வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பூச்சிக்கொல்லி மாத்திரை பெற்றோரையும் கொல்லும்

old_age_peopleதமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள் பரவலாக நடப்பதை தன்னுடைய களப்பணியில் கண்டறிந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் முத்துப்பிள்ளை.

தனக்குத்தெரிய வந்த முதியோர் சந்தேக மரணம் மற்றும் கொலைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் அவர். தென்னை மரத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதற்கான பூச்சிக்கொல்லி மாத்திரைகள் முதியோர்களைக் கொல்லவும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக கூறினார் அவர். பல சம்பவங்களில் இந்த பூச்சிக்கொல்லி மாத்திரைகள் முதியவர்களின் நோய்தீர்க்கும் மருந்து என்று கூறி அவர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும், சிலசமயங்களில் தம் நோயின் கடுமை அல்லது தங்களின் பிள்ளைகளின் புறக்கணிப்பு ஆகியவற்றை தாள முடியாத முதியவர்கள் தாமாகவே முன்வந்து இந்த மாத்திரைகளை வாங்கி அரைத்து குடிப்பதாகவும் தெரிவித்தார்.

சில சமயம் இத்தகைய கொலைகள் சம்பந்தப்பட்ட முதியவர்களின் மருமகள்களால் மகன்களுக்குத் தெரியாமல் நடத்தப்பட்டாலும் பெரும்பான்மையானவை மகன்களுக்கும் தெரிந்தே அவர்களின் துணையுடனே செய்யப்படுவதாக கூறுகிறார் மற்றொரு களப்பணியாளர் ராசாத்தி. இத்தகைய சந்தேக மரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் ஒட்டுமொத்த ஊருக்கும் தெரியும் என்கிறார் அவர்.

சொத்துக்காக, பணத்துக்காக, பராமரிக்க முடியாமல் என்று பலப்பல காரணங்களுக்காக இத்தகைய முதியோர் படுகொலைகள் நடப்பதாக ஆய்வுகள் கூறினாலும், படுத்த படுக்கையாக கிடக்கும் முதியோர்கள் தான் பெருமளவில் இப்படி பலவந்தமாகக் கொல்லப்படுகிறார்கள் என்கிறார் ராசாத்தி.

ஒருபக்கம் தொடரும் முதியவர்களின் கொலைகள். அதற்கு சமாந்திரமாக, முதியோர் தற்கொலைகளும் இந்த பகுதியில் அதிகம் நடக்கின்றன என்கிறார் மற்றொரு களப்பணியாளர் செல்வராணி. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் தலையாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஒரு முதியவர், தன்னுடைய குடும்பத்தவர் தன்னை சரியாக பராமரிக்காத நிலையில், ஊரின் மயானத்தில் இருக்கும் சிதையை எரியூட்டும் மேடையில் சென்றுபடுத்துக்கொண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார் செல்வராணி. காரணம் தன்னுடைய தகன செலவுக்கு யார் பணம் செலவழிப்பது என்பது தொடர்பில் தன் வாரிசுகள் மத்தியில் சண்டை வரக்கூடாது என்பதே அந்த முதியவரின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் அவர்.

வெளி உலகுக்கு வேண்டுமானால் பெருமளவில் இந்த முதியோர் சந்தேக மரணங்கள் அல்லது கொலைகள் குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய மரணங்கள் நடந்த ஊர்களில் ஏறக்குறைய ஒட்டுமொத்த ஊருக்கே இவை குறித்து தெரிந்தே இருக்கிறது. குறிப்பாக இத்தகைய கொலைகள் நடப்பதற்கு முன்பு தெரியாவிட்டாலும் நடந்து முடிந்தபிறகு பெரும்பாலான சம்பவங்கள் வெளியில் தெரியவருகிறது.

ஆனால் யாரும் இத்தகைய மரணங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை; ஆராய்வதும் இல்லை. காரணம் வயதான பெற்றோர்கள் அவர்களின் சொந்தப்பிள்ளைகளால் கொல்லப்படும் நிகழ்வுகள் தினசரி செய்தியாகிவிட்ட சூழலில் இப்படிப்பட்ட சந்தேக மரணங்கள் சமூகத்தால் வெகு எளிதில் கடந்து செல்லப்படுகின்றன.

முதுமை என்பது வாழ்வின் இயல்பானதொரு வளர்ச்சி நிலை. ஆனால் முதுமை என்பது மரணத்தை எதிர்நோக்கி வெறுமனே காத்திருக்கும் வாழ்நிலை என்கிற கருத்து வலுவாக திணிக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தில் இப்படியான மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட முதியோரின் சந்தேக மரணங்கள், கொலைகள் ஏராளம். அவை இன்றும் நின்றபாடில்லை என்பது தான் இதில் இருக்கும் தீராச்சோகம். -BBC

TAGS: