ஜனநாயகம் எங்களின் பெரிய சொத்து: பிரதமர் மோடி பெருமிதம்

modi_dressபுதுடில்லி : ”ஜனநாயகம் எங்களின் மிகப்பெரிய சொத்து; அது எங்களின், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின், தனியார் ஆங்கில, ‘டிவி’க்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளதாவது:பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, எங்கள் அரசு, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பது கூட்டு முயற்சி. இதை அரசியல் ஆக்குகின்றனர்; இது, அரசியல் ஆக்கப்படக் கூடிய பிரச்னையே இல்லை.பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவும், சீனாவும் சம அளவிலேயே உள்ளன. இந்த நுாற்றாண்டு, இந்தியா, சீனாவுக்கானது. எனினும், நாங்கள் நாங்களாகவே இருக்க விரும்புகிறோம். பெரிய அளவில் எந்த பட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை.எங்கள் நாடு ஒரு காலத்தில், தங்கப் பறவையாக வர்ணிக்கப்பட்டது. அந்த நிலையிலிருந்து நாங்கள் சற்று வீழ்ந்து விட்டோம். மீண்டும் மேலெழும்ப வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியர்கள், அபரிமிதமான திறமை கொண்டவர்கள். இந்தியர்களின் திறமையில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 125 கோடி மக்களின் தொழில் முனையும் திறனில், எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.ஜனநாயகத்தில் எங்களுக்கு மிகுந்த விருப்பம், நம்பிக்கை உள்ளது. ஜனநாயகம் எங்களின் மிகப்பெரிய சொத்து; அது எங்கள், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது. அந்த உள்ளார்ந்த பலத்தால் தான், சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான், இந்த நாட்டின் பிரதமராக ஆக முடிந்தது.இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. எனினும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள திறமையானவர்களை, அமெரிக்கா தன் வசம் வைத்துக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும், முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் தான் உள்ளனர்.பல விதங்களில், இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையை காண முடியும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

TAGS: