1எம்டிபி விசாரணைக்கு முழுக்கு?…. டிஐ-எம் அப்படித்தான் நினைக்கிறது

satharநாட்டில்  ஏற்பட்டுள்ள  சில  அரசியல்  நடப்புகளைப்  பார்க்கையில்  1எம்டிபி மீதான  விசாரணைகள்  இருக்கிறதா  இல்லையா  என்றே  தெரியவில்லை என்று  கூறும் ட்ரேன்ஸ்பேரன்சி   இண்டர்நேசனல்  மலேசியா (டிஐ-எம்) விசாரணைகளுக்கு  முழுக்குப்  போடப்பட்டு  விட்டதாகவே  தோன்றுகிறது  எனக்  குறிப்பிட்டுள்ளது.

1எம்டிபி  மீது  தனித்தனியே  இரண்டு  விசாரணைக்  குழுக்கள்  அமைக்கப்பட்டன. ஒன்று  நாடாளுமன்ற  உறுப்பினர்களைக்  கொண்ட  பொதுக்  கணக்குக்குழு. மற்றது  போலீஸ்,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆனையம்,  பேங்க் நெகாரா,  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  ஆகியவை  அடங்கிய  சிறப்புப்  பணிக்குழு.

இக்குழுக்களின்  விசாரணைகள்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற  அமைச்சரவை  மாற்றத்தைத்  தொடர்ந்து  கிட்டத்தட்ட  நின்று  போனதாகவே  தெரிகிறது  என டிஐ-எம்  தலைவர்  அக்பார்  சத்தார்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

அதிரடியான  மாற்றங்கள், விசாரணைமீது  சந்தேகம் கொள்ள  வைக்கின்றன.

(1)  விசாரணையில் சம்பந்தப்பட்டிருந்த  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேலை  பதவியிலிருந்து  அகற்றியது,
(2) போலீஸ்  சிறப்புப்  பிரிவுக்கு  முகம்மட்  பூஸி  ஹருன் புதிய  தலைவராக  நியமிக்கப்பட்டது,  புக்கிட்  அமானில்  சிறிய  தீ  விபத்து  ஏற்பட்டு  அதில்  “முக்கியமில்லாத”  ஆவணங்கள்  எரிந்துபோனதாகக்  கூறப்பட்டிருப்பது,

(3) பிஏசி-இன்  13  உறுப்பினர்களில்  அக்குழுவின்  தலைவர்  உள்பட,  நால்வருக்கு  அரசாங்கப்  பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பது

இவற்றையெல்லாம்  மலேசியர்கள்  சந்தேகக்  கண்கொண்டு  பார்க்கிறார்கள்  என்றார்  சத்தார்.

“விசாரணைகள்  நத்தை  வேகத்தில்  நடைபோட்டதையும் பிஏசி-இன்  நடவடிக்கைகள்  நிறுத்தி வைக்கப்பட்டதையும்  ஜூலை  28-இல்  நிகழ்ந்த  பதவிநீக்கங்களையும்  கண்டு   அறிவார்ந்த  மலேசியர்கள்  என்ன    நினைப்பார்கள்?

“1எம்டிபி  விசாரணையைத்  தடுத்து  நிறுத்த  ஒருமுகமான  முயற்சி  நடப்பதாகத்தான்  நினைப்பார்கள்”, என  சத்தார்  கூறினார்.