மதமாற்றத்தில் ஈடுபட்டவர் அன்னை தெரசா: பாஜக

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே தனது நோக்கம் என்பது அன்னை தெரசாவே ஒப்புக் கொண்ட உண்மை என பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மீனாட்சி லேகி கூறினார்.

அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே முக்கியமானதாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்த நிலையில், பாஜக எம்.பி. மீனாட்சி லேகியும் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அன்னை தெரசா குறித்து கூறப்பட்ட கருத்துகளை காங்கிரஸ் கட்சியினரும், வேறு சில தலைவர்களும் அரசியலாக்குகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் அன்னை தெரசா குறித்து தாங்கள் கொண்டுள்ள பார்வையை பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது.

தான் மதமாற்றம் செய்யவே வந்ததாக அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அன்னை தெரசா பேட்டி ஒன்றில் கூறுகையில், “அனைவரும் என்னை சமூக சேவகர் எனக் கருதுகின்றனர். நான் சமூக சேவகர் கிடையாது. நான் கர்த்தருக்கு சேவை செய்து வருகிறேன். மக்களை கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டு வருவதே எனது பணியாகும்’ என்றார்.

எனவே, அன்னை தெரசா குறித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என மீனாட்சி லேகி கூறினார்,

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்தை ஆதரிக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, “அவரது நிலைப்பாடு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை’ என்றார் மீனாட்சி லேகி.

-http://www.dinamani.com

TAGS: