பஹாங் தமிழ் பள்ளிகளில் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறை, நமது கல்வி துணை அமைச்சர் என்ன செய்கிறார்?

tamilschool-in-malaysiaபஹாங் மாநிலத்தில் இருக்கும் பெருவாரியான தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறதென கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு இதுநாள் வரை எந்த தீர்வும் எடுக்காதது வருத்தம் தருகிறது. என்கிறார் காமாட்சி துரைராஜு .

ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் பல தலைமை ஆசிரியர்கள் பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஒரு பள்ளிக்கு மிக அடிப்படை தேவை போதுமான ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாமல் பள்ளியை நிர்வாகிப்பது எப்படி சாத்தியமாகும்? 2013 ஆம் ஆண்டு UPSR தேர்வில் 52 மாணவர்கள் 7Aக்கள் பெற்ற வேளையில் 2014 ஆம் ஆண்டு மிகவும் குறைந்து 22 மாணவர்கள் மட்டுமே 7Aக்கள் பெற்றிருக்கின்றனர். இந்த நிலை நீடிக்குமேயானால் வரும் காலங்கள் தேர்ச்சி விகிதம் இன்னும் குறையும் என்கிறார் சபாய் சட்ட மன்ற உறுப்பினருமான காமாட்சி.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாற்று ஆசிரியர்கள் (Guru Ganti) வகுப்பு எடுக்கும் போது சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்க முடியாத நிலையில் கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடக்க வாய்ப்பில்லாமல் போகிறது.

தமிழ்ப்பள்ளிகளில் போதிக்க தகுதியான ஆசிரியர்கள் நம் நாட்டில் இல்லையா? கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் தேவை கணக்கெடுப்பு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நாட்டில் இருக்கும் தமிழ் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் எண்ணம் ஏன் கல்வி அமைச்சுக்கு இல்லை? என்றும் வினவுகிறார் காமாட்சி.

பட்டப்படிப்பிற்கு பிந்தைய ஆசிரியர் பயிற்சி (KPLI) தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறுத்தியதன் நோக்கம் என்ன? பல இடைக்கால (தற்காலிக ஆசிரியர்கள்) 4 ஆண்டுகளுக்கும் மேலாக போதித்து விட்டு தற்பொழுது வேலை இல்லாமல் அவதிப்படுவது கல்வி அமைச்சுக்கு தெரியுமா?

kamatchiபள்ளி ஆரம்பித்து 3 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மற்ற ஆசிரியர்கள் வேலை பழுவால் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர். சில பள்ளிகளில் 2 – 4 ஆசிரியர்கள் வரை பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும். தேசிய பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலான ஆசிரியர்களை நியமிக்கும் கல்வி அமைச்சு தமிழ் பள்ளிகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஞாயாமில்லை என்கிறார்.

ஆக, பஹாங் மாநிலத்தில் இருக்கும் 37 தமிழ் பள்ளிகளில் எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ, அந்த பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்வதாகவும், அதோடு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகா ஆசிரியர் பயிற்சிக்கு தமிழ் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளித்து, பதவி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பதில் ஆசிரியர் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க, கல்வி அமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்றும் காமாட்சி கேட்டுக்கொள்கிறார்.