தீபாவளிப் பொது உபசரிப்புகளில் குத்தாட்டங்கள் -கிருஷ்ணா ராஜ்மோகன்

4பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் தீபாவளி, ஹரி ராயா, சீனர் பெரு நாள், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளை ஒட்டி, நடத்தப்படும் அனைத்து பொது உபசரிப்புகளும் இன-மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதோடு, மட்டுமல்லாது, ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரின் உணவு, உடை, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை மேலும் ஆழமாக அறிந்து கொள்வதற்கும் இது போன்ற பொது உபசரிப்புகளும் துணை புரிகின்றன.

தீபாவளி முடிந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆங்காங்கே இன்னமும் “தீபாவளிப் பொது உபசரிப்புகள்” நடந்து கொண்டிருக்கின்றன. சந்தோஷம். ஆனால், தீபாவளிப் பொது உபசரிப்புகளில் இடம் பெறும் கலைப் படைப்புகள் தீபாவளித் திருநாளுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், சமயம்-பண்பாடு இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது.

இது போன்றதொரு தீபாவளிப் பொது உபசரிப்பு, கடந்த வாரம் ஒரு திறந்த வெளி இடத்தில் நடைபெற்றது, கலை நிகழ்ச்சி என்ற பெயரில், ஒரிரண்டு பாடல்களைத் தவிர, அனைத்தும் குத்துப் பாடல்களும் விரசமான நடனங்களுமே! அருவருக்கத் தக்க அந்த ஆட்டங்கள் வந்திருந்த மற்ற இனத்தவரையும், முக்கிய பிரமுகர்களையும் முகம் சுளிக்க வைத்தன.  ஏற்பாட்டுக்குழுவின் பொறுப்பாளர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவரோ, “இந்தப் பெண்ணின் இடுப்புக்கு உங்களால் ஈடுகொடுக்க முடியுமா?” என்று  மற்ற கலைஞர்களிடம் “பெருமையாக” சொல்லிக்கொண்டிருந்தது, அங்கு அருகில் அமர்ந்திருந்த பொது மக்கள் காதுகளில் தெளிவாகக் கேட்டது.

நிகழ்ச்சியின் நோக்கம் என்ன, நம் பிரமுகர் யார், எந்த நிகழ்ச்சிக்கு எந்த மாதிரியான கலைப் படைப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற சாதாரண பொது அறிவு கூட இல்லாதவர்கள் “தீபாவளிப் பொது உபசரிப்பு” என்ற பெயரில் மேடைகளில் ஆபாச நடனங்களை அரங்கேற்றி வருவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

தீபாவளிப் பொது உபசரிப்பை ஏற்று நடத்தும் பெரிய மனிதர்களே, தீபாவளி என்பது சமயம் சார்ந்த  திருநாள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களில் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.  உங்களுக்கு ஆபாச நடனங்கள் தான் வேண்டும் என்றால்,  அதை உங்கள் வசதிக்கேற்ப இரவு விடுதிகளில் நடத்திக் கொள்ளுங்கள்; அல்லது  வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளுங்கள். இந்து மதம் சார்ந்த தீபத்திரு நாளுக்காக நடத்தப்படும் “தீபாவளிப்பொது நிகழ்ச்சிகளில்” கலை என்ற பெயரில் ஆபாச – பண்பற்ற நடனங்களை திணித்து, இந்து சமயத்தின் புனிதத்தை களங்கப்படுத்தி விடாதீர்கள்.  இது ஏற்பாட்டுக்குழுவினருக்கு மட்டுமல்ல; கலைஞர்களுக்கும் தான்.

– கிருஷ்ணா ராஜ்மோகன்

சிலாங்கூர்