யேமனில் 6-வது நாளாக சவூதி அரேபியா தாக்குதல்

  • சனா விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டடம்.

    சனா விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டடம்.

யேமனில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இடையிலும், ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவிப் பொருள்கள் அடங்கிய கப்பலை அனுப்பியதாக ஈரான் தெரிவித்தது.

யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதி அந்த நாட்டின் ஏடன் நகருக்குத் தப்பிச் சென்றார்.

அங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்து முன்னேறியதையடுத்து, அங்கிருந்து ஓமன் நாடு வழியாக சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சம் புகுந்தார்.

அதற்கு முன்னதாக, ஹூதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதலைத் தொடங்கின.

இந்த நிலையில், 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கூட்டுப் படைகள் குண்டு வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனா நகரைச் சுற்றிலும் கிளர்ச்சியாளர்களின் முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

கிளர்ச்சியாளர்களுக்கு உதவிப் பொருள்கள்: இதற்கிடையே, ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவிப் பொருள்கள் அடங்கிய கப்பலை ஈரான் அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

19 டன் மருந்துகள், மருத்துவக் கருவிகளும், 2 டன் உணவுப் பொருள்களும் கப்பலில் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாகிஸ்தான் குழு சவூதி பயணம்

யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியக் கூட்டுப் படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா சென்றது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தலைமையிலான அந்தக் குழுவில், பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

யேமனில் ஹூதி பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாகிஸ்தானிடம் சவூதி அரேபிய அரசு கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தது.

இதையடுத்து, அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்யவும், பாகிஸ்தான் படைகளை அந்நாட்டுக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகள் குழு சவூதி விரைந்துள்ளது.

-http://www.dinamani.com