கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம்

K. Arumugam_Suaramதிரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து  நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து வருபவர். சுவராம் எனப்படும் மலேசியாவின் மனித உரிமை இயக்கத்தின் தலைவரான இவர்,  பல முக்கிய நிறுவனங்களில் பொறியியலாளராக பணிபுரிந்தவர். வணிக நிர்வாக துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். செம்பருத்தி இணைய இதழின் ஆசிரியரான அவரோடு இடம்பெற்ற ஓர் உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.

கே. மலேசியக் கல்விச் சூழல் குறித்த உங்கள் பார்வை எவ்வாறானது?

மலேசியக் கல்விச் சூழல் தற்போது ஒரு மோசமான சூழலை எட்டியுள்ளது. பணம் உள்ள்வர்கள் சிறந்த கல்வியை வாங்க இயலும். இல்லாதவர்கள் இரண்டாம்தர கல்வியைத்தான் பெற இயலும். இதற்குக் காரணம் நமது கொள்கைகள். கல்வி ஒரு நாட்டின் அடிக்கல், அதுதான் அந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். மக்களுக்கு கல்வி என்பதை நாம் இப்போது வியாபாரமாக ஆக்கியுள்ளோம். கல்வி என்பது ஒருவரை மனிதனாக மாற்றம் செய்து அறிவாற்றல் தொழில்நுட்பம் வழி நாட்டை முன்னெடுத்து செல்லும் என்பது போய் அதன் வழி எப்படி பணம் செய்வது என்பதுதான் நோக்கமாக உருவாகியுள்ளது. கல்விக்காக ஏறக்குறைய நாட்டின் 25 விழுக்காடு பணத்தை செலவு செய்கிறோம். அதன் வழி கல்விக்காக ஒரு தரமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ஆனால் அதன் வழி உருவாக்கப்படும் கல்வியின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது.

கே. நமது கல்விக் கொள்கை பற்றிய கருத்து எப்படி உருவாக்கம் கண்டது? 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளரும் நாடுகளிடையே உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளின் குறிக்கோள்   ஒரு தேசிய உணர்வு உருவாக வேண்டும்  என்பதாகும். அதனை அவர்கள் ‘தேசிய அரசிற்கான கோட்பாடு’ என்பார்கள். தேசிய அரசு என்பது தேசிய தன்மை கொண்ட மக்களை உருவாக்குதல் எனப் பொருள்படும். எனவே, கல்வியின் வழி ஒரே மொழி, அதாவது தேசிய மொழியை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. மற்றபடி பாடத்திட்ட உள்ளடக்கத்தில் எல்லாம் நாம் பெரும்பாலும் பிரிட்டிஷாரையே பின்பற்றியுள்ளோம். ஆனால், தாய்மொழிக் கல்விக்காக சீனர்களும் தமிழர்களும் போராடியதன் காரணமாக அவையும் ஏற்றுக்கொள்ளப் பட்டன.

கே. ஒரு கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கமானது ஒரு முழுமைப்பெற்ற மனிதனை உருவாக்குதல் என்பதாகவே இருக்கிறது. மலேசிய கல்விக் கொள்கை ஒரு முழுமைப்பெற்ற மனிதனை உருவாக்குகிறதா?

கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம் ஒரு மாணவனுக்கு எழுத, வாசிக்க, கணிதம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதன்பின், மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றல் மற்றும் திறன்கள்  ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் ஆக்கத்திறன் போன்றவற்றை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடத்தும் ஒரு தனித்தன்மையுடைய திறன்கள் அடங்கியிருக்கலாம். சிலர் விளையாட்டில் சிறந்து விளங்கலாம். ஓவியத்தில் சிறந்து விளங்கலாம். கைவினைத்திறனில் சிறந்து விளங்கலாம். சிலருக்கு மேம்பட்ட சிந்தனையாற்றல் இருக்கும். பொருளியல், கணிதம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இம்மாதிரியான பலதரப்பட்ட குழந்தைகள் இருக்கின்ற ஒரு நாட்டில் ஒவ்வொரு குழந்தையின் திறனும் முழுமையடைவதற்கு, ஒரு தரத்திலிருந்து இன்னொரு தரத்திற்குச் செல்வதற்கு அல்லது ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்வதற்கு வடிவமைக்கப்படும் கல்விக் கொள்கையானது உதவ வேண்டும்.

இதைத்தான் முழுமையான அல்லது முழுமைப்பெற்ற அணுகுமுறை என்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் கல்வியோடு சேர்த்துக் இப்படியான தனித்திறமைகளை வளர்த்தெடுக்ககூடிய சூழ்நிலையைக்  கொண்டதாக  இருக்க  வேண்டும். மிக அண்மையில் பரவலாக ஒரு வீடியோ காணொலி அனைவரின் பார்வைக்கும் பகிரப்பட்டிருந்தது. ஒரு மாணவன் சொல்கிறான். ‘ நான் கணிதத்தில் 100 புள்ளிகள் எடுக்கிறேன். தமிழில் 50 புள்ளிகள் எடுக்கிறேன். கணித ஆசிரியர் என்னை அறிவாளி என்கிறார். தமிழ் ஆசிரியர் என்னை முட்டாள் என்கிறார்.நான் உண்மையிலேயே யார் என்ற கேள்வியை அந்த மாணவன் முன்வைத்திருந்தார். கல்வி என்பது இப்படியான குழப்ப நிலையை உருவாக்காமல் தனித்திறமைகள் முழுமைப்படுத்துகிற நிலையில் கல்விக் கொள்கைகள் இருக்கும் பட்சத்தில் ஆற்றல்மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். இப்படியான அடிப்படை சிந்தனை உடையவர்கள் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டால் முழுமைப்பெற்ற மனிதனை உருவாக்குகிற கல்விக் கொள்கையினை வடிவமைக்க இயலும்.

ஆனால், மலேசியாவில் கல்விக் கொள்கையை வகுக்கின்றவர்கள் பின்னணியில் தனக்கென சில புரிதல்களையும் சிந்தனைகளையும் முன்முடிவுகளையும் வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.கல்வி முக்கியம் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. ஆனால், கல்வியின் வழி ஒரு இனம் சார்ந்த மதம் சார்ந்த மலேசியாவை உருவாக்கும் ஒரு அரசியல் சிந்தனையையும் கொண்டுள்ளது. அதன் தாக்கம், கல்வி வளர்ச்சியில் பலத்த பின்னடைவை உண்டாக்கி வருகிறது.

கே. எதனால் கல்வியில் அரசியல் தாக்கம் நிகழ்கிறது?

காரணம் ஆதிக்கம் வேண்டும் என்ற நோக்கம்தான். சிறுவயது முதலே நாட்டு  மக்களின் மூளையைச் சலவை செய்ய வேண்டும். பாவ்லோ பிரையர் என்ற பிரேசிலியக் கல்வியாளர்.  கல்விதான்மக்களின்  விடுதலைக்கானஒரேஆயுதம். அது ஒருதீவிரமானஅரசியல்நடவடிக்கைஎன்கிறார். ஆனால் ஆதிக்கம் செய்யும் அரசியல் முறை மக்களுக்கு அறிவு சார்ந்த விடுதலையை வழங்காது. மாறாக மக்களை ‘அறிவு பெற்ற அடிமைகளாக உருவாக்கும். கல்வி என்பது கேள்வி எழுப்பாமல் சமூகத்தில்நிலவும்நடைமுறைகளைப்பாதுகாப்பதற்கும், அதற்குதகுந்தவர்களைஉருவாக்குவற்கும், அதன்படி வாழ மக்களை தயார்படுத்துவதற்கும் தான்  உள்ளது.கல்வி  இந்தசமூகத்தின்விழுமியங்களைக்கேள்விக்குஉட்படுத்தி, விவாதித்துஇந்தச்சமூகத்தைமாற்றும்கருவியாகவிளங்கும்வகையில் இருந்தால் ஆட்சி செய்பவர்கள் ஆதிக்கத்தை இழப்பர். எனவே கல்வி கொள்கைகள் வழி மக்களை விழிப்புணர்ச்சி அற்ற நிலையில் வைத்து அவர்கள் மூளையில் எதை பதிக்க வேண்டுமோ அதை பதிக்க  அரசாங்கம் கொள்கை வகுத்து நடைமுறை படுத்துகிறது.

சின்ஷிஹுவாங்டிசீனப் பேரரசு காலக்கட்டத்தில் சீனாவில் பலவகையான சிந்தனைகள் இருந்தாலும் திடிரென தோன்றும் புதிய சிந்தனைவாதிகள் எல்லா நூல்களையும் எடுத்து எரித்துவிட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று புதிய ஒன்றை அமல்படுத்துவார்கள். இந்தியாவில் பிராமணர்கள் நுழைந்தபோதும் இதே நிலைதான் உருவானது. தங்களுடைய கொள்கைகளே முழுமைப்பெற்றது, மற்றவர்களுடையது முழுமைப்பெறாதது என புறந்தள்ளிவிட்டு அவர்களுக்கு உகந்ததை முதன்மைப்படுத்துவதன் வழி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கும்.  

