கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டுகோள்

vijay_jillaபெறுநர்:

உயர்திருகாவல்துறைஆணையாளர்அவர்கள்,

சென்னைமாநகரக்காவல்துறை

சென்னை.

அன்புடையீர் வணக்கம்.

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினர் 90% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனமான லைக்கா, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

ஏற்கெனவே இனப்படுகொலை போர்க்குற்றத்துக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட இந்த தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம், கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் என 65 இயக்கங்களின் பிரதிநிதிகள் கடந்த மாதம் 19- ந்தேதி கோரிக்கை விடுத்தோம்.

அதன் பின்னர் செப்டம்பர் 6-ந் தேதியன்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள், கத்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை லைக்கா தயாரிப்பில் வெளியிடப்படுவதை தொடர்ந்து உறுதியாக எதிர்க்கிறோம். இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. லைக்கா வெளியிடாமல் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாயினும் கத்தி திரைப்படம் வெளியிடுவதில் நமக்கு மறுப்பு இல்லை என்று அறிவித்திருந்தோம். ஆனாலும் ஒட்டுமொத்த மொத்த தமிழகத்தின் வேண்டுகோளை

ஏற்காமல் லைக்கா நிறுவனத்தாலேயே கத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை இயக்குநர் முருகதாஸோ நடிகர் விஜயோ ஏற்கவில்லை.

தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இலங்கையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குறிப்பாக ராஜபக்சே குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம் தமிழகத்தில் நுழைவதை அனுமதிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போது லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிராக, ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்கு எதிராக லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித்து அதன் பாடல் வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டிலேயே நடத்துவதையும் திரைப்படத்தை வெளியிடுவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ்நாட்டின் தலைநகரிலேயே அந்த நிறுவனம் தனது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்துவது மற்றும் கத்தி திரைப்பட வெளியீடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டியது தங்களின் கடமை என்பதை 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பாகிய நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தின் உணர்வுகளை மதித்து லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் கத்தி திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

தி.வேல்முருகன்,

ஒருங்கிணைப்பாளர்

தமிழர்வாழ்வுரிமைக்கூட்டமைப்பு