இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு

forumஇடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு மீதான கருத்தாய்வரங்கம் இன்று, 6 செப்டம்பர் 2014 காலை 8.00 மணி தொடங்கி 2.00 மணிவரை தோட்ட மாளிகையில் நடைப்பெற்றது.

மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வியமைச்சின் அதிகாரிகள், பள்ளி ஆய்நர்கள், தமிழ்ப்பள்ளி இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் என இக்கருத்தாய்வரங்கத்திற்கென சிறப்பாக அழைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர்   இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.  மைநாடி அறவாரியத்தின் இயக்குநர் திரு. இரவி வரவேற்புரையாற்றினார். இக்கருத்தாய்வரங்கத்தினைக் கல்வித் துணையமைச்சர் ப.கமலநாதன் தொடக்கி வைத்தார்.

இத்திட்ட வரைவு பணிக்குழுவின் தலைவராக கல்வியலாளர் திரு. கு. நாராயணசாமி  அவர்கள் செயலாற்றி வருகின்றார். முதல் அரங்கத்தின் பேச்சாளராக திரு. கு. நாராயணசாமி அவர் கள் திட்ட வரைவின் நோக்கங்கள், தரவுகள் சேகரிக்கப்பட்ட முறைகள், அதன் சிக்கல்கள் குறித்து பேசினார். அவரைத் தொடர்ந்து இரண்டாம் அரங்கத்தில்,  மலாக்கா ஸ்டாம்போர்ட் கல்லூரி  முதல்வர் திரு. க. நாராயணசாமி, கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான நிர்வாக பிரிவு,  தமிழ்மொழிக்கான ஆசிரியர் பயிற்சி, பணித்திற மேம்பாடு, தமிழ்மொழிக்கான கால அட்டவணை குறித்து மிகத் தெளிவாக விளக்கப்படுத்தினார்.

மூன்றாவது அரங்கத்தில், கற்றல் மூலங்கள், அடிப்படை வசதிகள் , இணைப்பாட நடவடிக்கைகள் ,  ஆறாம்படிவ  (எஸ்டிபிஎம்)  நிலையில் தமிழ்மொழி குறித்து செகி பல்கலைக்கழக விரிவுரைஞர் திரு. மு. சிதம்பரம் அவர்கள் விளக்கமளித்தார்.

பொதுவாக இத்திட்டவரைவு இடைநிலைப்பள்ளிகளிலும் உயர்க்கல்வி கழகங்களிலும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலின் செயலாக்கத்தையும் தரத்தினையும் மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. இத்திட்டவரைவு உருவாகுவதற்கு மைநாடி அறவாரியம் மிக முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது.

இந்நாட்டில் ஏறக்குறைய ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகள் உள்ளன.  இவற்றுள் ஏறக்குறைய 600 பள்ளிகளில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 500 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து, பகுதிநேரத் தமிழ்மொழி ஆசிரியர்களும் இப்பணியினைச் செய்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சற்றேறக்குறைய 30000 இந்திய மாணவர்கள் தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்கின்றனர். எனினும், சுமார் 11000  மாணவர்களே பிஎம்ஆர் நிலையில் தமிழ்மொழித் தேர்வில் அமர்கின்றனர். அதே வேளையில், சுமார் 8,000 மாணவர்களே எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழியை ஒரு பாடமாக தெரிவு செய்கின்றனர். அதில் ஏறக்குறைய 500 மாணவர்கள் மட்டுமே எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்ப்பாடம் எடுப்பதாக இன்றைய கருத்தாய்வரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைச் செம்மையாக செயல்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், இவ்வெண்ணிக்கை மேலும் சரியக்கூடும்.

