தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதுதை மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு

pannirc_ selvamதமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக, நாளை இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் நடக்கவிருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் அறிவித்துள்ள நிலையில், அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக சிறிலங்கா – இந்திய வெளிவிவகார அமைச்சுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு, இந்திய மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,

“அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்தத் தருணத்தில் மேற்கொள்வது சரியானதல்ல. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.

இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை ஒத்திவைப்பதே சரியானதாகும்.

சிறிலங்காவில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் சிறிலங்கா இராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிறிலங்காவில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற சிறிலங்காவின் புதிய அரசின் வாக்குறுதி செயற்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும்” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: