செய்தியாசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு மலேசியாகினி கண்டனம்

mkiniதப்பான  செய்தியைப்  போட்டதற்காக  த  மலேசியன்  இன்சைடர்  செய்தியாசிரியர்களும்  பதிப்பாளரும்  கைது  செய்யப்பட்டிருப்பதை  மலேசியாகினி  கடுமையாகக்  கண்டித்துள்ளது.

இது ஊடகச்  சுதந்திரம்மீது  மேற்கொள்ளப்பட்ட  அப்பட்டமான  அதிரடித்  தாக்குதல்  என்றும்   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அளித்த  உருமாற்ற வாக்குறுதிகள் எல்லாம்  காற்றோடு  கரைந்து  போய்விட்டன  என்றும்  அது  கூறிற்று.

ஊடகச்  சுதந்திரம் என்பது  செய்தி  நிறுவனங்கள்  தவறான  செய்தி  போடுவதற்கான  அனுமதி  அல்ல. அதற்காக, செய்தியாசிரியர்களையும்  செய்தியாளர்களையும்  கைது  செய்வதும்  நியாமில்லை.

இப்படிப்பட்ட  கடுமையான  நடவடிக்கைகளை  எடுக்காமலேயே  போலீசார்  விசாரணையை  எளிதாக  நடத்தியிருக்க  முடியும்  என்று  அது  கூறிற்று.

 

ஒருவரைத் தாக்கினால், அது அனைவரையும் தாக்கியதாகும்

 

தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து மலேசியாகினியும் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் அலுவலகத்தை போலீசாரும் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமும் அதிரடிச் சோதணைக்கு உட்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, அதன் செய்தியாளர்களில் ஒருவர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்த போதிலும்,   நாங்கள் உறுதியுடன் இருந்தோம்.   மலேசியர்கள் எங்களுக்கு மனதார ஆதரவு வழங்கினர். அதற்கு நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

அதைப் போலவே, மலேசியர்களும், ஊடகத்தினரும் த மலேசியா இன்சைடருக்கு ஏற்பட்டிருக்கும்  இந்த இக்கட்டான நிலையில் அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மலேசியாகினி கூறுகிறது.

எங்களில் ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல் நாங்கள் அனைவரும் தாக்கப்பட்டதாகும்  என்பதை மலேசியாகினி வலியுறுத்தியது.

செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எழுதுகோல் வாளைவிட வல்லமையானது என்ற தெள்ளத் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் இது என்று மலேசியாகினி மேலும் கூறிற்று.