சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

puththar_001சிங்களத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் தமது கருத்திலும் தமது இனத்தின் பெருமைகளையும் வரலாற்றினையும் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதை வரலாற்றுக்காலம் தொட்டே பார்த்து வந்திருக்கிறோம்.

இப்போது இலங்கை அரசியல் ஒரு குழப்பமான சூழலில் இருக்கின்றது. யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி என்று தெரியாமல் மக்கள் குந்தியிருந்து யோசிக்கின்றார்கள். யாரை வெட்டி வீழ்த்தி ஆட்சியை பிடிக்கலாம் என்று அரசியல்வாதிகள் மந்திராலோசனையில் மூழ்கிவிட்டார்கள்.

கட்சிகளுக்கு கட்சிகள் ஒரே பேச்சும், பெட்டிப்பரிமாற்றங்களும் தாராளமாய் நடந்து கொண்டிருக்கின்றன.

இவை ஒரு புறம் தன் அரசியலை சரியாக வழிநடத்த தெரியாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடலில் திசை மாறிய படகு போல தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னை ஒரு கட்சியாக பதிவு செய்வதா, இல்லையா என்ற பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு முழுவதும் நடத்திக்கொண்டே இருக்கும் போல் தெரிகின்றது.

இன்னும் சிலர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது பதவியை பிடிச்சுப்போடனும் என்று இரகசியமாக வேலையில் மூழ்கிவிட்டார்கள்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நின்று இலங்கை அரசியலை எப்படிவழி நடத்தலாம் என்று யோசிச்சு சண்டை போட்டும், சிறையடைப்பு நாடகங்களையும் விசாரணை அழைப்பு காட்சிகளையும் அடிக்கடி அரங்கேற்றி மக்களை ஒரு வகை பரபரப்பிற்குள் மூழ்க வைத்துவிட்டு குளிரான அறைக்குள் தூங்கும் இன்னும் சிலர் இருக்கவே செய்கின்றார்கள்.

இது இலங்கை நிலைமை என்று நோக்கினால் சிங்களத்தரப்பினர் தங்கள் அடையாளங்களையும் நினைவு நாட்களையும் மறக்காமல் இருக்கின்றார்கள் என்பதை என்றைக்கும் தமிழ் அரசியல் தரப்பு நினைத்தும் பார்ப்பதில்லை.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக உயிர் நீத்த, போரில் ஊனமுற்ற படைவீரர்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்ததோடு தான் என்றைக்கும் இராணுவத்தினரின் தியாகங்களை மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருக்கிறது சிங்கள அமைச்சரின் கருத்து என்று யோசித்தாலும் இதை நாம் ஆச்சரியமாக கேட்கப்போவதில்லை. அவரின் உண்மையான நாட்டுப்பற்றை பார்த்து தமிழர்கள் நாம் ஒவ்வொருவரும் தலைவணங்க வேண்டும். புலிகளை எதிரியாக நினைத்த ஒருவர் புலிகளை அழித்ததற்காக தனது நாட்டு வீரர்களை கௌரவப்படுத்துவதிலும் பாதுகாப்பிலும் தப்பேதும் கண்டுபிடிக்க முடியாது

ஆனால் தமிழர் தரப்பின் நிலை என்னவென்று சற்று யோசிக்க வேண்டியிருக்கின்றது.கட்சிகள் தாவினாலும்,ஆட்சிகள் மாறினாலும்,வெட்டினாலும் குத்தினாலும்,சண்டைபோட்டு நாடாளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்தாலும் அவர்கள் தமது இனமென்று வரும்பொழுது அப்படியே ஒரே சிந்தனையில் யோசிக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் யாவும்,தம் இனம் சார்ந்து தான் இருக்கின்றது.

அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகட்டும்,ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும்,மக்கள் விடுதலை முன்னணியாகட்டும்,ஏன் ஹெல உறுமையவாகட்டும் எல்லாமே தமது இனத்தின் வரலாற்றிலையே குறியாய் இருப்பார்கள்.

இதை சிங்கள குடிமகன் நினைத்து பெருமை போற்றிக்கொள்ளலாம். ஆனால் தமிழ் மக்கள் அவ்வாறு செய்யலாமா என்றால் இல்லை என்று விடைகிடைக்கும்.

ஒரு கட்சியாய் தன்னை பதிவு பண்ணவே இவ்வளவு யோசித்து காலங்கள் கடத்தி,கூட்டங்கள் போட்டு குளிர் அறைக்குள் இருந்து இவ்வளவு காலமாய் பேசி கூட ஒரு முடிவிற்கு வரத்தெரியாதவர்கள் எப்படி நமக்கான அரசியல் அதிகாரத்தினை பெற்றுத்தரப்போகின்றார்கள் என்று இன உணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் கேட்கவே செய்வான்.

இவ்விடத்தில் நாம் சிங்கள ஆட்சியாளர்களால் எமக்கு எதிராக நடத்தப்படும் தந்திர அரசியலை கைவிட்டுவிட்டு நமக்கு சாதகமாக நமது அரசியல்த் தலைமைகள் என்ன செய்கின்றன என்று சிந்தித்துப்பார்த்தால் கொழும்பில் அடிக்கடி கூட்டம் போட்டு கட்சிப்பதிவு பற்றி பேசியதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று சொல்வான் சாதாரண சிறுவன் ஒருவன் கூட.

எப்படியிருக்கிறது தமிழர்களின் அரசியல் நிலை.நாட்டிற்காக உழைத்த படையினர் கௌரவிக்கப்படுவார்கள் என்று அமைச்சர்கள்,பிக்குகள்,சிங்களக்கல்விமான் சொல்லும் போது,அதே படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாளுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம் என்று இதுவரைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் யாரும் கதைத்ததாக தெரியவில்லை.

தமிழினம் மற்றவனால் கெட்டதிலும் பார்க்க தனது அரசியல் தலைமைகளால் தான் கெட்டது என்று வரலாற்றை எழுதி வைத்துவிட்டு செல்லவேண்டியது தான். அதைத்தவிர வேறு ஏதும் நடக்கப்போவதில்லை.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் கட்சிப் பதிவும்,ஆட்சிப்பிடிப்பிற்கும் கூட்டம் போடுவார்களோ? இவர்களுக்கு ஒரே ஒரு பதிலை மட்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் எப்படி தன் இனத்திற்காக அரசியல் நடத்துவதென்பதை.மாறாக தமிழன் என்ற ரீதியில் உங்களுக்கு சொல்வதற்கென்று எதுவும் இல்லை.

நீங்கள் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரும் போது நமது அரசியல் குடிமூழ்கிப்போகும். என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

எஸ்.பி.தாஸ்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: