14 மணி நேரம் பணியாற்றும் மோடி!

narendra_modizமன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவருடைய அலுவலகம் அமைந்துள்ள, சவுத் பிளாக்கிற்கு, அவர் அடிக்கடி வரமாட்டார். அப்படியே வந்தாலும், காலை 9:00 மணிக்கெல்லாம் வரும் வழக்கமில்லை. இந்த பழக்கத்தில் ஊறிப்போன அதிகாரிகள், தற்போது படாதபாடு படுகின்றனர்.

காலை 8:30 மணிக்கே தன் அலுவலகத்திற்கு வந்து விடுகிறார் பிரதமர் மோடி. இரவிலும் நெடு நேரம் கழித்துதான், வீடு திரும்புகிறார். பிரதமரின் வீடு டில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது; அங்கிருந்தும் பணியாற்ற வசதிகள் உள்ளன.

ஆனால், மோடியோ, சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றுவதையே விரும்புகிறார். இவருக்கு உதவ, ஐந்து செயலர்கள் உள்ளனர். எந்த பிரச்னை குறித்து விவாதித்தாலும், இந்த ஐந்து பேரும் அனைத்து விவரங்களுடன் தயாராக இருக்கின்றனர்.

ரேஸ் கோர்ஸ் சாலையில், 1, 3, 5, 7 மற்றும் 9 உள்ளிட்ட எண்களில், மிகப் பெரிய பங்களாக்கள் உள்ளன. இதில், 5ம் எண் பங்களாவில் மோடி வசிக்கிறார்; 9ம் எண் பங்களாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி., அமைப்பு இயக்குகிறது. இந்த சாலையின் இருபுறமும் தடுப்பு போடப்பட்டுள்ளதால், பொதுமக்களோ, மற்றவர்களோ போக முடியாது.ஒரு நாளைக்கு, 14 மணி நேரம் உழைக்கும் மோடி, வீட்டிற்கு வந்துவிட்டால் தனி மனிதராகி விடுகிறார். தன் தனிமையில் யாரும் தலையிடக்கூடாது என்பதில் கறாராக உள்ளார்.

அதனால், இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி., அதிகாரிகள் கூட, வீட்டிற்குள் செல்வதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய பா.ஜ., தலைவர்கள், அருண் ஜெட்லி, அமித் ஷா உட்பட சிலரை மட்டும் வீட்டில் சந்திக்கிறார்.

குடும்பத்தினர் யாரும் மோடியுடன் இல்லை. குஜராத்திலிருந்த உறவினர்கள் யாரும், இங்கு வீட்டிற்கு வருவதும் இல்லை. இவருக்கு உதவ, குஜராத்தை சேர்ந்த இரண்டு வேலையாட்கள் உள்ளனர். அவர்களே சமையல் வேலைகளையும் பார்த்துக் கொள்கின்றனர். தினமும், யோகா, உடற்பயிற்சி செய்யும் மோடி, தினசரி பூஜையும் செய்கிறார். மாதம் ஒரு முறை பிரதோஷ தினத்தன்று விரதம் மேற்கொள்கிறார்.

கண்டுகொள்ளாத மத்திய அமைச்சர்!அனைத்து அமைச்சர்களையும், கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், ஒரு அமைச்சர், பிரதமரின் உத்தரவை கண்டுகொள்ளாமல் உள்ளார். அவர் பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் ஆனந்த் கீதே. ஆட்சி அமைத்த 100 நாட்களில், புது திட்டங்களை அனைத்து அமைச்சர்களும் வேகமாக செயல்படுத்திக்கொண்டிருக்க, ஆனந்த் கீதேவோ, எதிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளார்.பி.எச்.எல்., கனரக தொழிற்சாலையின், 50வது ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட பிரதமர் விரும்புகிறார்; ஆனால், ஆனந்த் கீதே அதை செயல்படுத்த வேகம் காட்டவில்லை. இதனால் நொந்து போயுள்ளாராம் பிரதமர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான சிவசேனாவை அதிகமாக எதிர்த்துக் கொள்ளவும் பா.ஜ., விரும்பவில்லை. அதனால் தான், கீதேவை எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என்கின்றனர் பா.ஜ.,வினர்.

TAGS: