பணக் கையாடல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலகக் கோரிக்கை

puaபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பணக்  கையாடல்  செய்துள்ளதாகக்  கூறும்  பரபரப்பான  குற்றச்சாட்டுகள்மீது  விசாரணை  முடியும்வரை  அவரை  விடுப்பில்  செல்ல  அமைச்சரவை  வலியுறுத்த  வேண்டும்  எனப்  பொதுக்  கணக்குக்  குழு  உறுப்பினர்  டோனி  புவா கேட்டுக்  கொண்டார்.

“இது  கண்ணியமான ஒரு  வேண்டுகோள்தான். மற்ற  மக்களாட்சி  நாடுகள்  என்றால்  இப்படிப்பட்ட  நிலையில்  பிரதமர்  இந்நேரம்  பதவி  விலகியிருப்பார்”, என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி-யுமான  புவா  கூறினார்.

வால்  ஸ்திரிட்  ஜர்னலில்  வெளிவந்த  செய்தி  ஒன்று  சுமார்  யுஎஸ்$700 மில்லியன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கில்  வரவு வைக்கப்பட்டிருப்பதை  மலேசிய  புலனாய்வு  அதிகாரிகள்  கண்டுபிடித்திருப்பதாக கூறிற்று.

அது 1எம்டிபி-இன்  பணமாம்.

மிகப்  பெரிய  தொகைகள் “பிரதமரின்  கணக்குக்கு  மாற்றப்பட்டிருப்பது”  ஒரு  கடுமையான விவகாரமாகும்   என  புவா  குறிப்பிட்டார்.

பினாங்கில்,  இவ்விவகாரம்  பற்றிக்  கருத்துரைத்த  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், தம்மீது  பழிபோடும் WSJ  செய்திக்கு  நஜிப்  பதிலளிக்க  வேண்டும், பதிலளிக்க  முடியவில்லை  என்றால்  பதவி  விலக  வேண்டும்  என்று  கூறினார்

WSJ “பிரபலமான” பத்திரிகை  என்று  குறிப்பிட்ட  டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம்,  அக்குற்றச்சாட்டுகளில்  உண்மை  இல்லையென்றால் நஜிப்  அச்செய்தித்தாளுக்கு  எதிராக  வழக்கு  தொடுத்து  தம்மீது  சுமத்தப்பட்ட  களங்கத்தைப்  போக்கிக்  கொள்ள  வேண்டும்  என்றார்.