யேமனில் வான்வழித் தாக்குதல்: 76 பேர் பலி

yemenயேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர்.

யேமனில் பல்வேறு நகரங்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் பிடித்து வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வரும் அந்நாட்டு ராணுவத்தினருக்கு உதவியாக சவூதி அரேபியப் படையினரும் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யேமனில் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியப் படையினர் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

யேமனில் உள்ள அல்-அனாட் விமான நிலையத்துக்கு அருகே கிளர்ச்சியாளர்களின் முகாம் மீது வியாழக்கிழமை இரவு சவூதி அரேபியப் படையினர் விமானத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல், ஏடன் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 32 கிளர்ச்சியாளர்கள் உள்பட 40 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, யேமனின் டாயிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மேலும் 16 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

-http://www.dinamani.com