இலங்கை போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்!- செய்தியாளர்கள் கருத்து

un-inquiry-commission.gifஇலங்கையில் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்கள் தமது விசாரணைகளை திறந்தநிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் கருத்துக்களை தாங்கி இணையத்தளம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்;டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களில் இலங்கை அரச படையினரும் விடுதலைப்  புலிகளும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இதனை முன்னர் முழுமையாக மறுத்த இலங்கை அரசாங்கம் தற்போது மக்களின் உயிரிழப்புகளை குறைத்துக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறியதை அடுத்தே ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து தமது விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

இதன்போது இலங்கையில் உள்ள போர்க்குற்ற சாட்சிகளை வீடியோ கொன்பரன்ஸ் மற்றும் ஸ்கைப் போன்ற தொழில்நுட்பங்களின் ஊடாக அவர்கள் சாட்சியமளிக்க செய்கின்றனர்.

இது இலங்கை மக்கள் மத்தியில் உண்மையான விசாரணைத் தோற்றத்தை ஏற்படுத்தாது என்றே செய்தியாளர்களின் கருத்தை தாங்கி வரும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு இலங்கை விசாரணையில் தமது இயலுமையை காட்டவேண்டும் என்று இணைத்தளத்தில் கோரப்பட்டுள்ளது.

TAGS: