கிரிஸ்மஸ் வாழ்த்துகளோடு ஒரு சிந்தனை! – கா. ஆறுமுகம்

K. Arumugam_suaramகிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம்.

அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும்  வாய்ப்பும் உரிமைகளாக உள்ளன.

அதன் வழி புரிந்துணர்வும் சகோதரத்துவமும் உருவாக்கம் கண்டு, நாம் இனவாதத்திற்கு அப்பால் இன்பமாகவும் செழிப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் அதன் உருவாக்கம் ஆளும் அரசியலுக்கு தடையாக மாறும் என்ற பீதி கொண்ட மதவாதிகள் சாணக்கியத் தனமாக ஆளும் ஆட்சியிலும் ஊடுருவி இன-மத வாதத்தை அரசியலாக விற்பனை செய்கின்றனர். அவர்களை களையெடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், நமது நாட்டை சூதுதான் கவ்வும்.

chrisrmasஇறைவன் எவ்வகையில் இருப்பினும் அவன் நம்மில் கலந்து மனித நேயமாக காட்சியளிக்கும் போது பிறப்பின் பயனை மனிதன் அடைகிறான்.

அமைதியையும் நிம்மதியையும் விரும்பும் மக்கள் இன்று உலகத்தின் வெறித்தனமான மதவாத பிரிவினைக்கு எதிராக புறப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து போர் புரிகின்றனர். மலேசியாவை பொறுத்த மட்டில், பைபில் பிரச்சனை, மத மாற்றம், ஹுடுட் சட்டம், மதக்கோட்பாடுகள் கொண்ட மாநில அரசு சட்டங்கள், முரண்பாடுகள் கொண்ட அரமைப்பு பிரிவு 121(1A) போன்றவை ஒற்றுமைக்கு சவாலாகவே உள்ளன. இவ்வளவு காலம் கட்டிக்காத்த ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் பெர்காசா, இஸ்மா போன்ற வலது சாரி மதவாத அமைப்புகள் மதவாத உரிமையை கோரி போர்க் கொடி தூக்குகின்றனர்.

group-of-25இதுநாள் வரை அமைதி காத்து வந்த மலாய் இனத்தின் 25 அறிவுஜீவிகள் இப்போது மலேசியாவுக்கான ஒரு புதிய பரிந்துரையை முன்வைத்து இனவாதிகளை கடுமையாக சாடியுள்ளது வரவேற்கத்தக்கது. நாம் ஒரு பாக்கிஸ்தான் போலவோ அல்லது ஆப்கானிஸ்தான் போலவோ உருவாகி விடக்கூடாது என்றும், மிதவாத போக்கில் பல்லின மக்களுடன் மதவாத ஆலோசனையை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதற்கு நமது பிரதமரின் கருத்து சாதமாகவே உள்ளதாவே தோன்றுகிறது.

வரவிருக்கும் புத்தாண்டு மக்களுக்கு ஒரு சவால் மிகுந்த ஆண்டாகவே இருக்கும். அரசியல் பிரச்சனைகளோடு, வரி சுமையால் வந்த விலையேற்றத்தால் உண்டாகும் பொருளாதார பிரச்சனைகளும் தலை தூக்கும்.

ஒருவரின் மனதில் உள்ள நல்ல ஓநாயும் தீய ஓநாயும் சண்டையிட்டுக் கொண்டால் எது வெற்றி பெரும் என்று நாம் குழந்தைகளை கேட்போம். சில குழந்தைகள் நல்ல ஓநாய் என்பார்கள். நல்ல குழந்தைகளாக இருந்து பாதிப்படைந்த குழந்தைகள் தீய ஓநாய் என்பார்கள். எந்த ஓநாயுக்கு அதிகமாக தீனி போட்டு வளர்கிறோமோ அதுதான் வெற்றி பெரும் என்பதுதான் இதன் உவமை.

நமது நாடு எதை வளர்க்க வேண்டும் என்பது உலக சுவற்றில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதை நம் தலைவர்கள் ஏற்க வேண்டும். ஏற்க மறுப்பவர்களை மக்கள் இறக்க வேண்டும்.