ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தால் சிரியா, யேமன் பிரச்னைக்கு துரிதத் தீர்வு

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தால், சிரியா, யேமன் நாடுகளில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுவதற்கான வழி ஏற்பட்டுள்ளாக ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி கூறியுள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:

யேமனிலும், சிரியாவிலும் நிகழ்ந்து வரும் உள்நாட்டுச் சண்டைக்கு அரசியல்ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.
வல்லரசு நாடுகளும், ஈரானும் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் அந்தத் தீர்வு உருவாவதைத் துரிதப்படுத்தும்.

அணுசக்தி ஒப்பந்தத்தால் உலக அரசியலில் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய அரசியல் சூழல், யேமன், சிரியா பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதை எளிமையாக்கும் என்றார் அவர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு ஈரான்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் அல்-அஸாதுக்கும், சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில், அல்-அஸாதுக்கு ஆதரவான நிலையை ஈரான் கடைப்பிடிக்கிறது.

யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், சிரியாவில் சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், யேமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில், ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் நிலவி வந்த பகை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளாதால், சிரியா, யேமனிலும் அரசியல் தீர்வு காண்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

-http://www.dinamani.com