திட்ட வரைவின் முன்மொழிவுகள்

கல்வி அமைச்சின் தாய்மொழிக் கொள்கை

இரசாக் அறிக்கையின்வழி இடைநிலைப்பள்ளிகளில் தாய்மொழிக் கற்றல் கற்பித்தல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ்மொழியும் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை நிலைநிறுத்த வேண்டும். மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் (2013-2025) குறிப்பிடுவது போன்று, பிரெஞ்சுமொழி, ஜப்பானிய மொழி மற்றும் அரேபியமொழி போன்று தமிழ்மொழி கூடுதலான மொழியாக கருதப்படக் கூடாது. 

தமிழ்மொழி பாடம் தேசியக் கல்வி ஏற்பாட்டில் முதன்மைக் கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுதல் வேண்டும்.  ஆண்டுத் தொடக்கத்திலேயே இடைநிலைப்பள்ளிகளின் கால அட்டவணையில் இணைக்கப்பட்டு, அது முறையாகக் கற்பிக்கப்படுவதோடு, உயர்க்கல்விக் கழகங்களிலும் அதற்குறிய இடம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்மொழியைக் கற்கும் வாய்ப்பினை வழங்குதல்

எல்லா மாணவர்களுக்கும் தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்கும் வாய்பினை வழங்க வேண்டும். மாணவர்களின் தாய்மொழி கற்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய சூழலில், இவ்வாய்ப்பினை மாணவர்கள் பலர் பெறுவதில்லை. மேலும், பள்ளி நிலையிலான மதிப்பீட்டின் அறிமுகத்திற்குப் பின்னர், தமிழ்மொழிப் பாடம் பயில மேலும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதனை உணர வேண்டும்.

கல்வி ஏற்பாட்டில் நிகழும் எவ்வித மாற்றங்களும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழியினை ஒரு தேர்வுப் பாடமாக தெரிவு செய்வதற்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தக் கூடாது. தமிழ்மொழிப் பாடத்திற்கும் பிற பாடங்களுக்கு வழங்கப்படுவது போன்ற அங்கீகாரத்தை வழங்குவதோடு, சான்றிதழ்களிலும் அது முறையாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

உயர்க்கல்விக் கழகங்களில் மேலும் அதிகமான மாணவர்கள் தமிழ்மொழி சார்ந்த கல்வியைப் பயில வாய்ப்பளிக்க வேண்டும்.

கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான நிர்வாக பிரிவு

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து, அதன் அமலாக்கத் தரத்தினை உறுதி செய்வதற்கு ஏற்ற கல்வித் தகுதியினை உடைய பணியாளர்களைக் கல்வி அமைச்சு நிலையிலும் மாநில, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் நிலையிலும் பணியிலமர்த்தப்பட வேண்டும்.

தமிழ்மொழிக்கான ஆசிரியர் பயிற்சியும் பணித்திற மேம்பாடும்

இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ்மொழி பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழ்மொழிக் கற்பித்தலுக்குப் போதிய ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ்மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கக் கூடுதலான உயர்க்கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்மொழிக்கான ஆசிரியர் ஒதுக்கீடு மற்றப் பாடங்களுக்கான இயல்பான ஒதுக்கீட்டிலிருந்து தனித்துக் கணக்கிடப்படவும் வேண்டும்.

தமிழ்மொழிக்காகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்கள் தமிழ்மொழிப்பாட கற்றல் கற்பித்தலுக்கே பள்ளிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கான கண்காணிப்பு

கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான ஆய்நர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைக் கண்காணிக்கத் தகுதிபெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் செயலாக்கங்களின் மேலாண்மையைச் செம்மையுறச் செய்யும் வகையில் தொடர்புடைய பணியாளர்களின் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இதன்வழி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை நன்கு ஆய்ந்தறியவும் கண்காணிக்கவும் ஏற்ற ஆலோசனைகளை வழங்கவும் இது வழிவகுக்கும்.

பள்ளி நிலையிலான மதிப்பீடு

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அல்லது முழுநேர தமிழாசிரியர்கள் மட்டுமே பள்ளி நிலையிலான மதிப்பீட்டை இடைநிலைப்பள்ளிகளில் நடத்துதல் வேண்டும். முழுநேர பாட ஆசிரியர்களால் மட்டுமே பள்ளி நிலையிலான மதிப்பீட்டின் அமலாக்கத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தமிழ்மொழிக்கான கால அட்டவணை

இடைநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பல்வகைப் பாடங்களில் சுமைகளால் கால அட்டவணையில் தமிழ்மொழிக்கான கற்றல் கற்பித்தலை இடம்பெறச் செய்தல் அத்துணைக் கடினமானதன்று. பல பள்ளிகளில் இதனை அமலாக்கம் செய்து வருகின்றன. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு பிற பள்ளிகளும் செயல்பட வேண்டும். இது மேலும் அதிகமான மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்க வழிவகுக்கும்.

கற்றல் மூலங்களும் அடிப்படை வசதிகளும்

கல்வி அமைச்சு தமிழ்மொழிப் பாடநூல்கள் போதிய அளவிற்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி அமைச்சு தமிழ்மொழிக்கான பாடநூல்களின் செம்மையான விநியோக முறையையும் செம்மைப்படுத்துதல் வேண்டும்.

இணைப்பாட நடவடிக்கைகள் (தமிழ்மொழிக் கழகங்கள்)

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக உள்ளதால், தமிழ்மொழிக் கழகங்களும் இயக்கங்களும் இணைப்பாட நடவடிக்கையின் முறைசார்ந்த பகுதிகளாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவற்றின் நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

இணைப்பாட நடவடிக்கைகளின் மதிப்பீட்டில், தமிழ்மொழிக் கழக மாணவர்களின் பங்களிப்பைக் கவனத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அங்கீகாரம் மாணவர்களின் முழுமையான ஆற்றலைப் பிரதிபலிப்பதோடு, அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு உதவும்.

ஆறாம்படிவ  (எஸ்டிபிஎம்)  நிலையில் தமிழ்மொழி

ஆறாம் படிவ மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடத்தைக் கால அட்டணையில் இடம்பெறச் செய்தல் வேண்டும். மலேசிய தேர்வு வாரியத்தில் தமிழ்மொழிக்கான சிறப்பு அதிகாரி/பணியாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.

ஆறாம் படிவத்திற்கான பாடத்திட்ட வரைவிலும் தேர்வுக் கருவிகளின் உருவாக்கத்திலும் ஆறாம் படிவத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும். ஆறாம் படிவத்திற்குப் பொருத்தமான பாடநூல்களை வழங்கும் பொறுப்பினை கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உயர்க்கல்விக் கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இந்திய ஆய்வியல் துறை அதன் இன்றைய நிலையிலேயே நிலைநிறுத்தப்பட வேண்டும். இப்பகுதியில் மேலும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ்மொழியில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களிலும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொதுச் சேவைத் துறையும் பிற நிறுவனங்களும் பட்டத்திற்குப் பிந்திய மேற்கல்வியைத் தொடர மேலும் அதிகமான மாணவர்களுக்குக கல்வி உதவிநிதியினை வழங்க வேண்டும்.

இடைநிலைப்பள்ளிகளிலும் உயர்க்கல்விக் கழகங்களிலும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் வெற்றி எந்த அளவிற்கு அரசைச் சார்ந்துள்ளதோ அந்த அளவிற்குச் சமூகம் சார்ந்ததாகவும் உள்ளது. அரசு செய்ய வேண்டிய கடப்பாடுகள் சில உள்ளன. அதே சமயத்தில்,  சமுதாயம் ஆற்ற வேண்டிய பொறுப்புகளும் உள்ளன. அதே வேளையில், பள்ளி சார்ந்த சமூகமும், குறிப்பாகப் பெற்றோர்கள், பள்ளியின் தலைமைத்துவத்தோடு மிகவும் அணுக்கமாகவும் இணக்கமாகவும் செயல்பட்டுத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் திட்டம் வெற்றிப் பெற பாடுபட வேண்டும்.

(இக்கட்டுரை இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்ட திட்டவரைவு கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது)

(தொகுப்பு : – பூங்குழலி வீரன்)