வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வெளியேற வேண்டும்: நேபாள அரசு அதிரடி உத்தரவு

நேபாளத்தில் நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்களையும் வெளியேறுமாறு நேபாள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,365ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி விட்டன.

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் குறித்த தகவல் வெளியானதும் முதல் நாடாக இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படை நேபாளம் விரைந்தது. கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் தங்கி தீவிரமாக மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 4,500 ஊழியர்கள் அங்கு தீவிரமாக மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

நேபாளத்தில் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை அளித்துவந்தபோதிலும், இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவைப் பாராட்டின. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை இந்திய ஊடகங்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டி செய்திகளை வெளியிட்டன. இது நேபாள எதிர்க்கட்சிகளையும், அந்நாட்டு மக்களையும் எரிச்சலடையச் செய்தது.

இதுதொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலநடுக்க பாதிப்புகளைப் பொருத்தவரை, தற்போது மீட்பு நடவடிக்கைகளைவிட நிவாரண நடவடிக்கைகளிலேயே முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, தங்களின் முதல்கட்ட மீட்புக் குழுக்கள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு 34 நாடுகளிடமும் நேபாள அரசு கூறியுள்ளது. தற்போது இடிபாடுகளை அகற்றும் சாதனங்களே தேவைப்படுகின்றன. இது தொடர்பாக இந்தியாவிடம் உதவி கோரியுள்ளோம். அவற்றைப் பெறுவதற்காக ராணுவப் பொறியியல் குழு அந்நாட்டுக்குச் செல்லும் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்: முன்னதாக, வெளிநாட்டு மீட்புக் குழுக்களிடம் வெளியேறுமாறு கூற வேண்டும் என்று நேபாள இயற்கைச் சீற்ற நிவாரணக் குழு ஞாயிற்றுக்கிழமை அளித்த பரிந்துரையை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரியான லட்சுமி பிரசாத் தக்கால் கூறியதாவது:

நிலநடுக்கம் ஏற்பட்டு 8 தினங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மீட்புக் குழுக்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டன. நாங்கள் அவற்றுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழு வகுத்த நெறிமுறைகளின்படி தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் 7 தினங்களுக்கே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அந்தக் காலகட்டம் முடிவடைந்துவிட்டதால், இனி மீதமுள்ள மீட்புப் பணிகளை நேபாள ராணுவமும், உள்ளூர் காவல் துறையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

வெளியேறும் மீட்புக் குழுக்கள்: நேபாள அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஜப்பான், துருக்கி, உக்ரைன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் காத்மாண்டில் இருந்து வெளியேரும் நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன.

நேபாளத்தின் மொத்த மக்கள்தொகை 2.8 கோடியாகும். இவர்களில் 80 லட்சம் பேர் நிலநடுக்கத்தால் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவு காரணமாக வெளிநாட்டு உதவிக் குழுக்களும் படிப்படியாக வெளியேறிவிடும் என்பதால், இனி மேற்கொள்ள வேண்டிய மறுவாழ்வுப் பணிகள் நேபாளத்துக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

நேபாள நிலநடுக்கத்தால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்த வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 57 என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் இளம் மலையேற்ற வீரரான அர்ஜுன் வாஜ்பாய் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, நிலநடுக்கத்தால் மலையேற்ற வீரர்கள், கிராமவாசிகள் ஆகியோரின் 100 உடல்கள் பனிப்பாறைச் சரிவில் புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு நேபாள அரசிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து, நமது ஊழியர்களை படிப்படியாக இந்தியாவுக்கு திருப்பியனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக மூன்று குழுவினர் சாலை வழியாக பாட்னா புறப்படுவார்கள்.

மற்றவர்கள் விமானம் மூலமாகவோ, சாலை வழியாகவோ அடுத்த சில தினங்களில் இந்தியா திரும்புவார்கள்.

இந்தியக் குழுவினர் தங்களால் இயன்ற அளவுக்கு பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவ முயன்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என்று தேடும் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதுவே, வெளிநாட்டு மீட்புப் படைகளை வெளியேறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டதற்கான காரணமாகும். – இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்

நமது நாடு பேரிடர் மேலாண்மையில் தொழில்நுட்பரீதியாக திறன் பெற்றது அல்ல. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அளிப்பதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. – நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா

பலி எண்ணிக்கை உயர்வு
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 7,365-ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என்று நேபாள நிதியமைச்சர் ராம் சரண் மஹத் தெரிவித்தார். நிலநடுக்கப் பாதிப்புகளால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 14,355-ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு உதவி பற்றிய விமர்சனம்
“உதவி என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நம்மை மெல்ல அடிமைப்படுத்தி விடுவார்கள். எனவே, நேபாள அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தன. இதேபோல், அந்நாட்டின் மக்களும் சமூக வலைதளங்களில் இந்தியா தங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் வெளியேற வேண்டும் என்று நேபாள அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. அதன் இந்த உத்தரவு இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கும் (என்டிஆர் எஃப்) பொருந்தும்.

நிலநடுக்கப் பாதிப்புகளில் இருந்து நேபாளம் விரைவில் மீண்டெழும்: மோடி நம்பிக்கை

நிலநடுக்க பாதிப்புகளில் இருந்து நேபாளம் விரைவில் மீண்டெழும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு இந்திய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் “புத்த பூர்ணிமா’ நிகழ்ச்சி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
புத்தரின் பிறப்பிடமும், நமது நேசத்திற்குரிய சகோதர நாடுமான நேபாளம், மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்துள்ளது. இந்தத் துயரம் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் விரைவில் புதிய பலத்துடன் மீண்டெழுவார்கள்.

இதற்காக புத்தரிடம் பிரார்த்தனை செய்வோம். நேபாள மக்களின் வலியைப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களது கண்ணீரைத் துடைக்க நாம் முன்வர வேண்டும்.

புத்தரின் போதனைகளே தீர்வு: உலகம் தற்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலகின் பல பகுதிகள் ரத்தத்தால் தோய்ந்துள்ளன. அடுத்தவரின் ரத்தத்தை எடுப்பதில் மக்கள் குறியாய் இருக்கின்றனர்.

இந்தச் சூழலில் கருணை என்பது எங்கிருந்து வரும்? அதற்கு ஒரே வழி புத்தரின் போதனைகளை ஏற்பதுதான்.

சமுதாயத்தில் ஒரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த புத்தர் விரும்பினார். இன்றைக்கு நாம் விவாதிக்கும் பிரச்னைகளுக்கு, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு காண முற்பட்டவர் அவர். அவருடைய போதனைகள் இன்றைய உலகுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளன.

புத்தரின் வார்த்தைகள் மகத்தான சக்தியைக் கொண்டிருந்தன. அதனால்தான் உலகம் அவரை ஏற்றுக் கொண்டது.

புத்தருக்கு கோயில்: குஜராத் முதல்வராக இருந்தபோது, தலைமைச் செயலக முகப்பிலும், எனது அரசு பங்களா முகப்பிலும் புத்தருக்கு சிலை வைக்கச் செய்தேன். அதனைப் புரிந்து கொள்ளாமல் விமர்சகர்கள் என்னை வார்த்தைச் சாட்டையால் அடித்தனர்.

புத்தரோடு தொடர்புடைய குஜராத்தின் வாத்நகரில் (மோடியின் பூர்வீகம்) புத்தருக்கு மிகப் பெரிய கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மோடி. முன்னதாக இந்நிகழ்ச்சியில், நிலநடுக்கத்தால் உயிரிழந்த நேபாள மக்களுக்கு ஒரு நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

-http://www.dinamani.com