தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகளையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும்

-ஜீவி காத்தையா, ஜனவரி 1, 2015.

 Tamil school our choice with studentsஇன்னும் ஈராண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகும்.

இந்த இரு நூறு ஆண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், நம்மை வரவேற்க காத்துக்கொண்டிருப்பது தமிழ்ப்பள்ளிகளின் சவக்குழி!

வேண்டுமானால், அந்த நாள் தள்ளிப்போடப்படலாம். அம்னோ மலாய்க்காரர்கள் சீன மற்றும் இந்தியர்களின் வாக்குகள் தேவை இல்லாமல் பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் நாள் வரும் வரையில் அந்த நாள் தள்ளிப்போடப்படலாம்.

17.09.2010 இல் கூட, தேசிய ஒற்றுமை ஓங்க வேண்டுமென்றால் தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்ட வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது, அம்னோ இவ்வேலையை பெர்காசா, இஸ்மா போன்ற மலாய் இனவாத அமைப்புகளிடமும், மலாய் கல்விமான்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் சிலரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.

தேசிய ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பது கிட்டத்தட்ட இரு நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் தாய்மொழிப்பள்ளிகளோ அவற்றின் ஆசிரியர்களோ அல்லர்.

தேசிய ஒற்றுமையைப் பிளப்பது இன வாதம். அதற்கு வித்திட்டது அம்னோ. இனவாதம் அம்னோவின் ஆணி வேர்.

umnoசீனர்கள் எண்ணிக்கையில் மலாய்க்காரர்களைவிட கூடிவிடாமல் இருக்க வேண்டுமானால், அதிகமாக இந்தோனேசியர்கள் இங்கு வருவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தோனேசியர்கள் நமது உடன்பிறந்த சகோதரர்கள் என்று வரலாறு கூறுகிறது என்று கூறியவர் அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார். அவர் 1951  இல் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கிறதா, இல்லையா?

அடுத்த அம்னோ தலைவரும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் சிரித்தே காரியம் சாதித்தவர். இங்கு எல்லாருக்கும் இடம் உண்டு கூறிய அதே வேளையில் மலாயா மலாய்க்காரர்களுக்கே என்றார்.

விருந்தாளிகள் (சீனர்களும் இந்தியர்களும்) விருந்து முடிந்ததும் திரும்பிப் போகவேண்டும் என்றவர் மகாதிர்.

நஜிப் ரசாக் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக இருந்தபோது அப்பிரிவினர் கோலாலம்பூர் சுல்தான் சுலைமான் அரங்கில் நடத்திய பேரணியில் “இதை (கிரிஸ் கத்தியை) சீனர்களின் இரத்ததில் தோய்க்க வேண்டும்” என்ற பாதாகையை ஏந்தியிருந்தனர்.

இன்றும், இந்தியர்களை பிச்சை எடுக்க வந்தவர்கள் என்றும் சீனப் பெண்கள் தங்களுடைய உடல்களை விற்க வந்தவர்கள் என்றும் திரும்பிப் போங்கள் என்றும் கூறுவது யார்? அம்னோக்காரர்கள்தான், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அல்லர்.

நாட்டில் இனவாதத்தை வித்திட்டு வளர்க்கும் இடம் கல்வி அமைச்சும் பிரதமர் துறையும்தான். இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களை வைத்து பல மில்லியன் ரிங்கிட்களைச் செலவிட்டு பிடிஎன் பயிற்சிகளின் வழி இனவாதத்தைப் பரப்புவது பிரதமர் துறை. அதன் பயிற்சி திட்டங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்கிறார் மகாதீர்.

தேசியப்பள்ளிகள் இப்போது ஓர் இனத்திற்கும் ஒரு மதத்திற்குமான பள்ளிகளாகிவிட்டன என்று கூறியவர் யார்? அதைக் கூறியவர் மகாதிர்தான்.

தேசியப்பள்ளி தனது குழந்தையை மலேசியனாக உருவாக்காது என்று கூறி மரீனா மகாதிர் அவருடைய குழந்தையைத் marinaதேசியப்பள்ளியிலிருந்து மீட்டுக்கொண்டார். தற்போது தேசியப்பள்ளிகள் இஸ்லாமிய மயமாக்குதலின் மையமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது பகிரங்கமாகக் கூறப்படும் புகராக இருக்கிறது.

.இனவாத நஞ்சைக் கக்கியே ஆட்சியில் அமர்ந்திருக்கும் அம்னோக்காரர்கள் தேசிய ஒற்றுமையை வளர்க்க தாய்மொழிப்பள்ளிகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள். தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவது அம்னோவின் இறுதிக் குறிக்கோள். இதன் வழி அம்னோக்காரர்கள் அவர்களின் ஒரே இன, ஒரே மொழி, ஒரே மலேசியாவை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

 

வலிப்பு வரும்போது வழக்கம்போல் பலர் குதிக்கலாம். “உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு” என்று முழங்கலாம்.

ஆனால், இனவாதிகளான அம்னோக்காரர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். மலாய் தேசியவாதிகளால் தூண்டப்பட்டு 1950களில் உருவாக்கப்பட்ட “இறுதிக் குறிக்கோள்” (Ultimate objective) என்ற கல்விக் கொள்கையை அவர்கள் இன்று வரையில் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

நாட்டின் முதலாவது கல்வி அமைச்சரான அப்துல் ரசாக்கிலிருந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற முகைதின் யாசின் வரையில் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

 

அம்னோவின் இறுதிக் குறிக்கோளை நஜிப் மறுக்கவில்லை

 

இதில் ஓரிருவர் தேர்தல் நோக்கத்திற்காக மக்களை, குறிப்பாக சீனர்களை, ஏமாற்றும் எண்ணத்துடன் “இறுதிக் குறிக்கோள்” வழக்கற்றுப்போன கொள்கை என்றெல்லாம் கூறியுள்ளனர்.

1hishamமார்ச் 7, 2007 ஆம் ஆண்டு, அன்றையக் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் சின் சியு நாளிதழ் அலுவலகத்திற்கு தானாகவே சென்று “ரசாக்” அறிக்கையில் கூறப்பட்டுள்ள “இறுதிக் குறிக்கோள்” என்ற கொள்கை “வழக்கற்றுப்போன” கொள்கை என்றும் சீனர்கள் அக்கொள்கை குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஹிசாமுடின் தமிழ்ப்பள்ளிகள் மீதான இறுதிக் குறிக்கோளின் தாக்கம் குறித்து எதுவும் கூறவில்லை. அப்போது அவரது கவனமெல்லாம் சீன வாக்காளர்கள்தான்.

சற்று கவனியுங்கள்: மார்ச் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த ஹிசாமுடின் இறுதிக் குறிக்கோள் வழக்கற்றுபோனது என்றார். ஏப்ரல் 2008 இல் கல்வி அமைச்சரான முகைதின் யாசின் இறுதிக் குறிக்கோள் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது என்று கூறினார்.

மார்ச் 8, 2008 இல் வாங்கிய அடியால் இன்னும் திணறிக்கொண்டிருக்கும் அம்னோ தலைவர் நஜிப் ரசாக், முகைதின் யாசினை அவர் விடுத்த அறிக்கைக்காக கண்டிக்கவில்லை. தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் அம்னோவின் இறுதி குறிக்கோளை நஜிப் மறுக்கவில்லை. முகைதின் யாசின் அறிக்கையால் ஏற்படப்போகும் பாதிப்பைச் சரிகட்டும் நோக்கத்தில் அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்டால்தான் இறுதிக் குறிக்கோள் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பூசிமெழுகுவதில் வல்லவராகி வருவதாக எண்ணிக்கொண்டிருக்கும் அவர் கூறினார்.

ஆனால், இதே நஜிப் ரசாக், மார்ச் 6, 2008 இல் கோலாலம்பூரில் நடந்த மஇகா கூட்டத்தில் தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் வேறுபாடு இருக்காது என்று உறுதி கூறினார்! இந்த உறுதிமொழி இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே.

இவர்களுக்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்த மூசா முகமட் அக்டோபர் 1, 2000 இல் தாய்மொழிப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட சமூகங்களின் பொறுப்பு என்று அப்பட்டமாக கூறியுள்ளார்.

அதே அடிப்படையில், ஆகஸ்ட் 2011 இல் கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம். அவர்கள் தங்களுக்கான (பள்ளிகளுக்கான) இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?”, என்று கேட்டார்.

அடுத்து, இடத்தைத் தேடிக்கொண்டவர்கள், அதில் பள்ளிக்கான கட்டடம் கட்டிக்கொள்ள முடியாதா?, பள்ளிக்கூடம் கட்டியவர்கள் muhyiddinஆசிரியர்களை அமர்த்த முடியாதா?, ஆசிரியர்களை அமர்த்தியவர்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாதா? என்றெல்லாம் முகைதின் நிச்சயம் கேட்பார். ஏனென்றால், இப்படியும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடையலாம்.

60 சுயேட்சை சீனமொழி இடைநிலைப்பள்ளிகளைப் பராமரிப்பதற்குச் செல்வந்தர்களான சீனர்களே திணறும்போது, இந்தியர்கள் என்ன செய்ய முடியும் என்பதை முகைதின் அறிவார்.

தேசியப்பள்ளிகளை மலாய் இனத்தவர்கள் பராமரிக்கவில்லை. அதனைச் செய்வது அரசாங்கம். ஏனென்றால், இன்றையச் சூழ்நிலையில் எந்த ஒரு சமூகமும் தன் சுய பலத்தில் அதன் மொழிப்பள்ளிகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பது அம்னோக்காரர்கள் அறியாதல்ல.

மக்களின் வரிப்பணத்தில் ஒரு மொழிப்பள்ளிக்கு அனைத்தையும் வழங்கும் அரசாங்கம் மற்ற மொழிப்பள்ளிகளுக்கு அதனை மறுக்கிறது. அதுதான் அரசாங்கத்தின் அப்பட்டமான கல்விக் கொள்கை. அதுவும் மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக.

அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் கைவைத்தால், தாய்மொழிப்பள்ளிகள் தானாகவே மடியும். அரசாங்கம் அவற்றை அதிகாரப்பூர்வமாக மூட வேண்டியதில்லை என்ற வியூக அடிப்படையில் அம்னோ அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

 

இறுதிக் குறிக்கோள்

 

1950களில் மலாய் இனவாதிகளை அதிகமாகக் கொண்டிருந்த பார்ன்ஸ் குழு நாட்டில் ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளை போதனை மொழியாகக் கொண்ட தேசிய பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சீன மற்றும் தமிழ் மொழிகளைப் போதனா மொழியாக கொண்ட தாய்மொழிப்பள்ளிகள் கட்டங்கட்டமாக அகற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.

இப்பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நாட்டுப்பற்று கேள்விக்குரியதாகும் என்றும் அக்குழு கூறியிருந்தது.

அக்குழு செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் ரசாக் அறிக்கை (Razak Report) தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசியப்பள்ளியோடு தாய்மொழிப்பள்ளிகளும் தொடரும் என்ற உடன்படிக்கை உருவாயிற்று. ஆனால், இறுதிக் குறிக்கோள் கைவிடப்பட்டதாக இன்று வரையில் அறிவிக்கப்படவில்லை.

 

மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்

 

கல்வி அமைச்சர் அப்துல் ரசாக்கை தொடர்ந்து இன்று வரையில் ஒவ்வொரு கல்வி அமைச்சரும், அன்வார் இப்ராகிம் உட்பட, தாய்மொழிக் கல்விக்குச் சாவு மணி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சாவு மணி அடிக்கும் கொள்கையைத் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பகிரங்கமாக செயலாக்க முனைந்தால், தங்களுடைய பதவிக்கும் அதே மணி அடிக்கப்படலாம் என்பதை உணர்ந்துள்ள அம்னோக்காரர்கள் தாய்மொழிப்பள்ளிகளுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை இறுக்கிப்பிடிப்பதன் மூலம் தங்களுடைய இறுதிக் குறிக்கோள் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்கம் செய்து வருகின்றனர்.

இதனைச் சற்று கவனிக்க வேண்டும். மலாய், சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்:

6 ஆவது திட்டம் (1991-1995)-மலாய் பள்ளி 89.72%; சீனப்பள்ளி 8.14%; தமிழ்ப்பள்ளி 2.14%.

7 ஆவது திட்டம் (1996-2000)-மலாய் பள்ளி 96.54%; சீனப்பள்ளி 2.44%; தமிழ்ப்பள்ளி 1.02%.

8 ஆவது திட்டம் (2001-2005)-மலாய் பள்ளி 96.10%; சீனப்பள்ளி 2.73%; தமிழ்ப்பள்ளி 1.17%.

9 ஆவது திட்டம் (2006-2010)-மலாய்ப்பள்ளி 95.06%; சீனப்பள்ளி 3.60%; தமிழ்ப்பள்ளி 1.34%.

இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனமொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த பிரிட்டீஷ் காலனித்துவ மலாயா அரசாங்கமும் இதைப் போன்ற நிதி ஒதுக்கீட்டு கொள்கையைக் கொண்டிருந்தது. 1949 ஆம் ஆண்டில் அமல்படுத்திருந்த நிதி ஒதுக்கீட்டை கீழே காணலாம்:

ஆங்கிலப்பள்ளி மாணவனுக்கு $188.88; மலாய்ப்பள்ளி மாணவனுக்கு $66.84; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு $55.84; சீனப்பள்ளி மாணவனுக்கு $8.72!

 

உயிர்த் தியாகத்திற்கு “கோட்டா இல்லை”

 

சீனப்பள்ளி அழிந்தால், தமிழ்ப்பள்ளியும் அழிந்துவிடும் என்பது காலனித்துவ மலாயா மற்றும் சுதந்திர மலேசிய அரசுகளின் கணிப்பு!

சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்நாட்டு குடிமக்கள். மலாய்ப்பள்ளி மாணவர்களைப்போல் அவர்களுக்கும் கடமைகள் உண்டு. கேள்வி: உரிமைகள் உண்டா?

தேவைப்பட்டால் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அக்கடமையிலிருந்து எவருக்கும் விதிவிலக்கு கிடையாது. நாட்டிற்காக இத்தனை விழுக்காடு சீனர்கள், இத்தனை விழுக்காடு இந்தியர்கள் போர்க்களம் செல்ல வேண்டும் என்ற “கோட்டா” கிடையாது. தேசியச் சேவைக்கு தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞனும் போர்க்களம் செல்ல வேண்டும், தேவைப்பட்டால் மடிய வேண்டும்.

அதே இளைஞர்கள் பள்ளி மாணவர்களாக இருக்கையில், அவர்களது உரிமைகள் “கோட்டா” முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

கடமைக்கு “கோட்டா” இல்லை. உரிமைக்கு “கோட்டா” உண்டு! ஏன் இந்த வேறுபாடு?

 

“தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே”

 

samy-vellu“கோட்டா” முறையை அம்னோக்காரர்கள் மட்டும் நம் மீது திணிக்கவில்லை. இந்திய மலேசியர்களின் உரிமையை அந்த அடிப்படையிலாவது “கொஞ்சம் பார்த்து கொடுங்கள்” என்று சென்னையில் ஆட்டோக்காரர்கள் கேட்பதுபோல நமது இந்தியத் தலைவர்களும் கெஞ்சுகிறார்கள்.

“பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையையும் பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும் என்பதை கல்வி அமைச்சுடனும், அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், சில வேளைகளில் போராடியும் பெற்று வந்திருக்கிறோம்”, என்று 1992 ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது ச.சாமிவேலு கூறியுள்ளார்.

வரி கட்டும் கடமையுடைய இந்தியர்களின் எண்ணிக்கையும் போர்க்களம் செல்ல வேண்டிய கடமையுடைய இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்திய மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கோரப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரிங்கிட்களை வீணாக்கும் மலேசிய அரசாங்கத்திடம் முழு உதவி பெறாத தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் அரசாங்கப்பள்ளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது சிறிய தொகைதான்.

ச.சாமிவேலு கூறுகிறார், “தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை தற்போது நாம் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை, பள்ளிகளை Bantuan Modal, Bantuan Penuh என்ற பள்ளிகளின் பாகுபாட்டை களைவதாகும். நம்மைப் பொறுத்தவரை தேவைப்படும் இடங்களில் எல்லாம் Bantuan Penuh அதாவது, அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெறக் கூடிய பள்ளிகளாக நிதி பெற்று நிலத்தை வாங்குவதாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாட்டில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த நிதியில் தமிழ்ப் பள்ளிகளை Bantuan Penuh பள்ளிகளாக மாற்றத் தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே. எனவே, இந்தக் குறையைப் போக்குவதில் ம.இ.கா. தொடர்ந்து கல்வி அமைச்சுடனும், அரசாங்கத்துடனும் போராடி வரும்.”

1992 ஆம் ஆண்டில், அமைச்சர் ச.சாமிவேலு இது குறித்து கல்வி அமைச்சுடன் தொடங்கியப் போராடத்திற்கு ஆகஸ்ட் 2010 இல் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அவரின் பதிலைக் கேள்வியாக அளித்துள்ளார்: “அவர்கள் (இந்தியர்கள்) தங்களுக்கான இடத்தைத் (பள்ளிக்கான இடத்தை) தேடிக்கொள்ள முடியாதா?”

இதற்கு முன்னதாக 1.10.2000 இல் அன்றையக் கல்வி அமைச்சர் மூசா முகமட் கூறிய கருத்தும் மேலே தரப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்க வந்தவர்களுக்கு இதைக்கூடச் சொல்ல வேண்டியுள்ளது என்று முகைதின் யாசின் கூறுவதுபோல் அவரின் பதில் இருக்கிறதல்லவா?

2005 ஆம் ஆண்டில், ச. சாமிவேலு தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் முழு உதவி பெறும் அரசாங்கப் பள்ளிகளாக்கப்பட வேண்டும் என்பதைச் சற்றுக் கடுமையாகவே வலியுறுத்தினார்.

“இந்தியர்கள் ஏழைகள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். அவர்களின் ஊதியம் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்குக்கூட போதியதாக இல்ல. அவர்களால் எப்படி தமிழ்ப்பள்ளிக்கூடங்களை கட்ட முடியும்?”, என்று சுட்டிக்காட்டிய அவர் காலத்திற்கு ஒவ்வாத பழையச் சட்டங்களை மாற்ற வேண்டும், அரசாங்கம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை நிர்மாணித்து பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கும் இறுதிக் குறிக்கோளைக் கொண்டுள்ள அம்னோ அதன் கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ச. சாமிவேலு தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு புதிய வியூகத்தை கண்டுள்ளார். அதுதான் தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுத்தல்

56 ஆண்டுகால சுதந்திர மலேசிய வரலாற்றில் நாட்டை ஆண்டுவரும் கூட்டணியின் பங்காளியான ச.சாமிவேலு தமிழ்ப்பள்ளிகள் அவரது அரசாங்கத்தால் அனாதைகளாக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த இயலாமல் தமது கட்சியின் கிளைகள் அவை இயங்கும் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரின் கோரிக்கையைப் பின்பற்றி பலர் தமிழ்ப்பள்ளிகளை கோயில்கள் தத்தெடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

சாமிவேலு கேட்காத நேரமில்லை, அனுப்பாத மகஜர் இல்லை. ஆனால் கேட்டது கிடைப்பதில்லை. கேட்டுக் கேட்டு அலுத்துப்போன ச.சாமிவேலு அரசாங்கத்திடம் இனிமேல் எதையும் கேட்கப் போவதில்லை. கடையை மூடுவோம் (“We won’t ask anything from the government anymore. We will close shop.”) என்று விரக்தியின் உச்ச கட்டத்திலிருந்து அவர் கதரியுள்ளார்.

