இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்தி தீவிரவாதத்துக்குள் இழுக்க ஐ.எஸ்.ஐ முயற்சி

arunஇலங்கையிலுள்ள முஸ்லிம்களை இன மோதல்கள் மூலம் தனிமைப்படுத்தி, அவர்களினூடாக தென்னிந்தியாவை உளவுபார்த்து தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ அமைப்பு வியூகம் வகுத்துள்ளதாக அருண் செல்வராசாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் இன மோதல்களை உருவாக்கி, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி தமது வலையில் விழ வைப்பதன் ஊடாக அவர்களை உளவாளிகளாகப் பயன்படுத்தவே மேற்படி தீவிரவாத அமைப்பு முயற்சித்து வந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக உதவியுடன் தென்னிந்தியாவை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் அருண் செல்வராசா என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அத்துடன், சாகிர் ஹுசேன் என்ற பாகிஸ்தான் உளவாளியும் கைது செய்யப்பட்டார்.

இந்த இருவரிடமும் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் உள்ள தீவிர பௌத்த இயக்கமான பொது பல சேனாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மறைமுகமாக உதவி செய்கிறது. பொது பல சேனா மூலமாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பது ஐ.எஸ்.ஐ.இன் திட்டம்.

அப்படி முஸ்லிம்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது தீவிரவாதத்தை நோக்கி தள்ளப்பட வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.இன் நோக்கம். இப்படி தங்களிடம் வந்து சேரும் இலங்கையர்களை வைத்து தென்னிந்தியாவை உளவு பார்த்து, தாக்குதலுக்கு வியூகம் வகுப்பது என்பதுதான் அவ்வமைப்பின் திட்டம்.

பாகிஸ்தான் தூதரக அத்காரியான அமிர் சுபைர் சித்திக் என்பவர் தலைமையில்தான் இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2012ஆம் ஒக்டோபர் மாதத்தில், 15 முதல் 50 வரையான உளவாளிகளை சித்திக் உருவாக்கியுள்ளார். இவர்களில் சிலர் தென்னிந்தியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்காக வேவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள இஸ்ரேலிய தூதரகங்கள், தேசிய கமாண்டோ படை தலைமையகங்கள் தான் பாகிஸ்தானின் இலக்கு என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.

TAGS: