ஸ்வேன்ஸ்டன் ஸ்திரிட் சொத்து வாங்கியதில் மாரா ரிம53 மில்லியனைப் பறிகொடுத்தது

mara incமாரா இங்க்  மெல்பர்ன், ஸ்வேன்ஸ்டன்  ஸ்திரிட்டில்  மாணவர்கள்  தங்குவதற்காக  ஒரு  அடுக்ககம்  வாங்கியதில்  நிகழ்ந்துள்ள  மோசடியில்   மாரா ஆஸ்திரேலிய $18.3 மில்லியனை (ரிம52.7 மில்லியன்)   இழந்தது  என்கிறார் பாண்டான்  எம்பி  ரபிஸி ரம்லி.

மாரா  இங்கி-கிடமிருந்து  இரகசியமாகக்  கிடைக்கப்பெற்ற  ஆவணங்கள்   அந்நிறுவனம்  அச்சொத்தை  ஆ$41.8 மில்லியனுக்கு(ரிம120.5 மில்லியனுக்கு)  வாங்கியதாகக்  காண்பிக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலிய  அரசு  ஆவணங்களின்படி அச்சொத்துக்கு  ஆ23.5மில்லியன் (ரிம67 மில்லியன்) மட்டுமே  கொடுக்கப்பட்டதாக  பதிவாகியுள்ளது.

இதன்  காரணமாக  ரபிஸிக்கு- இவர் National Oversight and Whistleblowers (நவ்)  அமைப்பின் இயக்குனருமாவார்- இவ்விவகாரத்தில்  மலேசிய  அதிகாரிகள்மீது  நம்பிக்கை இல்லாமல்  போய்விட்டது.  எனவே,  அவர் நவ்- இன்  இன்னொரு இயக்குனரான அக்மால்  நசிர்  அடுத்த  வாரம்  ஆஸ்திரேலியா  சென்று  ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமே  புகார்  செய்வார்  என்று  அறிவித்தார்.

“நாங்கள்  அம்பலமாக்கிய  ஊழல்  விவகாரங்களில்  நாங்கள்தான்  லாக்- அப்பில்  வைக்கப்பட்டோம். குற்றத்தில்  சம்பந்தப்பட்டதாக  நாங்கள்  சுட்டிக்காட்டியவர்களுக்கு  எதுவும்  ஆகவில்லை.  சம்பந்தப்பட்டவர்கள்  மலேசியாவில்  தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்திரேலிய  சட்டம்  வேறு  மாதிரி”, என்று  ரபிஸி  கூறினார்.