ச.சாமிவேலு கடையை மூட மாட்டார் என்பது அம்னோவிற்கு தெரியும். அப்படியே அவர் மூட முயற்சித்தாலும் அவருடைய சீடர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் பிழைப்பிற்கு அக்கடை அடித்தளமாகும்.

 

தமிழ்ப்பள்ளிகள் அவ்வளவு மோசமாக இல்லை!

 

அதே நேரத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கில் மூச்சு விடும் போதெல்லாம் அரசாங்கம் வாரி வழங்குவதாக அம்னோவின் தயவில் வாழ்க்கை வண்டியை ஓட்டும் சில இந்தியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்தியர்களின் பிரச்னைகளை, முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளை, கவனித்து களையெடுக்கப்போவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் அமைச்சரவையின் சிறப்புக்குழு ஒன்றை அன்றையக் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் தலைமையில் அமைத்திருந்தது.

அக்குழுவில் இரு இந்திய துணை அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்- எஸ்.கே.தேவமணி மற்றும் டி.முருகையா.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர், ஹிசாமுடின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் அந்த இரு துணை அமைச்சர்களும் இருந்தனர்.

“சில தரப்பினர் வர்ணிப்பதுபோல தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று சிறப்புக் குழு அறிந்துள்ளது (“… the committee found that the overall situation at Tamil primary schools was not as bad as painted by some parties.”) என்று ஹிசாமுடின் பகிரங்கமாக கூறினார்.

கூட இருந்த இரு துணை அமைச்சர்களும் புன்னகை பூத்தனர். ஆனால், டி. முருகையா இக்கூட்டம் நடந்த நாளிலிருந்து சரியாக 16 நாள்களுக்கு முன்பு “நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது”, (“The condition of many Tamil schools in the country was very depressing”) என்று கூறியிருந்தார்.

 

ஏன் இந்த பித்தலாட்டங்கள்?

 

சில சீன மற்றும் இந்தியர்களுக்கு பதவி பிச்சை போடும் அம்னோ இந்நாட்டிலுள்ள சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்கான இறுதிக் குறிக்கோளைக் கொண்டுள்ளது என்பதை இத்தலைவர்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக கூறாமல் மறைக்கிறார்கள். அக்கொள்கையை அம்னோ அகற்ற வேண்டும் என்று இவர்கள் பகிரங்கமாக கூறுவதில்லை.

அம்னோவின் இந்த தாய்மொழிப்பள்ளி அழிப்புக் கொள்கையை மானியம் என்ற பெயரில் மூடிமறைக்கிறார்கள்.

இந்தப் பள்ளிக்கு மானியம், அந்தப் பள்ளிக்கு மானியம் என்ற அறிவிப்புகளுக்குக் குறைவில்லை. அறிவிக்கப்பட்ட மானியம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்வி. வழங்கப்பட்ட மானியம் முழுமையாக பள்ளிக்குக் கிடைத்ததா என்பது வேறு கேள்வி.

மானியம் வழங்கும் கொடை வள்ளல் அம்னோ அரசாங்கம் அதன் ஐந்தாண்டு திட்டங்களில் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதிக்கீட்டில் மலாய்ப்பள்ளிகளுக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ஏன் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50? இக்கேள்வியை எந்த ஓர் இந்திய அமைச்சரோ, ஏன் ஒரு சீன அமைச்சரோ, கேட்டதுண்டா?

தாய்மொழிப்பள்ளிக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் இவ்வளவு கெடூரமான வேறுபாடு காட்டுகிறது என்பதை அறியாத அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால், அறிந்தும் அறியாதவர்கள்போல் நடிக்கிறார்கள் என்றால், பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

ஒரு கெராக்கான் துணை அமைச்சரிடம் இக்கேள்வி கேட்கப்பட்டபோது அவர் விழித்த விழியைக் கண்டு ஆந்தை கூட பயந்து விடும். அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறான வேறுபாடுகளை அமல்படுத்தி வந்தால், சீன, இந்திய மாணவர்களில் பலர் “பெந்தோங் காளியாக” மாறுவர், மாறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஓர் இந்திய அமைச்சரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளின் தரம் மலாய்ப்பள்ளியின் தரத்திற்குச் சமமாக உயரும்போது மேம்பாட்டு நிதி ஒதுக்கீடும் மலாய்ப்பள்ளிக்கான ஒதுக்கீட்டிற்கு சமமாக உயரும் என்றார் அந்த அமைச்சர்.

நிதி ஒதுக்கீட்டிற்கு தரம்தான் அடிப்படை என்று அந்த அமைச்சர் கூறியதால், சீனப்பள்ளிகளின் தரம் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தைவிட உயர்ந்ததா என்ற அடுத்த கேள்விக்கு அவர் “ஆம்” என்று பதிலளித்தார். அதன் அடிப்படையில் சீனப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீட்டைவிட கூடுதலாகத்தானே இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் அவர் “ஆம்” என்று உறுதியாகக் கூறினார்.

அப்படியானால், தரம் குறைவான தமிழ்ப்பள்ளிக்கு ரிம10.95 தும் தரம் உயர்ந்த சீனப்பள்ளிக்கு ரிம4.50 தும் ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் என்று அவரிடம் வினவியபோது, அதிர்ச்சி ததும்பிய அவரது முகத்தைக் காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது!

மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு சீனப்பள்ளிகளுக்கு அளிக்கப்படுகிறது. மசீச அமைச்சர்களுக்கும் பதவி முக்கியமாதலால், இவ்விவகாரம் குறித்து அவர்களும் மௌனம் சாதிக்கின்றனர். இக்கேள்வியை தொலைபேசி வழியாக செவிமடுத்த ஒரு சீன அமைச்சர் பதில் கூறாமல் தொலைபேசியை கீழே வைத்து விட்டார்.

அச்சமூகத்திடம் ஓரளவிற்கு பொருளாதார வசதி தற்போதைக்கு இருப்பதால் சீனமொழிப்பள்ளிக்கூடங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன என்ற நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

சீனமொழிப்பள்ளிகளுக்காக அச்சமூகம் பல பில்லியன்களை அளித்துள்ளது. ஆனால், அவர்கள் களைத்துப் போய்விட்டனர். அவர்களால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க இயலாது என்று டாக்டர் குவா கியா சூங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

52 ஆயிரம் கோடி ரிங்கிட்டை விழுங்கிவிட்டு நாங்கள் இன்னும் ஏழைகள்தான் என்று தம்பட்டம் அடிக்கும் அம்னோக்காரர்களின் தலைவர்களான மகாதீரை ஒரு “தீரர்” என்றும், படாவியை “என்றுமே எங்கள் தலைவர்” என்றும், நேற்று வந்த நஜிப்பை “நான் கண்ட பிரதமர்களில், புரிந்துணர்வு உடையவர்” என்றும் வாழ்த்தி ஐஸ் வைத்தால் கருணை மழை பொழிவார்கள் என்று இந்திய தலைவர்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோள் திட்டம் இன்னும் தொடர்கிறது என்பது தெரிந்திருந்தும் செப்டம்பர் 17, 2010 இல் “தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக ஒன்றும் செய்யப்படவில்லை என்று அரசாங்கத்தைக் குறைகூறக்கூடாது. அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவி புரிய அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கான தீர்வை நாம் முதலில் வழங்க வேண்டும்” (“The government should not be blamed for not doing much for Tamil schools. The government is ready to assist in solving the problem. But we must give that solution first.”), என்று கூறியவர் மஇகா தலைவராக இருந்த ச.சாமிவேலு.

இக்கூற்றை என்னவென்று கூறுவது? கடந்த முப்பது ஆண்டுகளாக இவர் வழங்காத தீர்வுகளா!

1992 ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு “தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே” என்ற தீர்வை இவர் வழங்கியுள்ளார். ஒரு வேளை, அந்த நிதியை இந்தியச் சமூகமே வழங்கியிருந்தால், அரசாங்கம் பிரச்னையைத் தீர்த்திருக்கும் என்று இவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2005 ஆம் ஆண்டில், இந்தியர்கள் ஏழைகள். தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. பந்துவான் மோடல், பந்துவான் புனோ என்பதெல்லாம் பழையச் சட்டங்கள். காலம் மாறிவிட்டது. தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கம்தான் கட்டி பராமரிக்க வேண்டும் என்று பூச்சோங்கில் இடி முழக்கத்துடன் தமது தீர்வைக் கூறினார்.

இவர் வழங்கிய தீர்வுகள் இருக்கட்டும். மார்ச் 6, 2008 இல் இவரின் புரிந்துணர்வு மிக்கத் தலைவர் நஜிப் ரசாக் பொதுத் தேர்தலை முன்னிட்டுnajib கோலாலம்பூரில் நடந்த மஇகா கூட்டத்தில் உரையாற்றியபோது தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை முன்வைத்தார்: “தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் வேறுபாடு இருக்காது” என்றார். ஆனால், அதே நஜிப் 2012 இல் தாய்மொழிப்பள்ளிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடாது என்றார். ஆக, தீர்வு என்று கூறுவது ஒன்று, செயல்படுத்துவது வேறொன்று.

மக்களுக்குப் பித்தம் ஏறினால், அவர் என்ன செய்வார்கள் என்பதை மார்ச் 8 இல் காட்டியுள்ளனர் என்பதை அரசியல் கட்சி தலைவர்கள் மறந்து விட்டு தீர்வு வருகிறது, தீர்வு வரும் ஆனால் வராது என்று கூறிக்கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம் என்று செயல்படக்கூடாது.

 

நிலம், நிதி உண்டு, மனம் உண்டா?

 

மலாயாவின் பல இலட்சக்கணைக்கான ஏக்கர் வெப்ப மண்டல காட்டை தங்களுடைய வெறும் கைகளைக் கொண்டே அழித்து இந்நாட்டை சுவர்ண பூமியாக்கிய இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு நிலம் இல்லை என்ற கூற்றை அம்னோக்காரர்கள் நிறுத்த வேண்டும்.

அம்னோக்காரக்களுக்கு ஆமாம் சாமி போடும் வேலையை இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் நிறுத்த வேண்டும். நிறுத்துவார்களா?

நிலம் இருக்கிறது. அதைக் கையகப்படுத்துவதற்கு நில கையகச் சட்டம் 1960 இருக்கிறது.

நிதி ஒரு பிரச்னையே இல்லை. மிகச் சிறிய தொகைதான் தேவைப்படுகிறது. ஒரு கறிப்பாப்புக்கு ரிம3.40 கொடுக்கும் அளவிற்கு வளமுடைய மலேசிய அரசாங்கத்திற்கு ஒரு கிராமத்திற்கு ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நிதி உண்டு.

மனம் உண்டா? இதுதான் கேள்வி. நிச்சயமாக, அம்னோ அரசாங்கத்திற்கு அந்த மனம் கிடையாது.

 

உண்டியல் ஏந்துவோம்!

 

அம்னோ விரும்புகிறதோ இல்லையோ, அரசமைப்புச் சட்டம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டி அவற்றைப் பராமரிக்கும் கடமையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

அரசமைப்புச் சட்ட விதிகள் 12 (1), 74 மற்றும் 80 ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டி அவற்றை பராமரிக்க வேண்டியது மலேசிய அரசாங்கத்தின் பொறுப்பு என்று பலர் கூறியுள்ளனர்.

மஇகாவின்   முன்னாள் பொதுச்செயலாளரும் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான ஜி. வடிவேலு, தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டுவதும் அவற்றைப் பராமரிப்பதும் அரசாங்கத்தின் கடமை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

அதே நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார் அரசமைப்புச் சட்ட வல்லுனர் நிறைநிலைப் பேராசிரியர் சாட் சலீம் பரூகீ.

ஆனால், தாய்மொழிப்பள்ளி மாணவர்களின் உரிமைகளுக்குத் தடையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களில் முக்கியமானவர்கள் அம்னோக்காரர்களும் அவர்களை ஆதரிக்கும் இதர இன கட்சிகளின் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் கட்சிகளின் தொண்டர்களும்தான்.

மேற்கூறப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டு தேசியப்பள்ளிகளே பெற்றோர்களின் “தேர்வு பள்ளி”யாக (school of choice) ஆக்கப்படும் என்ற இறுதிக் குறிக்கோள் கொள்கையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என்ற திட்டம் (MEB 7-17)  அடங்கிய மலேசிய கல்விப் பெருந்திட்டம் (2013-2025) வரையப்பட்டதில் பங்காற்றியவர்கள், அப்பெருந்திட்டத்திற்கு ஏற்ப, அதனை நிறைவு செய்யும், அதற்கு முரணற்றதான (“In line with the National Education Blueprint – Complementing and not contradicting.”) மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு அறிக்கையை தயாரித்தவர்கள், “தாய்மொழிப்பள்ளிகள் நிதி ஒதுக்கீட்டிற்காக அதிகமாக அரசாங்கத்தை நம்பி இருக்கக்கூடாது என்றும், தாய்மொழிப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு Tamil schools our choice pm and rajendranசெய்துள்ளது. அப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனியார் துறையின் பங்களிப்பை நாடுவதற்கான நேரம் வந்து விட்டது” என்றும் பிரதமர் நஜிப் நவம்பர் 1, 2012 இல் அறிவித்திருந்ததைச் செயல்படுத்துவதற்கான் அமைப்பு தேவைப்படுகிறது என்பதால் அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் ஒதுக்கீடுகள் மற்றும் மானியங்கள் தவிர, சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு மன்றம் அமைத்துள்ளது போன்ற ஓர் அறக்காப்பு நிதியம் அமைத்து  குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்களிடமிருந்து மாதாந்திர நன்கொடைகள்  திரட்டுவது மற்றும் கோயில்களில் நிதி திரட்டுவது ஆகியவற்றின் வழி கல்விக்கு ஆதரவு அளிப்பது என்ற பரிந்துரையைத் தயார் செய்து எந்தக் கட்சியின் மற்றும் எந்த அரசாங்கத்தின் தலைவர் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடாது என்று கூறினாரோ அவரிடமே பெப்ரவரி 14, 2014 இல் வழங்கியவர்கள், இப்போது “தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என்ற தலைப்பில் நாட்டின் பல இடங்களில் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்!

இச்சந்திப்புகளின் நோக்கம்: “1. குழந்தைகள் தாய்மொழி வழி கல்வியைப் பெறுவதை உறுதி செய்தல். 2. தாய்மொழியின் மாண்பினை அறியச் செய்தல். 3. தமிழர் கலை, பண்பாடு சமயம் ஆகியவற்றை நாட்டில் நிலைபெறச் செய்தல். 4. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். 5. மாணவர்களை மேல்நிலைத் திறனாளிகளாக உருவாக்குதல்.”

இந்த ஐந்து நோக்கங்களில் “தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்” என்பது உருப்படினாது, வரவேற்கப்பட வேண்டியது. இந்த நோக்கத்தில் தீவிரம் காட்டப்படுவதை கல்வி அமைச்சு விரும்பாது. அதன் நோக்கமெல்லாம் தேசியப்பள்ளியை பெற்றோர்களின் தேர்வுப் பள்ளியாக்கி சீன மற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களை தேசியப்பள்ளிக்கு இழுப்பதுதான். ஆகவே, இதில் தீவிரம் காட்ட வேண்டியது மிக அவசியம்.

இதர நான்கும், கண்துடைப்பு வேலை. ஏன்? இந்த நான்கு நோக்கங்களுக்கும் இன்றைய தாய்மொழிக் கல்வி அமைவுமுறையில் இடமுண்டு. ஆனால், அவை தீவிரமாக பின்பற்றபடுகின்றனவா என்பது கேள்வியாகும்.

தற்போதைய கல்வி அமைவுமுறை கட்டமைப்பு நிலைநிறுத்தப்படும் என்று மலேசிய கல்வி பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

“The diversity of cultures and peoples that make up the rakyat is fundamental to the Malaysian identity and a source of competitive advantage in today’s increasingly MEB-2013-2025globalised world. In recognition of this, the current structure of the Malaysian education system will remain. In particular, National-type primary schools where the medium of instructions is Chinese language and Tamil will be maintained. The status and fundamental identitiy of these schools will be retained. As part of the national education system, they will continue to enjoy the support of the Ministry.” (MEB 2013-2025:7-18)

மேற்கூறப்பட்ட நான்கு நோக்கங்களுக்கும் இடமில்லை என்று மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் கூறப்படவில்லை. தற்போதைய தகுதியும் அடையாளமும் நிலைநிறுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கான கல்வி அமைச்சின் தொடர்ந்த ஆதரவு இருக்கிறதா? எந்த அளவில் இருக்கிறது? எவ்வளவு காலத்திற்கு இருக்கும்? தேசியப்பள்ளிக்கும் தாய்மொழிப்பள்ளிக்கும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வு ஏன்? இவற்றுக்கான பதில் இப்பெருந்திட்டத்தில் இல்லை.

இவ்வாறான கேள்விகளை “தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” சந்திப்புக் கூட்ட ஏற்பாட்டாளர் எழுப்பி மக்களிடையே விழிப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அவ்வாறான நோக்கம் இச்சந்திப்புக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு இல்லை.

Tamil school our choice in Tamilதாய்மொழிப்பள்ளிக்கான நிதியைத் திரட்ட தனியார் அறக்காப்பு நிதியம் அமைக்கும் மற்றும் கோயில்களில் உண்டியல் ஏந்தி நிற்கும் திட்டங்களைத் தயாரித்து தாய்மொழிப்பள்ளிகளுக்கு சட்டப்பூர்வமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுவதைத் தவிர்க்கும் பிரதமர் நஜிப்பிடமே வழங்கியவர்களிடமிருந்து உரிமைக்கான கோரிக்கை பற்றிய உண்மையான  நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துக் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அவர்களுடைய நோக்கம் பிரதமர் துறையில் தங்களுக்கு இருக்கும் நாற்காலியை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால், அதுவும் நிச்சயமற்றது என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், முகைதின் யாசின் அம்னோவின் இறுதிக் குறிக்கோளான தாய்மொழிக் கல்வி அழிப்பின் குரல். இருந்தாலும், இருக்கும் வரையில் அனுபவிப்போமே என்பது அவர்களின் இறுதி நோக்கம்.

ஆகவே, தாய்மொழிப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய குழந்தைகளின் உரிமைக்காகப் போராட இந்த விவகாரத்தைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களல்ல. அவர்களுக்கு கடமைகள் இருப்பதுபோல் மறுக்க முடியாத உரிமை உண்டு. அந்த உரிமையை மறுக்கும் அரசியல்வாதி, அவர் யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, தூக்கி எறியப்பட வேண்டும். இது தங்களுடைய குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் ஆற்ற வேண்டிய கடமை. இக்கடமையைச் சுயநலவாதிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது.