ரபிஸி: எண்ணெய் நிறுவனங்களின் ஆதாயம் பாதுகாக்கப்படுவதை நிறுத்துவீர்

ronஎரிபொருள்  விலைகளை  மிதக்கவிடும் அரசாங்கத்தின் புதிய  நடைமுறையைத்  தற்காத்துப்  பேசும்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடினைச்  சாடிய  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி,  விலைகள்  மிதக்க  விடப்பட்டாலும்  எண்ணெய்  நிறுவனங்களின்  ஆதாயத்துக்கு மட்டும்  ஆபத்தில்லை  என உத்தரவாதம்  அளிக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டினார்.

நேற்று  கைரி, தம்  வலைப்பதிவில்  புதிய  மிதவை  முறையின்கீழ்  எண்ணெய்  விலைகள்  எப்படி  தீர்மானிக்கப்படுகின்றன  என்பதை  விரிவாக  விளக்கியிருந்தார். ஆனால்,  ரபிஸி,  கைரியின்  வாதங்களை  வைத்தே  எண்ணெய்  நிறுவனங்களுக்கு  அவற்றின்  ஆதாயத்துக்கு  எப்படியெல்லாம்  உத்தரவாதம்  அளிக்கப்பட்டுள்ளது  என்பதை விவரித்தார்.

“குறைந்த  பட்சம்,  அந்நிறுவனங்கள்  ஒரு  லிட்டருக்கு 30 சென் ஆதாயம் பெறும்  என  அரசாங்கம்  உத்தரவாதம்  அளிக்கிறது. சந்தை  நிலவரத்துக்கு  ஏற்ப  நாங்கள் விலை  கொடுக்க  வேண்டும்  என்பதற்காக  உதவித்  தொகையை  நிறுத்தினீர்கள். ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எண்ணெய்  நிறுவனங்களின்  ஆதாயத்தை  மட்டும்  தொடர்ந்து பாதுகாக்க  முனைவது  ஏன்?”, என  ரபிஸி  வினவினார்.

“மக்கள் படும்  சிரமங்களைவிட   பெரிய  நிறுவனங்களின்  நலன்களுக்குத்தான்  அவர் மிகுந்த  முன்னுரிமை  அளிக்கிறாரா?”, எனவும்  அவர்  கேட்டார்.