சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு தற்காலிக தோட்டக்காரை நியமிக்க நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம்!

 -ஜீவி காத்தையா, மே 18, 2015.

parliamentmalaysiaகெடா, பீடோங்கிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியில் அட்டைகள், பாம்புகள், பூரான்கள் மற்றும் குரங்கள் அதிகாரம் செலுத்துகின்றன, அவற்றின் அதிகாரத்திற்கு அஞ்சிய மாணவர்கள் அப்பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர். கடந்த (மே 14) வியாழக்கிழமை அப்பள்ளியில் பயிலும் 25 மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே வகுப்பிற்கு வந்தார். அடுத்து ஒருவரும் வரப்போவதில்லை என்பது நிச்சயம். அப்பள்ளியின் இந்நிலைக்குக் காரணம் அங்கு  தோட்டக்காரர் இல்லாததேயாகும்.

அப்பள்ளி மாணவர்கள் அனுபவித்து வரும் தொல்லைகளைக் களைவதற்கு ஒரு தற்காலிக தோட்டக்காரை நியமிக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு “தற்காலிக  தோட்டக்காரை நியமிக்க சட்டத்தில் இடம் கிடையாது” (மந, மே 17) என்று அவர்களிடம் கூறப்பட்டது. இந்நிலையில், சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிக தோட்டக்காரை நியமிக்க வகைசெய்யும் சட்டத்தை இயற்றுவதற்கு மலேசிய நாடாளுமன்றம் உடனடியாக ஓர் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது!

நாடாளுமன்றத்தின் அடுத்த தொடர்கூட்டம் இன்று தொடங்குகிறது. ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி பேரரசரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதனுடையதாகும்.

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிக்க சட்டத்தில் இடம் கிடையாது என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியவர்  துணை அமைச்சர் பி. கமலநாதன்.

கடந்த வியாழக்கிழமை அப்பள்ளிக்கு வருகையளித்திருந்த பி. கமலநாதன் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து, துணை அமைச்சர் நினைத்தால்kamalanathan தமது சொந்தச் செலவில் ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிக்க உதவலாம் என்று ஒரு பெற்றோர் கேட்டுக்கொண்டார். துணை அமைச்சரும் பெருந்தன்மையோடு ரிம500 ஐ கொடுத்தாராம். இதிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு தற்காலிக தோட்டக்காருக்கு சம்பளம் கொடுக்க முடியும்?  ஆகவே, அரசாங்கம் சம்பளம் கொடுத்து ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிக்க வகைசெய்யும் சட்டம் இயற்ற வேண்டியுள்ளது.

துணை அமைச்சர் கமலநாதன் அப்பள்ளியைச் சுற்றிப் பார்த்தார். பெற்றோர்களிடம் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் அப்பள்ளியின் கூரையில் அமர்ந்து கொண்டு ஒரு குரங்கு கூரையைத் தட்டிக் கொண்டிருந்ததாம். இப்பள்ளியின் நிலை உண்மையில் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் அவர் கூறினாராம்.

மேலும், இப்பள்ளியின் மோசமான நிலை குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மஇகாவினர் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் லியோங்கிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தனர்.

டாக்டர் லியோங் இப்பிரச்சனையை கல்வி அமைச்சர் மற்றும் மாநில கல்வி இலாகா இயக்குநருக்கும் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். பள்ளியை பார்வையிட்ட கல்வி இலாகா அதிகாரிகள் பள்ளியைப் புதுப்பிக்க மானியம் இல்லை என்று கூறிவிட்டனராம். (தநே, மே 15)

 

சட்டம் இல்லையா?

 

தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டின் தேசிய கல்வி அமைவுமுறைக்கு உட்பட்டவை. பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் கல்விச் சட்டத்தின் கீழ் வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய ஐந்தாண்டு திட்டங்கள் வழியாகவும்  மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், அரசாங்கம், குறிப்பாக இந்தியர்களின் நம்பிக்கை மன்னன் பிரதமர் நஜிப், தமிழ்ப்பள்ளிகளுக்கு கோடான கோடி ரிங்கிட்டை வாரி கொட்டிக் கொண்டிருக்கிறது என்று அறிக்கைகள் பறக்கின்றன. அப்படி இருக்கையில், சுங்கை புந்தோர் தமிழ்ப்பள்ளிக்கு எப்படி மானியம் இல்லாமல் போயிற்று? ஒரு வேளை, கொடுத்த மானியத்தை குரங்குகள் திருடி விட்டனவோ?

மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை வரைந்து பிரதமர் நஜிப்பிடம் பெப்ரவரி 2014 இல் வழங்கிய டாக்டர் என். எஸ்.Tamil schools our choice pm and rajendran இராஜேந்திரன் குழு 125 க்கும் கூடுதலான பள்ளிகளுக்கு வருகை மேற்கொண்டு ஆய்வுகள் செய்துள்ளதாக கூறுகிறது. சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியில் தோட்டக்காரர் இல்லை என்பதும், கழிவறைகள் மிக மோசமாக இருக்கின்றன என்பதும் எப்படி அக்குழுவுக்குத் தெரியாமல் போய்விட்டது? பிரதமர் நஜிப்பிடம் “மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு” வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் ஏன் தமிழ்ப்பள்ளிகளில் குரங்கள், பாம்புகள், அட்டைகள், பூரான்கள், காட்டுப் பன்றிகள் போன்றவற்றின் ஆட்சி?

தற்காலிக தோட்டக்காரரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. மலேசிய கல்விச் சட்டத்திற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளை தத்தெடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?

மோசமான நிலையில் இருக்கும் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியை சுத்தப்படுத்த ஒரு தற்கால தோட்டக்காரரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், மோசமான நிலையில் இருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டை சீரமைக்க ஒரு அருள் கந்தா கந்தசாமியை நியமிக்க சட்டம் இருக்கிறது!