அன்வாரை விடுவிக்க தற்காப்புக்குழுவின் கடும் போராட்டம்

 

Anwar press hard1அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தற்காப்பு வழக்குரைஞர் குழுவினர் பெடரல் உச்சநீதிமன்றத்தில் கடந்த இரண்டரை நாட்களாக கடுமையாக விவாதம் நடத்தினர். அன்வார் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாகும்.

கேமிரா பொய் சொல்லாது

அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு தலைமையேற்றிருந்த ஸ்ரீராம் கோபால் இந்த வழக்கின் புகார்தாரர் சைபுல்லின் ஒவ்வொரு செயலையும் கூறுபோட்டார். அவரது உள்ளாடை விவகாரத்தை அலசினார்.

குதப்புணர்ச்சியில் தாம் பலவந்தப்படுத்தப்பட்டதாக புகார் செய்த சைபுல் அச்செயலின் போது வலியில்லாமல் இருக்க வழவழப்பு தரும் ஜெல்லியை கொண்டு வந்திருந்ததை அவர் வலியுறுத்தினார்.

தாம் பலவந்தமாகவும் கடுமையாகவும் உடன்பாடு இல்லாமலும் குதப்புணர்ச்சிக்கு உட்படுத்தபட்டதாக கூறிய சைபுல் சம்பவம் நடந்த  அடுத்த நாள் அன்வார் வீட்டில் அவர் உணவு பரிமாறும் படத்தில் அவர் வாட்டத்துடன் காணப்படவில்லை. கேமரா பொய் சொல்லாது என்றாரவர்.

சைபுலின் சாட்சியத்தை நம்ப வேண்டுமென்றால், “சந்திரன் பச்சை வெண்ணெய்யால் உருவாக்கப்பட்டது என்பதையும்கூட நம்பலாம்” என்று ஸ்ரீராம் கூறினார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்ய சைபுல் காட்டிய தயக்கத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல் சதி

அன்வாரின் மற்றொரு வழக்குரை என். சுரேந்திரன் அன்வாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதி குறித்து தமது வாதத்தை முன்வைத்தார். குற்றவாளிக் கூண்டிலிருந்து அன்வார் விடுத்த அறிக்கையில் அன்றைய துணைப் பிரதமர் நஜிப் ரசாக் அவரது தாமான் டூத்தா இல்லத்தில் புகார்தாரர் சைபுல்லை ஜூன் 24, 2008 இல் சந்தித்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது ஓர் அரசியல் சதி அல்லது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டம் என்பதைக் காட்டுகிறது என்று சுரேந்திரன் கூறினார்.

மேலும், அன்வார் குற்றவாளிக் கூண்டிலிருந்து கூறியதை மேல்முறையீட்டு நீதிமன்றம் “வெறும் மறுத்தல்” என்று கூறுவது தவறு என்றாரவர். ஏனென்றால், இவை அனைத்தும் உண்மையில் நிகழ்ந்தவையாகும். அத்துடன், சைபுல், நஜிப்பை சந்தித்த அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசாவை தொலைபேசியில் அழைத்துள்ளார் என்று சுரேந்திரன் கூறினார்.

அன்வார் ஜூலை 16 இல் கைது செய்யப்பட்டதே சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை சங்கீதா கௌவுர் எழுப்பினார். மேலும், அன்வாரின் மரபணுவை அவருக்குத் தெரியமல் பெறுவதற்காக போலீசார் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அன்வாரின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்ட முறை, அதன் தரம், பின்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய பல நடைமுறைகள் பற்றி விலாவாரியாக ராம் கர்ப்பால் கேள்விகள் எழுப்பினார்.

இவ்வழக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தில் நாளை தொடர்கிறது. அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா தமது வாதத்தை முன்வைப்பார்.