எம்எச்370 சரக்குப் பட்டியல் ஒளித்துவைக்கப்பட்டுள்ளதில் சதியா?

 

mh370காணமல் போன எம்எச்370 தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை பிரதிநிதிக்கும் ஓர் அமைப்பு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த முழுசரக்குப் பட்டியல் ஒளித்துவைக்கப்படிருப்பது ஒரு சதியா என்று வினவியுள்ளது.

200 பேரை ஏற்றிச் சென்ற எம்எச்370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எவ்விதத் தடயங்களுமின்றி காணாமல் போய்விட்டது.

விமானத்தில் சரக்கு வைக்கும் இடத்தில் ஏற்றப்பட்டிருந்த அனைத்து சரக்குகளின் முழு பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று வாய்ஸ் 370 என்ற அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த இரண்டு மாதத்திற்குப் பின்னர்தான் சரக்கு பட்டியல் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டு மாதகால தாமதத்திற்குப் பின்னரும் வெளியிடப்பட்ட பட்டியல் முழுமையானதல்ல என்று அந்த அமைப்பு கூறியது.

ஜூலை மாதத்தில் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 பயண விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் முழு பட்டியல் ஏழு நாட்களுக்குள் வெளியிடப்பட்டது. ஏன் இந்த வேறுபாடு என்று வாய்ஸ் 370 வினவியுள்ளது.