ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: அமெரிக்கா அழைப்பு

  • isis-genocide

இராக், சிரியாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியதுடன், பிற நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ஆயத்தமாகி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் சிறப்புத் தலையங்கத்தில் வெள்ளிக்கிழமை எழுதியுள்ளதாவது:

இராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாடுகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதன் மூலம் அவர்களைத் தோற்கடித்துவிட முடியாது.

எனவே அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் இராக், சிரிய அரசு படைகளுக்குக் கூடுதல் உதவி தேவை. இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பலத்தை சீர்குலைப்பதுடன், ஊடகம் வாயிலான அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு தக்க பதில் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும், இராக், சிரியாவில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் விதமாக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவக் கோரி மத்திய கிழக்கு நாடுகளுக்கு நானும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

ஐ.நா. பாதுகாப்புக் குழு உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் பயங்கரவாதிகளின் அச்சுறுதலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணையும் திட்டத்தை அதிபர் ஒபாமா முன்வைக்க உள்ளார் என்று ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் ஜான் கெர்ரி, சக் ஹேகல், ஒபாமா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஐ.நா. அமைதிப் படையினர் பாதுகாப்பாக உள்ளனர்’: இந்நிலையில், சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் சிரிய கிளர்ச்சியாளர்களால் புதன்கிழமை பிடித்துச் செல்லப்பட்ட ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவர்கள் ஃபிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அல்-காய்தா தொடர்புடைய அல்-நுஸ்ரா குழுவினர், சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் அமைதிப் படையினரைத் தாக்கி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறித்தனர்.

இதேபோல் ஐ.நா. கண்காணிப்பு அமைப்பைச் (யுஎன்டிஓஎஃப்) சேர்ந்த 72 பிலிப்பின்ஸ் நாட்டு வீரர்களும், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். -http://www.dinamani.com