காஷ்மீர், ஜார்க்கண்டில் தேர்தல் முடிந்தது: 23இல் வாக்கு எண்ணிக்கை

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

  • ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த வாக்காளர்கள்.

    ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த வாக்காளர்கள்.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில சட்டப் பேரவைகளுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மொத்தம் 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சனிக்கிழமை 20 தொகுதிகளுக்கு நடைபெற்ற இறுதிக் கட்டத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், 16 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட வாக்குப்பதிவில் 71.26 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஐந்து கட்ட வாக்குப் பதிவையும் சேர்த்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 66.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரு மாநிலங்களிலும், கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தம் 1,136 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே.ஜஜோரியா கூறுகையில், “ஜார்க்கண்டில் அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற்றது’ என்றார்.

“ஜார்க்கண்டில் 291 வாக்குச்சாவடிகள் விடியோ மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்தல் பணிகளில் 22,240 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்’ என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்லின்போது ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களை விட, மும்மடங்கு வீரர்கள், இத்தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: