான ‘ஜனநாயக சீர்திருத்த சங்கம்’ தெரிவித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்வான உறுப்பினர்களில் 24 சதவிகிதமானோர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. -BBC

TAGS: