உலகம் உள்ள வரை வாலியின் பாடல்கள் ஒலிக்கும் : இளையராஜா பெருமிதம்

Ilayaraja Latest Stillsகவிஞர் வாலி மறைந்தாலும், இந்த உலகம் உள்ள வரை, அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும், என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.வாலி பதிப்பகம் சார்பில், கவிஞர் வாலியின், 83வது பிறந்த தினம், சென்னையில் கொண்டாடப்பட்டது.

பிறந்த தினத்தை முன்னிட்டு, சினிமா பாடலாசிரியர் காமராசன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோருக்கு, வாலி விருதுகள் வழங்கப்பட்டன.

மக்கள் மனதில் விருது வழங்கிய, இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: தமிழ் சினிமா எண்ணற்ற பாடலாசிரியர்களை பார்த்துள்ளது. இதில், நிலைத்து நிற்பவர்கள் சிலர் தான். அதுவும், மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் மிக சொற்பம்.

அந்த வரிசையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றவர்கள் உள்ளனர். என்றும் இளமை துள்ளலுடன், திரை பாடல்களை தந்தவர் வாலி. அவர் மறைந்து விட்டாலும், இந்த உலகம் உள்ளவரை, வாலியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி, கமல் என, தமிழ் மக்கள் மத்தியில் என்றும் கதாநாயகர்களாக இருப்பவர்களுக்கு எல்லாம், வாலி பாடல் எழுதியுள்ளார். அவர்களுக்கு, எழுதிய பாடல்களைத் தொகுத்து, நூல்களாக வாலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சிக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், பாடலாசிரியர் பழனி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.