நாடு முழுவதும் திருக்குறள் பாடமாக்கப்பட வேண்டும்: தருண் விஜய்

நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில், கங்கைக் கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு மாதிரி சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழச்சியில், கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான மாதிரி சிலையை மாமல்லபுரம் ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் ஆகியோர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜயிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருண் விஜய் பேசியது:

திருவள்ளுவரின் சிலை உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அமைக்கப்பட உள்ளது. அங்கு சிலையுடன் ஆலயம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் அனைத்து திசைகளிலும் திருவள்ளுவர் பெருமை எடுத்துரைக்கப்பட உள்ளது. தமிழர்கள் வீரம், பண்பாடு, கலாசாரம், இலக்கியத்தில் முன்னோடியாக இருந்துள்ளனர். இதை அனைவரிடம் கொண்டுசெல்லும் விதமாக திருவள்ளுவர், பாரதியார், வேலு நாச்சியார், ராஜராஜ சோழன் உள்ளிட்டோரின் பெருமைகள், வீரம் ஆகியவை பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதில் உயர்ந்து நிற்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து உலக மக்களைக் கவர்வதாக திருக்குறள் உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை, கங்கைக் கரையில் திருவள்ளுவருக்கு ஆலயம் நிறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்: அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கும் நூலாக திருக்குறள் தழைத்தோங்குகிறது. 1,330 குறள்களை மனித இனத்துக்கு அளித்த வள்ளுவர், தான் யார் என்ற அடையாளத்தைச் சொல்லாமல் விட்டுச் சென்றுள்ளார்.

திருக்குறள் அறிவுரை மட்டும் கூறாமல் அதற்கான தீர்வையும் கூறுகிறது. இதுவே திருவள்ளுவரின் தனிச் சிறப்பாக உள்ளது.

சுப்பிரமணிய பாரதி கம்பனை மனிதனாகவும், இளங்கோவை சேரனின் சகோதரன் என்று கூறிவிட்டு, வள்ளுவரை தெய்வம் என்ற அடைமொழியுடன் நிலைநிறுத்தியுள்ளார். மேலும், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’, “தெய்வ வள்ளுவம் வான்மறை தந்தது’ என்று வள்ளுவரை தெய்வமாகவே வழிபட்டுள்ளார்.

இதேபோல, வள்ளுவரின் “யாதெனின்..’ என்று தொடங்கும் குறளையும், “வகுத்தான்…’ எனத் தொடங்கும் குறளையும் கடைப்பிடித்தால் அனைவரும் ஆனந்தமாக வாழலாம். அந்தக் குறள்கள், ஆனந்த வாழ்வுக்கான தத்துவத்தைக் கொண்டுள்ளன என்றார்.

-http://www.dinamani.com

TAGS: