‘பல காரணங்களால்’ கித்தா லவான் பேரணி சட்டவிரோதமானது

illegalசனிக்கிழமை  கோலாலும்பூரின்  மையப் பகுதியில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  கித்தா  லவான்  பேரணி,  பல  காரணங்களால்  சட்ட  விரோதமானது  என  துணை  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  கூறினார்.

அதில்  ஆற்றப்படும்  உரைகள்  தேச  நிந்தனைக்குரியவையாக  இருக்கலாம். அரசாங்கத்தை  மிரட்டுவது  போன்ற  செயல்களும்  குற்றவியல்  சட்டத்தை  மீறுபவையாக  இருக்கும்.

“அரசாங்கத்தையும்  மற்றவர்களையும்  மிரட்டுவதற்காகக்  கூடுகிறார்கள்  என்றால்  அது  தவறாகும்.

“அரசாங்கம்  விரும்பாததைச்  செய்யுமாறு  கட்டாயப்படுத்துவது. அதற்காக  மிரட்டுவது, குற்றவியல்  சட்டத்தின் 141, 142, 143 பிரிவுகளின்படி  குற்றமாகும்”, என  நூர்  ரஷிட்  தெரிவித்தார்.

மார்ச் 7-இல் சோகோ  விற்பனை  மையத்துக்குமுன்   நடைபெறவுள்ள   ஆர்ப்பாட்டம்,  அரசாங்கத்  தலைவருக்குரிய  கடமைகளைச்  செய்யத்  தவறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப் பதவி  விலக  வேண்டும்  என்று   வலியுறுத்தும்  நோக்கம்  கொண்டது.

அத்துடன்  சிறையில்  உள்ள  அன்வார்  இப்ராகிமை  விடுவிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையையும்  அது  முன்வைக்கும்.

முன்கூட்டியே  தெரியப்படுத்தாதற்காக ஒரு  பேரணியைச்  சட்ட  விரோதமானது  எனப்  போலீசார்  அறிவிக்க  முடியாது  என்கிறார்கள்  வழக்குரைஞர்கள்.

பத்து  நாள்களுக்குமுன்  பேரணி  பற்றித்  தெரியப்படுத்தத்  தவறுவது  குற்றமாகும்  எனக்  கூறும்  அமைதிப்  பேரணிச் சட்டத்தின்  பிரிவு 9(5)  அரசமைப்புக்கு முரணானது  என  முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பதை  அவர்கள்  சுட்டிக்காட்டினார்கள்.

அதைப்  பற்றிக்  கருத்துரைத்த  நூர்  ரஷிட்,  அத்தீர்ப்புக்கு  எதிராக  மேல்முறையீடு  செய்யப்பட்டிருப்பதாகக்  கூறினார்.