சீனப் பள்ளிகளை மூடவேண்டும் என்ற ‘மடத்தனமான கூக்குரலை’ நிறுத்துவீர்

srjk-cகுறுகிய-மனமும்,  அறியாமையும்  கொண்ட  அரசியல்வாதிகள்   சீனமொழிப்  பள்ளிகளை  இழுத்து மூடச்  சொல்லி  “மடத்தனமாக  கோரிக்கைகள் ” விடுவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  மசீச  கேட்டுக்கொண்டிருக்கிறது.

கேட்பதற்கு  ஆள்  இல்லையென்பதால்  துணிச்சல்பெற்றுள்ள “பொறுப்பற்ற”  அரசியல்வாதிகள்  சிலர்,  சீனப்பள்ளிகள்(எஸ்ஜேகேசி)  தேசிய  ஒற்றுமைக்குத்  தடையாக  இருப்பதாகக்  கூறிக்கொண்டு  அவற்றை  ஒழித்துக்கட்ட  வேண்டும்  என வலியுறுத்தி  வருவதாக  மசீச  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லுவா  சூன்  ஹன்  கூறினார்.

“பல்லின  மலேசியர்கள்  பிள்ளைகளை  எஸ்ஜேகேசி-இல்  சேர்ப்பது  அப்பள்ளிகளைப் பல்லினங்களும்  ஏற்றுக்கொண்டிருப்பதைக்  காண்பிக்கும்  வேளையில், அவற்றை வைத்து  மலிவு  விளம்பரம்  தேடிக்கொள்ள  முனையும் குறுகிய-மனம்  கொண்ட  அறியாமைமிக்க  அரசியல்வாதிகளும்  இருக்கிறார்களே  என்பதை  நினைக்கையில்  வருத்தமாக இருக்கிறது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.
பல்லின  பெற்றோரும்  தங்கள்  பிள்ளைகளை  எஸ்ஜேகேசி-இல்  விரும்பிச்  சேர்க்கிறார்கள்  என்கிறபோது  அவற்றை  மேலும்  மேம்படுத்த  வேண்டுமே  தவிர மூடக்கூடாது  என லுவா  வலியுறுத்தினார்.