லடாக்கில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு: ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

அக்சாய்சின் பகுதி தொடர்பாக இந்தியா, சீனாவுக்கு இடையே சர்ச்சை உள்ள நிலையில், இதுதொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுடன் சீனா எல்லையைப் பகிர்ந்து கொண்டதில்லை. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே திபெத் என்னும் நாடு இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளால், சீனா தற்போது இந்தியாவின் அண்டை நாடாக மாறிவிட்டது. விலைமதிப்பில்லாத நமது நாட்டின் பகுதி சீனாவுக்கு செல்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம்.

அக்சாய் சின் பகுதியை சீனாவுக்கு, பாகிஸ்தான் பரிசாக அளித்து விட்டது. இதை ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செய்த முந்தைய தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை. அக்சாய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதுபோல, இந்தியப் பகுதிக்குள் சீனப் படையினர் மீண்டும் மீண்டும் ஊடுருவுவது, இரு நாடுகளுக்கு இடையிலான சுமுக உறவுக்கு உகந்ததாக அமையாது.

அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், அது அந்த நாடுகளின் நடவடிக்கையைப் பொருத்தே அமையும். இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு போன்ற சிக்கலான விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதிய உச்சத்துக்கு செல்லும்.

இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் தற்போது சுமார் ரூ. 4.2 லட்சம் கோடியாக (65 பில்லியன் டாலராக) உள்ளது. பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களிடையேயான உறவை மேம்படுத்திக் கொண்டால் ரூ.6.19 லட்சம் கோடியாக (100 பில்லியன் டாலராக) அதிகரிக்கும்.

370ஆவது பிரிவு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இதற்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவுதான் காரணம். இந்தப் பிரிவு காரணமாக, மாநிலத்தில் 73-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசால் நேரடியாக செயல்படுத்த முடியாது. மாநில அரசுதான் அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் அதை தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை. எனவே, தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மாநிலத்தில் 73ஆவது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என்றார் ராஜ் நாத் சிங்.

அண்மையில் சீனா விவகாரம் தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், இந்தியப் பகுதிக்குள் சீனாவால் கட்டப்படும் பாலங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா தகர்த்தெறியும் எனத் தெரிவித்திருந்தார். -http://www.dinamani.com

TAGS: