முக்ரிஸ்: தகவல்சொல்லிகளிடம் நன்றி பாராட்டுங்கள். சுட்டுத் தள்ளாதீர்

mukகெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர் “தகவல்சொல்லிகளை சுட்டுத் தள்ளாதீர்”  என  அம்னோ  தலைவர்களை  எச்சரித்துள்ளார்.

“சில  தலைவர்களுக்கு  அறிவுரை  பிடிக்காது. அவர்களை  இடித்துரைத்தால்  அப்படிச்  செய்பவர்களைச் சுட்டுத்  தள்ளுவார்கள்”, என  இன்று  கோலாலும்பூரில்  செராஸ்  அம்னோ  தொகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைத்தபோது  முக்ரிஸ்  கூறினார்.

இப்படிப்பட்ட  தலைவர்கள்  தகவல்  சொல்பவர்களை  வேட்டையாடுவார்களே  தவிர  எழுப்பப்பட்ட  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண்பதில்  ஆர்வம்  காட்ட  மாட்டார்கள்.

இது  அச்சப்படும்  கலாச்சாரத்தை  உருவாக்கிவிடும்  என்றவர்  எச்சரித்தார்.

“இது  ஆபத்தானது. இது  தொடர்ந்து  நடந்தால்  மக்கள் வாய்  திறக்கத்   துணிய  மாட்டார்கள்.

“அப்போது  பிரச்னைகள்  எழுந்தால் அவர்கள்(தலைவர்கள்) சொந்தமாகத்தான்  தீர்வு  காண  வேண்டியிருக்கும்(மற்றவர்கள்  உதவ  மாட்டார்கள்)”, என்றார்.

முக்ரிஸ், தம்  தந்தையார்  மகாதிரும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  சச்சரவிட்டுக்  கொண்டிருக்கும்  வேளையில்  இப்படி  ஒரு  கருத்தை  முன்வைத்துள்ளார்.

தாம்  சொல்லும்  எதையும்  நஜிப்  கேட்பதில்லை  என்று  ஆதங்கப்படும்  மகாதிர், 1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்  நஜிப்பைக்  கடுமையாக விமர்சித்து  வருகிறார். நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என்றும்  கோரிக்கை  விடுத்துள்ளார்.