மலேசியாவில் பொறுத்தவரை அதன் கல்விக் கொள்கையில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் பல்லின மக்கள் வாழக்கூடிய நாடு என்ற நிலையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு நாகரீகம் இருக்கிறது. மொழி இருக்கிறது, பண்பாடு இருக்கிறது. தமிழர்களையும் சீனர்களையும் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கென ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவர்களுக்கென சொந்தமான மொழி, இலக்கியம், இலக்கணம் என  எல்லாம் இருக்கிறது.  மலாய்க்காரர்களுக்கு அவர்கள் உருவாக்கியுள்ளபடி மொழியும் ஒரு 100 ஆண்டுகால வரலாறும் இருக்கிறது. ஒவ்வோர் இனமும் இப்படியான வரலாறு சார்புடைய நிலையில் வளமைப்பெற்ற நிலையில் உள்ளன. இந்த  எல்லா வளமைகளையும் ஒன்றாய் இணைக்கின்ற பொழுது நம் நாடு சிறந்து விளங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது  ஒரு சாரார் கருத்து.

மற்றொரு கருத்தானது ஒவ்வொருவரும் தங்களுடைய வளமைதான் உயர்வானது என்று பேசுகிற சூழ்நிலை உருவாவதால் இதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பெரும்பான்மை இனத்திற்குச் சார்பான ஒன்றைத் திணித்துவிட்டு, மற்றவையெல்லாம் புறந்தள்ளப்பட்ட சூழ்நிலையில் மக்களை ஒன்றிணைப்பது என்பதைக் கருத்தாகக் கொண்டு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. அப்படி புறந்தள்ளப்படுகிற சிறுபான்மை இனங்களின் பண்பாடு மேலெழும்பி வராமல் இருப்பதற்கு அவர்களை பலவகைகளில் ஒடுக்குகிறார்கள். அல்லது தங்களின் அரசியல் சக்தியைப் பயன்படுத்தி வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள். இப்படியானதொரு பிற்போக்குத்தனமான சிந்தனையைக் கொண்டவர்கள் ஓர் அரசியல் ஆயுதமாக கல்விக் கொள்கையைப் பயன்படுத்துகின்றனர். அதன்வழி உருவாக்கப்படும் தேசியம் என்பது ஒரு மலாய் தேசியத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் முன்னிறுத்தப்படுவதால் மலேசியாவின் கல்வித்தரம் ஆக்கரமான முழுமைப்பெற்ற வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக வில்லை.

கே. உதாரணமாக எதைச் சொல்லாம்?

எடுத்துக்காட்டிற்கு, வரலாற்றுப் புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். எல்லாம் அவர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அப்படியானால் நாம் வரலாற்றில் இடம்பெறுகிற அளவிற்கு இந்நாட்டிற்கு இதுவரை எதையுமே செய்யவில்லையா? அப்படியானால் இந்த நாட்டிற்கு அல்லது இந்த நாட்டில் நாம் யார்? எதை எடுத்துக் கொண்டாலும் எல்லா இடத்திலும் ஆளும் வர்க்கமான அவர்கள்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், மற்ற இனங்களுக்கான அரசாங்கத்தின் கொள்கையளவிலான ஈடுபாடு என்பது நிறைவளிக்கும் வகையில் இல்லை. அதனால்தான், ஒட்டுமொத்த பண்பாட்டு வளர்ச்சியில் நாம் ஓர் உயர்ந்த இடத்தை அடைய முடியவில்லை.

கே. தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கையானது எவ்வகையிலாவது தேசிய ஒருமைப்பாட்டிற்கு வித்திடும் என நினைக்கிறீர்களா அல்லது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் கல்விக் கொள்கைக்குமான தொடர்பு என்ன?

எல்லா இனங்களும் சம உரிமைப் பெற்றிருக்கும் சூழ்நிலையில் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஒரு மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு பிற மொழிகளை ஆட்சிமொழிகளாவோ துணைமொழிகளாவோ ஏற்றுக் கொண்டு அதற்கும் சம முக்கியத்துவம் தருவார்கள்.

மலேசியாவைப் பொறுத்தவரை அவர்கள் தேர்வு செய்த மொழி என்பது சிறுபான்மை இனத்தவர்களின் மொழியைப் போல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிராத மொழி. அந்த மொழியானது வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அதை தேசிய மொழியாக்கி பிறகு நிறைய பிறமொழிச் சொற்களை குறிப்பாக ஆங்கிலச் சொற்களை மலாய்ப்படுத்தி அதில் புகுத்தி அம்மொழியை வளர்த்தெடுக்கிறார்கள்.

அந்தவகையில் தன்னிச்சையாக இயங்க முடியாத ஒரு மொழியை வலுக்கட்டாயமாக அதற்கு ஒரு வளர்ச்சியைத் திட்டமிட்டு உருவாக்கி அதை எல்லாவற்றிலும் புகுத்தி அதுவே நடைமுறையாக இருந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலம் முக்கியம் என்பதையும் அதை புறந்தள்ளிவிட்டு வளர்ச்சியைக் காண முடியாது என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் உணர்க்கின்றனர். இதன் அடிப்படையில், பார்த்தோமானால் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது முறையான ஒன்றல்ல என்பது தெளிவாகிறது. மலாய்மொழியை முதன்மையாக சார்ந்திருக்கின்ற கல்விக் கொள்கையால் நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப, திறன்சார் துறைகளில் வளர்ச்சியைக் கொண்டு வர முடியாது.

கே. தேசியத்தை நோக்கிய கல்விக் கொள்கை என்று பார்க்கிற பொழுது அங்கு தமிழ்ப்பள்ளிகள் அடிபட்டு போகிறது. ஆனால், அப்படி பேசுவதை ஒரு குறுகிய மனப்பான்மை என்றுகூட சிலர் வாதிடுகின்றனர்? இது குறித்து உங்கள் நிலைப்பாடு  என்ன?

இதைச் சுலபமான ஒரு வழியில் நான் விளக்க முடியும். இப்போது நான் தமிழ் பேசுகிறேன். நீங்கள் மலாய் பேசுகிறீர்கள். இன்னொருவர் சீன மொழி பேசுகிறார். நாம் மூவரும் நமக்குறிய மொழியில் பேசிக் கொள்கிறோம் என்றால் நாம் பேசுவது நம் மூவருக்குமே விளங்காது. நாம் மூவரும் தொடர்பு கொள்வதற்கு நமக்கு ஒரு மொழி தேவை. அதைத்தான் நாம் ‘Lingua Franca’ என்கிறோம். அதுதான் நமது தொடர்புமொழியாக விளங்குகிறது. பலவேளைகளில் அதே மொழிதான் தேசிய  மொழியாகவும் இருக்கும். மலாய்மொழி நமக்கான பொதுமொழி. எல்லாரும் அதை பேசலாம். அதற்கு அடுத்தபடியாக நமது வளர்ச்சிக்குத் தேவையான ஆங்கில மொழி இருக்கிறது. பிறகு தாய்மொழி. தாய்மொழியானது ஒவ்வொரு குழந்தையினுடைய தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது. தாய்மொழியை அழித்துவிட்டால் ஓரினத்தின் தனித்துவமாக விளங்கும் பண்பாட்டு கூறுகளும் நாளடைவில் அழிந்துவிடும்.

தேசிய உணர்வோடு வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டாலும் அவர்களின் பண்பாடு, வாழ்வியல் கூறுகள் எல்லாம் அடிபட்டு போவதால் அவர்களின் பண்பாடே பின்தள்ளப்பட்ட பண்பாடாக மாறி தனது மதிப்பினை இழக்க நேரிடலாம். மலேசியாவில் நமது நிலைமை இன்னும் அந்தளவிற்கு மோசமடையவில்லை. ஏன் என்றால் நமக்குத் தொடக்கத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. விரும்பும்வரை நாம் தமிழ்மொழியைக் கற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில இடர்பாடுகள் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை என்றாலும் இடைநிலைப்பள்ளிவரை தாராளமாக தமிழ் கற்கலாம். ஆனால், தமிழ்மொழி தேசிய மொழியாக இல்லை. தமிழ் தேசிய மொழியாக உருவாகாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழைத் தேசிய மொழியாக்கினால் சீன மொழியையும் அவ்வாறே செய்ய வேண்டும். அதன் பின் தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் அரசியல் பலம் உருவாகலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும், பாலர்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை தமிழ்ப் படிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குறிய விஷயம்.

அதே வேளையில், கொள்கை அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளை விரிவாக்கம் செய்வதற்கும் அதனுடைய ஆற்றலை அதிகப்படுத்துவதற்கும் ஆவன செய்ய வேண்டும். அதில் நமது பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த பள்ளிகளாக உருவாக்கி எந்தப் பெற்றோரும் தமிழ்ப்பள்ளிகள் தரமான கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களை அங்கு அனுப்ப வேண்டும். ஆனால், இன்றுவரை அந்த நம்பிக்கை ஊக்கமூட்டும் வகையில் எழவில்லை. தமிழ்ப்பள்ளிகள் தரமாக இல்லை என்ற முன்முடிவு பலருக்கு இருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கத்தையும் கொள்கையையும் குறை சொல்லாமல் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தக்கூடிய அளவிற்கு நாம் ஆக்கரமாக செயல்பட வேண்டும். அண்மைய காலங்களில் ஒரு சிறிய மாறுதலைக் காண முடிகிறது. ஆனாலும், பொருள்முதல்வாத போக்கு மக்களுக்கு மொழியை இரண்டாம் பட்சத்தில் வைத்திருப்பதற்கான வாய்ப்பையே வழங்குகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு வேண்டும், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றால் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும். அப்படியான சூழ்நிலை வரும்போது மொழியை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தமிழ்ப்படம் பார்த்துகூட மொழியைத் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் போய்விடுகிறார்கள். எனவே, இங்கு இதுதான் குறுகிய மனப்போக்காகும். கல்விக் கொள்கையைக் குறைச் சொல்லிவிட்டு நாம் செய்கிற பிழை இது. ஓரளவிற்கு அரசாங்கத்தைச் குறைச் சொல்லலாம். ஆனால், நம்மிடமும் பெரிய குறை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனவே, தாய்மொழி குறித்து பேசுவதும் தமிழ்ப்பள்ளிகள் குறித்து பேசுவதும் நமது உரிமை சார்ந்தது. அதெப்படி குறுகிய மனப்பான்மையாகும்?

கே. இறுதியாக, மலேசிய கல்விக் கொள்கையில் எவ்வகையான மாற்றங்கள் தேவை?

கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பதாக கல்விக் கொள்கையின் வழி அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகின்றனர், எதைச் சாதிக்க வேண்டும் அதற்கான அடித்தளங்கள் என்ன என்பது குறித்து முறையான ஆய்வுகள் தேவை. முழுமைப்பெற்ற  விழிப்புணர்ச்சி பெற்ற மனிதன் எப்படி உருவாக போகிறான் என்பது குறித்த ஒரு தெளிவான வரையறை தேவை. அதைவிடுத்து தேசியத்தை உருவாக்குகிறோம் என்ற போர்வையில் பிற இனங்களின் தனித்துவ அடையாளங்கள் மதிக்கப்படாமல் போய்விடுவது அந்த தேசியத்திற்கே நல்லதல்ல. மேலும், கல்வித் துறைச்சார்ந்த கல்வியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். மாறிவரும் உலகச் சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மாணவனின் நிகழ்கால தேவை என்பது குறித்த துல்லிய ஆய்வுகள் தேவை. கல்விக் கொள்கையை வடிவமைப்பவர்கள், அதனை அமல்படுத்துபவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் பங்களிப்பும் அதில் தேவை. திறன்சார் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்விக் கொள்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

மிக முக்கியமாக எல்லாம் ஓரினம் சார்ந்தே இருக்கின்ற நிலை மாறினாலேயொழிய வேறெந்த முழுமைப்பெற்ற மாற்றத்தையும் நாம் எந்தக் காலத்திலும் காண முடியாது. மேலும், அரசியல் சார்புகள் இன்றி கல்வித்திட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும். அரசியல் அனுகூலங்களைக் கல்வித் திட்டங்களைக் கொண்டுவருவதன் வழி பெற முயலக்கூடாது. இப்படியாக, பல்லின துறைசார் வல்லுனர்கள், நாட்டு வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, ஆக்கரமான சிந்தனையாற்றலை முதன்மைப்படுத்தி கல்வித் திட்டங்களை வரையறுத்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியப்படும்.

இறுதியாக, கல்வி ஒரு பயங்கரமான அரசியல் நடவடிக்கை என்ற பாவ்லோ பிரையரின் கருத்தை மறக்க கூடாது. மனித விழிப்புணர்ச்சி அற்ற கல்வி என்பது  மனித  விடுதலையை கொடுக்காது. அது ஒரு குதிரை பந்தயமாகத்தான் இருக்கும். கடிவாளம் கட்டப்பட்டு முன்னால் ஓடும் குதிரைகள் தவிர மற்றவை பொதி சுமக்கும் கழுதைகளாக மாற்றப்படும்.

நேர்க்காணல் :- பூங்குழலி வீரன்

நன்றி:- http://vallinam.com.my/version2/?p=1710