வித்தியா படுகொலை வழக்கு! நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்!- சீ.வி

CV27யாழ்.புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தை விசேட வழக்காக எடுத்துக் கொண்டு, சிறப்பு நீதிபதிகள் குழு முன்பாக குறித்த வழக்கை விசாரித்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஒத்துக்கொண்டாரென வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு சென்றவுடன் இந்த விடயம் தொடர்பாக நாம் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களை சந்தித்து வழக்கை விசேட வழக்காக சிறப்பு நீதிபதிகள் முன்பாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி வாக்குறுதியும் கொடுத்துள்ளார். என வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

 https://youtu.be/txQk6ZSU2AU

இன்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் குறித்த சந்திப்புக்கள் தொடர்பாக, முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் மாணவர்கள் வித்தியா படுகொலை தொடர்பாக விரைவான விசாரணை மற்றும் தண்டனை வேண்டும் என கேட்டிருந்தார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி என்னிடம் வினவியிருந்தார். விரைவான தண்டனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்வாறான வழிகளை கையாளலாம் என அதறகு நாம் கூறியிருந்தோம்.

தென்னிலங்கையில் லியனாராய்ச்சி என்பவர் பொலிஸாரினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட போது நான் பதுளை மாவட்டத்தில், மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன்.

அப்போது எங்களை தென்னிலங்கைக்கு அழைத்து 3 சிறப்பு நீதிபதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த வழக்கு விசேட வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது.

எனவே அவ்வாறான வழிவகை ஒன்றை கையாளுங்கள் எனக் கேட்டிருந்தேன். அதனை ஜனாதிபதி ஒத்தக் கொண்டதுடன், கொழும்பு சென்றதும் நீதிதுறை சார்ந்தவர்களுடன் பேசி அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.

வித்தியாவின் தயாருடனான சந்திப்பு தொடர்பாக. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரன் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பாக அவரின் பெற்றோரிடம் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் கொடுப்பதாக கூறியிருந்தார்.

மேலும் மாணவியின் தாயார் தற்போதுள்ள இடத்தில் இப்போதைய நிலையில் தங்களால் இருக்க முடியாது. எனவே ஒரு வீடு கட்டிக் கொடுங்கள் என கேட்டார். அதற்கு வீடும் கட்டிக்கொடுத்து பணமும் தருவதாகவும் அதனை எமக்கு ஊடாக செய்வதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். மேலும் இரங்கல்களையும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக. யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிலரின் பெயர்கள் இன்றைய தினம் எனக்கு கிடைக்கப் பெற்றது.

இதனடிப்படையில் நான் அதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன். அவர் எமக்கு கூறியிருக்கின்றார். கைது செய்யப்பட்டவர்கள் குற்றம் இழைக்கவில்லை. என உறுதியானால், விடுவிப்பதாக,

மாகாணசபை நிதி ஒதுக்கீடு தொடர்பாக. வடமாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நான் பேசியிருந்தேன். அதில் குறிப்பாக முன்னைய ஆட்சிக்காலத்தில் நாங்கள் கேட்டிருந்தோம்.

இலங்கையில் மறறைய மாகாணங்களை விடவும் வடமாகாணம் பாதிக்கப்பட்ட மாகாணம் எனவே விசேட நிதி ஒதுக்கீடு தேவை என ஆனால் மற்றைய மாகாணங்களுக்கு கொடுப்பதையே எமக்கும் தருவோம்.என கூறினார்கள்.

இந்நிலையில் மறறைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்தின் நிதி தேவை 3 அல்லது 4 மடங்கு அதிகம் என்பதை நாம் சுட்டிக்காட்டி எமது மாகாணத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு தேவை என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

-http://www.tamilwin.com

TAGS: